பக்கத்து வீடு: 4 ஒட்டகங்கள்... 9 மாதங்கள்... ஆளற்ற பாலைவனம் | அமைதியைத் தேடி ஒரு பயணம்

பக்கத்து வீடு: 4 ஒட்டகங்கள்... 9 மாதங்கள்... ஆளற்ற பாலைவனம் | அமைதியைத் தேடி ஒரு பயணம்
Updated on
3 min read

மனிதர்கள் பிற மனிதர்களைப் பார்க்காவண்ணம் கோவிட் பெருந்தொற்று முடக்கியிருந்தது. இது போன்ற ஓர் அனுபவத்தை உலகின் பெரும்பான்மையான மக்கள் அப்போதுதான் சந்தித்தார்கள். ஆனால், 1977ஆம் ஆண்டே 9 மாதங்கள் உலகத்திடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார் ராபின் டேவிட்சன். யார் இவர்? எதற்காக இந்தத் தனிமைப்படுத்தல்?

ஆஸ்திரேலியாவில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த ராபின் டேவிட்சன், 12 வயதில் தன் தாயை இழந்தார். அத்தைகளின் பொறுப்பில் வளர்ந்தவர், 16 வயதில் வீட்டைவிட்டு வெளியேறி, பல்வேறு வேலை களைச் செய்துகொண்டு வாழ்க்கையை நடத்தினார். ஒட்டகங்களைப் பராமரிக்கும் வேலையைப் பார்த்தபோது, ஒட்டகங்கள் குறித்தும் அவற்றை எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்தும் அறிந்துகொண்டார். ஆனாலும் ‘நான் திறமையற்றவள், யாருக்கும் பயனற்றவள், எதிலும் வெற்றிபெற இயலாதவள்’ என்கிற எண்ணம் ராபினை மன அழுத்தத்தில் தள்ளியது. அதிலிருந்து வெளிவரவும் தனக்கே தன்னை நிரூபித்துக்கொள்ளவும் ஒட்டகங் களுடன் ஆஸ்திரேலியப் பாலைவனங்களைக் கடக்கும் முடிவை எடுத்தார்.

பாலைவனப் பயணம்

27 வயதில் நான்கு ஒட்டங்கள், ஒரு நாயுடன் தன் பயணத்தைத் தொடங்கினார். செலவுக்கான பணம் மட்டும் இல்லை. அப்போது ரிக் ஸ்மோலன் என்கிற ஒளிப்படக்காரர், நேஷனல் ஜியோகிரபிக் பத்திரிகையில் பயணக் கட்டுரைகளை எழுதிக் கொடுப்பதாகச் சொன்னால் முன்கூட்டியே பணம் கொடுப்பார்கள், பயணத்துக்கு உதவியாக இருக்கும் என்றார். அதுவரை பயண எழுத்து பற்றிய சிந்தனை எதுவும் இல்லாத ராபின், பணத் துக்காக எழுத ஒப்புக்கொண்டார். அதனால், அவரது பொருளாதாரப் பிரச்சினையும் தீர்ந்தது.
ஒட்டகங்களைக் கையாள்வதில் அவருக்குச் சிக்கல் இல்லையென்றாலும் நான்கு ஒட்டகங்களைச் சமாளிப்பதும் பராமரிப்பதும் அவருக்குக் கடினமாக இருந்தன. பகலில் பாலைவனத்தில் கொடிய வெப்பம் வதைக்கும் என்றால், இரவில் கடுங்குளிர் நடுக்கும். சூரியனுக்குக் கீழும் நட்சத்திரங்களுக்கு அடியிலும் வாழ்வதற்குப் பழகிக்கொண்டார். நாள்கணக்கில் தண்ணீரும் உணவும் கிடைக்காது. வாரக்கணக்கில் மனிதர்களே தட்டுப்பட மாட்டார்கள். உயிருக்கே ஆபத்து வரும் சூழலில் தன்னைக் காத்துக்கொள்ள சில விலங்குகளைக் கொன்றார். அதனால், சில நாள்கள் உறக்கத்தைத் தொலைத்தார். நடந்து நடந்து அலுப்பில் உறக்கம் வந்தாலும் பாம்பு உள்படப் பாலைவன விலங்குகள், யார் இந்த விருந்தாளி என்று எட்டிப்பார்த்துவிட்டுப் போகும். இப்படிப் பல பிரச்சினைகள் இருந்தாலும், தன்னால் பிறர் உதவியின்றித் தனியாகப் பாலைவனத்தில் வாழ்க்கையை நடத்த முடிகிறது என்கிற எண்ணம் மன அழுத்தத்திலிருந்து அவர் வெளிவர உதவியது.

ஆலிஸ் ஸ்பிரிங்ஸில் ஆரம்பித்து மத்திய ஆஸ்திரேலியாவைக் கடந்து, இந்தியப் பெருங் கடலை ராபின் அடைந்தபோது 9 மாதங்கள் நிறைவடைந்திருந்தன. 1,700 மைல்களை அவர் கடந்திருந்தார்! ஊடகங்கள் ‘ஒட்டகப் பெண்’ என்று தலைப்பிட்டு ராபினைக் கொண்டாடித் தீர்த்தன. அவருடைய அனுபவங்கள் நேஷனல் ஜியோகிரபிக் பத்திரிகையில் கட்டுரைகளாக வெளிவந்தன. 1980ஆம் ஆண்டு ‘டிராக்ஸ்’ என்கிற பெயரில் அது புத்தகமாகவும் வெளிவந்தது. இன்றளவும் பயணப் புத்தகங்களில் முக்கியமான புத்தகங்களில் ஒன்றாக இருக்கிறது. 2014ஆம் ஆண்டு அதே பெயரில் ஒரு திரைப்படமும் வெளிவந்தது.

ஏன் இந்தப் பயணம்?

கடந்த ஆண்டு ராபின் எழுதிய ‘அன்ஃபினிஷ்டு வுமன்’ என்கிற வாழ்க்கை வரலாறுதான், அவர் ஏன் இந்தக் கடினமான பாலைவனப் பயணத்தை மேற்கொண்டார் என்கிற காரணத்தை வெளிப்படுத்தி யிருக்கிறது.

என்னதான் கடந்த காலத்தின் மீது சிமென்ட் கொண்டு மூடிவைத்தாலும் அதற்கு அடியில் அது உயிர்ப்புடன்தான் இருந்துகொண் டிருந்தது. மீண்டும் மன அழுத்தத்துக்குச் சென்ற ராபின், தன் வலிகளை எழுதிக் கடக்க நினைத்தார். அது அந்தப் பாலைவனப் பயணத்தைவிட மிகக் கடினமாக இருந்தது. 25 ஆண்டுகளுக்குப் பிறகே எழுதி முடிக்கப்பட்டு அந்தப் புத்தகம் வெளிவந்திருக்கிறது.

ஒருநாள் காலை ராபின் பள்ளிக்குக் கிளம்பியபோது அவர் அம்மா அழைத்தார். “நன்றாகச் சாப்பிட வேண்டும். நன்றாகப் படிக்க வேண்டும். எல்லாரிடமும் அன்பாக நடந்துகொள்ள வேண்டும்” என்று சொல்லிவிட்டு, ராபினுக்கு முத்தம் கொடுத்து அனுப்பிவைத்தார். அன்று மாலை ராபின் வீடு திரும்பியபோது, அம்மா உயிருடன் இல்லை. தற்கொலை செய்துகொண்டார். அந்தக் காலத்தில் தற்கொலை மரணம் என்றால் துக்கம் கேட்பதற்குக்கூட யாரும் வர மாட்டார்கள். மரணம் பற்றிய கட்டுக்கதைகள் ராபினைப் பயமுறுத்தின. அவர் இயல்பான மனநிலையை இழந்தார். அந்தக் காயமும் வலியும்தான் அவரைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு பாலைவனப் பயணத்தை மேற்கொள்ள வைத்தன.

“இந்தியாவின் ராஜஸ்தானிலும் சில ஆண்டுகள் வசித்தேன். ஆனால், அங்கே ஒட்டகங்களின் மேல் பட்டுத்துணியெல்லாம் போட்டு அலங்காரம் செய்திருந்தார்கள். பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் என்னுடைய ஒட்டகங்களைப் போல் அவை என்னை வசீகரிக்கவில்லை.

ஒட்டகங்கள் எனக்குப் பிடிக்கும் என்றாலும் ‘ஒட்டகப் பெண்’ என்று என்னை அழைப்பதை நான் விரும்பவில்லை. அடுத்து என்ன என்று கேட்கிறார்கள். 73 வயதாகிவிட்டது. மீண்டும் என்னைப் பற்றி எழுதும் திட்டம் எதுவும் இல்லை. மெல்பர்னுக்கு வெளியே தோட்டத்துடன் கூடிய வீட்டில், ஐந்து நிமிடங்களில் காபி போட்டுக்கொண்டு, நினைத்தவுடன் கங்காருகளைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். அதைச் செய்துவிட்டேன்” எனும் ராபின் டேவிட்சனுக்கு தற்போதாவது மன அமைதி நிரந்தரமாகட்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in