பெண் திரை: தன்னைத் தொலைக்க விரும்பாதவள்
கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்ததும், ஷைலஜாவின் கணவன் விபூதி எடுத்து அவளின் பால்ய கால நண்பனிடம் தருவான்.
“இல்லை போதும். ஷைலஜாவுக்குத் தாங்க” என நண்பன் சொல்ல, “இல்லை. அவளுக்கு இதில் நம்பிக்கை இல்லை. அவள் கடவுள் நம்பிக்கையற்றவள்” என்பார் ஷைலஜாவின் கணவர்.
“ஓ அப்படியா? எனக்குத் தெரியாது” என்று நண்பன் சொல்ல, “உங்களுக்குத் தெரியாத ஒன்று ஷைலஜா பற்றி எனக்குத் தெரிந்திருக்கிறது” எனச் சிரித்தபடி சொல்வார் ஷைலஜாவின் கணவர்.
ஒரு நிமிடம் அமைதி நிலவும்
அண்மையில் வெளிவந்த ’Three of us’ இந்திப் படத்தில் வரும் காட்சி இது.
அவினாஷ் அருண் இயக்கத்தில் வெளியான இப்படம், மறதி நோயால் பாதிக்கப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் அன்றாட வேலைகளை மறக்கத் தொடங்கும் 42 வயதுப் பெண்ணைப் பற்றிய படம். இது தன் பால்யத்தைக் கழித்த இடத்துக்குப் பயணப்படும் ஷைலஜாவின் அகத்தைப் பேசுகிறது. கணவனுடன் கொங்கனக் கடற்கரையோர நகரத்துக்குச் செல்கிறாள். தான் படித்த பள்ளி, வாழ்ந்த வீடு, தன் தங்கை மரணித்த கிணறு எனத் தன் ஞாபகத்தில் அழிந்துகொண்டிருக்கும் பக்கங்களைத் தன் பால்யகால நண்பனுடன் திரும்பிப் பார்க்கிறாள்.
மகிழ்ச்சி ததும்பும் இந்த முகம் அவள் கணவன் அறியாதது. இந்தக் கொங்கன வாழ்வு பற்றி தன்னுடனான 18 வருடத் திருமண வாழ்வில் அவள் பேசாதது அவனுக்கு ஆச்சரியமாக இருக்கும்.
மேலே உள்ள உரையாடல் அந்தப் புள்ளியில் இருந்துதான் தொடங்கும். கணவன் - மனைவி உறவு என்பது வெறும் உடல், மனம் சார்ந்தது மட்டுமா? அன்றாடங்களில்கூட இருப்பதா?
அது ஒருவரின் சுகம், துக்கம், பலவீனம், சந்தோஷம் எனப் பிறர் அறியாத அல்லது மறைக்கப்பட்ட பக்கத்தை ஒருவன் / ஒருத்திக்கு மட்டும் அறியக்கொடுப்பதுதானே? அது தொந்தரவுக்குள்ளாகும் இடத்தில் ஷைலஜாவின் கணவனும் தொந்தரவுக்கு ஆளாகிறான்.
எது உரிமை?
அந்த ஒருவர் கணவனுக்கு மனைவி யாகவும் மனைவிக்குக் கணவனாகவும் இருப்பதுதானே உள்ளார்ந்த உரிமை. வெறும் புற உடல் சார்ந்த உரிமையில் என்ன இருக்கப்போகிறது? ஆனால், நம் கலாச்சாரம் பெண்ணின் உடல் மீதான கணவனின் உரிமையைப் பற்றிக் கவலைப்படும் அளவுக்கு அவளுடைய மனம் சார்ந்து கவலைப்படுவதில்லை. கலாச்சாரப் போலிகள் நாம். உடல் சார்ந்து யாரிடம் நெருக்கமாக இருக்கிறோம் என்பதையா பெண் மனம் பார்க்கும்? காதலில் சரணடைதல் என்பது ஒளித்துவைத்துள்ள தன்னை எந்தத் தயக்கமும் இன்றி விரும்பியவருக்குத் தருவதுதானே!
தன்னை ஒளித்துவைத்திருந்த ஷைலஜா, தன்னை மீண்டும் தேடிக் கண்டுபிடிக்க அந்த இடமோ வீடோ தன் பால்யகால நண்பனோ ஏதோவொன்று தேவைப்பட்டதுபோல. இப்படத்தில் ஷைலஜாவின் கணவன், ஷைலஜாவின் பால்யம் ஏன் தனக்குத் தெரியவில்லை; அவள் வாழ்ந்த இந்த இடம் பற்றிய மகிழ்ச்சியை ஏன் தன்னிடம் சொல்லவில்லை என்றே கவலைப்படுகிறான்.
இன்னும் சொல்லப்போனால், அவளுடைய தங்கையின் மரணம் அவளுக்குள் ஏற்படுத்திய வெற்றிடத்தை அவள் கணவனுக்கோ பால்யகால நண்பனுக்கோகூட அவள் வெளிப்படுத்த வில்லை.
அவள் மனம் அந்தக் கிணறு போல எல்லாவற்றையும் முழுங்கியபடியே இருக்கிறது. பெண்ணின், அதுவும் திருமணமான பெண்ணின் அக உணர்வுகளை அவ்வளவு எளிதில் வெளிப்படுத்திவிட முடியுமா என்ன?
இளமைக்குத் திரும்பும் துணிவு
திருமணமான பிறகு தன் இளமைக்கால விருப்பங்களைக் கைவிட்டு மனைவி, அம்மா எனப் பல பொறுப்புகளில் தங்களைத் தொலைத்து விடுவதையும் அதை மீட்டு எடுக்க முடியாதபடி தத்தளித்துத் தடுமாறுவதையும் எல்லாப் பெண்களும் ஒருகட்டத்தில் உணர்கிறார்கள். சிலர் அதில் இருந்து மீள்கிறார்கள். சிலர் இவ்வளவுதானா என ஒடுங்கிவிடுகிறார்கள்.
ஷைலஜா, அவள் கணவன், அவளுடைய நண்பன் ஆகியோரை மட்டுமே ’Three of us’ படத் தலைப்பு குறிப்பிடுகிறது. ஆனால், இதில் வரும் நான்காவது நபரான அந்த நண்பனின் மனைவியும் முக்கியமானவர். பல வருடங்களாகக் கவிதை எழுதாதவன் கவிதை எழுதுவதைக் கவனிப்பது, அவன் தோழியுடன் ஊரைச் சுற்ற அனுமதிப்பது, அதைப் பற்றித் தன்னிடம் சொல்ல வேண்டும் எனக் கேட்பது, தலைமுடிக்குச் சாயம் பூசுவதையே தள்ளிப்போடும் தனக்கு ஷைலஜாவின் பயணம் உண்டாக்கிய ஆச்சரியத்தைப் பகிர்வது எனப் புதிய பரிணாமத்தைக் காட்டுவார்.
எதையும் ஆர்ப்பாட்டமாகச் சொல்லாமல் திருமணம், ஆண்-பெண் உறவு, அன்றாடங்களில் தொலையும் பெண் வாழ்வு, தங்கையின் மரணம் எனப் படம் ஆற்றின் அடியில் கிடக்கும் கூழாங்கற்களை நீர் தழுவிச் செல்வதைப் போல நம்மைத் தழுவிச் செல்கிறது.
ஓர் இடத்தில் ஷைலஜா தன் தங்கையின் மரணத்தைப் பற்றி யாரும் சந்திக்க விரும்பாத பெண்ணிடம் சொல்வாள். அக்காட்சியின் பின்னணியில் கேட்கும் கடலின் ஓசை அவள் மனதைத் துல்லியமாகக் காட்டும். ஷைலஜாவைப் போல நம் இளமைக்கால உலகில் நுழைந்து பார்க்கும் துணிவு நமக்கு இருக்கிறதா?
கட்டுரையாளர், சிறார் எழுத்தாளர்.
