

சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் கட்டுரையாளராகவும் பதிப்பாளராகவும் (வம்சி) அறியப்பட்டுள்ள கே.வி.ஷைலஜாவின் முதல் நாவல் ‘சஹிதா’. இந்நாவலின் களம் இதுவரை படைக்கப்பட்ட இஸ்லாமிய வாழ்க்கைச் சித்தரிப்புகளிலிருந்து விலகி முற்றிலும் வேறுபட்ட தளத்தில் அமைந்துள்ளது.
நாவல் முழுவதும் சஹிதாவின் பார்வையில் சொல்லப்பட்டாலும் இது பெண்ணிய நாவல் அல்ல. ஆன்மிகத் தேடலும் அல்ல. தன் சுயத்தை அறிந்துகொண்ட பெண், தான் என்னவாக வேண்டும் என விரும்புகிறாளோ அதை அடையத் தொடர்ந்து தளர்வின்றி பயணிப்பதே இந்நாவலின் சிறப்பு.
சிறுவயதில் கேரளத்தில் தன் தோழி வீட்டில் பார்த்த கிருஷ்ணன் விக்ரகம் சஹிதாவின் மனதில் ஆழமான பாதிப்பை உருவாக்குகிறது. அவளால் கிருஷ்ணனுடன் மானசீகமாக எளிதாக உரையாட முடிகிறது. கிருஷ்ண னின் கானம் அவள் காதில் ஒலித்துக் கொண்டேயிருக் கிறது. கண்ணன் - மீராவுக்கு இடையேயான பந்தம்போல் அவளுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையே அத்தகையதொரு பந்தத்தை உருவகித்துக் கொள்கிறாள். அதுவே அவளைப் பின்னாள்களில் ஆன்மிக நகரமான திருவண்ணா மலையை நோக்கி நகர்த்துகிறது. அந்தச் சூழல், உலகமே தன் வீடு என உணரச் செய்கிறது.
சிறுவயதிலேயே ஆன்மிகத்தின்பால் ஈர்க்கப்பட்டாலும் திருமணத்துக்குப் பின் சென்னையில் வசிக்கையில் அவ்வெண் ணம் தீவிரமடைகிறது. சரியாகப் புரிந்து கொண்ட கணவன், அன்பான மகள், ஓரளவுக்குத் தன் மன ஓட்டத்தை அறிந்துகொண்ட தங்கை, தோழிகள் என அவளுடைய உறவுகள் அமைந்திருப்பினும் ஏதோ ஒன்றை இழந்ததாக அமைதியற்றே இருக்கிறது அவளது மனம். தன் சுயம் சார்ந்த தேடலில், தன் வாழ்வின் அர்த்தத்தை அறிந்துகொள்ளும் மனப் போராட்டத்தில் சுழல்கிறது. அவள் சிந்தனை எல்லாம் குழந்தைகளுக்குச் சேவை செய்வதையே முதன்மையாகக் கொள்கிறது.
ஆதி எனும் பின்லாந்தைச் சேர்ந்த ஹிசக்கியேல் ஒலைவி பாவலோயனின் சந்திப்புக்குப் பின், ஆட்டிசத்தால் பாதிக்கப் பட்ட குழந்தைகளுக்குச் செய்யும் சேவையே இவ்வாழ்வின் அர்த்தம்என உணர்கிறாள். தான் என்னவாக வேண்டும் என எண்ணுகிறோமோ அதற்குப் பக்கத் துணையாக ஆதி இருப்பான் என உள்ளுணர் கிறாள். அதுவே சஹிதாவை வீட்டை விட்டு வெளியேறுதல் என்கிற முடிவுக்குக் கொண்டுவந்து சேர்க்கிறது.
சஹிதா வீட்டை விட்டுப் போவது என்று எடுத்த முடிவு ஒரு நொடியில் அவசரப்பட்டு எடுத்த முடிவல்ல. சிறுவயதிலிருந்தே உருவான தீவிரமான தேடலின் விளைவு. அதை நோக்கியே அவளது பயணம் அமைகிறது. அவளு டைய ஆசைகளை அடக்கிக் குடும்பத்துக்காக, தன் பிள்ளைக்காகத் தன்னுடன் அவள் வாழவேண்டும் என ஒரு பக்கம் எண்ணினாலும் சஹிதாவின் மனவோட்டமும் வேட்கையும் சிறு வட்டத்தில் வாழ்வைக் கழிப்பதற்குப் பிறந்தவளல்ல அவள், மாறாக இப்பிரபஞ்சம் முழுமைக்கும் உடையவள் அவள் என அவளுடைய கணவன் அறிந்துகொள்கிறான்.
தமக்கை, தோழிகள், நண்பர்கள் கனத்த மனதுடன் அதேநேரம் நிறைவுடன் வழியனுப்ப ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உலகில் தன்னை ஒப்புக்கொடுக்க ஆதியுடன் பயணப்படுகிறாள் சஹிதா. இதுபோன்ற படைப்புகள் பெண்களின் உலகத்தைப் பிரதிபலிப்பதோடு வாழ்க்கை யின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கின்றன.
- ஜெ.ஜெயந்தி.