திருநம்பியும் திருநங்கையும் 17: கலைக்குப் பாலின பேதம் இல்லை

திருநம்பியும் திருநங்கையும் 17: கலைக்குப் பாலின பேதம் இல்லை
Updated on
3 min read

அரங்கேற்றம் அருமையாக நடந்தேறியது. இப்படி ஒரு மேடையில் இவ்வளவு கூட்டத்தின் நடுவே 11 இளம்பெண்களின் பரத நாட்டிய அரங்கேற்ற விழா நடக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

20 வருடப் போராட்டம் இந்த அரங்கேற் றத்தை நடத்தி முடிக்கத் தேவைப்பட்டது. கற்றுத்தர நான் உண்டு. நட்டுவாங்கத்துக்கு ஆள் உண்டு. அரங்கேற்றம் செய்ய மேடையும் தயார். ஆனால், கற்றுக்கொள்ள மாணவர்கள் வருவார்களா என நான் எவ்வளவு காலம் வாசலைப் பார்த்ததுண்டு தெரியுமா?

“பரதம் கத்துக்க ஆசைப்படலாம். ஆனால், உன் பேச்சு, நடை எல்லாம் வித்தியாசமா இருக்கே.”

“ஒருவேளை உனக்குள் இருக்கும் பெண்மை தான் உன்னைப் பரதம் கத்துக்கத் தூண்டுதோ?”

“இதுவெல்லாம் பரதம் கத்துக்கிட்டு என்னத்த சாதிக்கப் போகுது?”

- இப்படி எத்தனையோ விமர்சனங்கள்.

நான் பரதம் பயின்றுவந்த வகுப்புல பசங்க கொஞ்ச நாளுல சொல்லாம நின்னுடுவாங்க. ‘அலாரிப்பு’ கத்துக்குறதுக்குள்ள ஆள் காணாம போயிடுவாங்க. நான் அங்க வகுப்புல இருக்குறது அவங்களுக்குப் பிடிக்கலைன்னு அப்புறமாதான் எனக்குத் தெரிஞ்சுது.

ஆனா, என் பள்ளியில எனக்குத்தான் முதல்ல அரங்கேற்றம் நடந்தது. நான் ஒவ்வொரு அடவையும் சீக்கிரம் கத்துக்கிட்டேன். என்னை மாதிரி ஒரே வருடத்துல அதிக ‘உருப்படி’களைக் கத்துக்கிட்டது யாருமில்லை. மாஸ்டர் எப்பவும் எனக்கு சப்போர்ட். ஒருநாளும் என்னை அவர் கண்டிச்சதில்லை.

“இது கண்டிக்கிற விஷயம் இல்லை லயா. இது உனது பிறப்பு. நான் சிவனை வணங்குகிறேன். உன்னை நான் ஒதுக்கினால் சிவசக்தியை ஒதுக்கியதற்குச் சமம். யார் என் வகுப்பை விட்டுப் போனாலும் சரி, நீ கவலைப்படாதே” என்பார்.

நான் வகுப்பில் இணைந்த மூன்றாம் வாரமே எனக்குச் சலங்கை பூஜை போட்டார்கள். இதற்கு என் சக மாணவர்கள் என் ஆசிரியரிடம் கோபப்பட்டதுகூட எனக்கு நினைவிருக்கிறது.

எங்க மாஸ்டர்தான் எனக்குச் சிவபெருமானாகத் தோன்றினார். அவர் கொடுத்த ஊக்கமே இரண்டு வருடங்களிலேயே நான் ஒரு மார்க்கம் முழுவதும் கற்று அரங்கேற்றமே பண்ண முடிஞ்சுது. இன்று நான் ஆசிரியையாக 11 மாணவர்களுக்கு அரங்கேற்றம் முடிக்கிறேன்.

என் அரங்கேற்றம் நடந்தபோது வந்திருந்த விருந்தினர்களில் சிலர் முகம் சுளித்ததையும் நான் ஆடியபடியே கவனித்தேன். எனக்குப் பரதம் கற்றுத்தந்த என் குரு, அவருக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்துக் கவலைப்படவில்லை என்பதே என் வெற்றிக்குக் காரணம்.

நான் பரதம் கற்று முடித்தபோது எங்கள் ஏரியா பிள்ளையார் கோயில் பிரதிஷ்டை நிகழ்ச்சியில் ஆட வாய்ப்பு கேட்டேன். அவர்கள் பலமாகச் சிரித்து வெளியே அனுப்பிவிட்டனர். எங்கள் பகுதியில் உள்ள மக்களின் முன்னிலையில் ஆடவேண்டும் என நான் ஏங்கிய காலத்தை என்னால் மறக்க முடியவில்லை.

கன்னியாகுமரியில் அந்த அம்மனின் மூக்குத்திக்கான வரலாறையே நான் அபிநயத்தில் கூறிவிடுவேன். அது மட்டுமா... தஞ்சைப் பெரியகோயில், தியாகராஜ பாகவதரின் ஆலாபனைகள், திருவொற்றியூர் வடிவுடையின் அழகை வர்ணிப்பது, கிருஷ்ண லீலைகளை முக பாவனைகளில் கொண்டு வருவது எனக் கற்றதை எனது வீட்டின் நான்கு சுவருக்குள் எவ்வளவு காலம் ஆடுவது?

இந்தக் கலையைக் கற்க ஏங்கும் மக்களுக்குக் கட்டணமில்லாமல் கற்றுத்தரப் போறேன்னு நான் சொன்னதும் எங்க மாஸ்டர் ரொம்ப சந்தோஷப்பட்டார்.

“இவ்வளவு நாள்கள் இந்தப் பள்ளியை நடத்தும் எனக்கு இது தோணலையே” என ஆதங்கத்துடன் என்னிடம் கூறினார்.

20 மாணவர்கள் வரை பயிற்சி பெறும் அளவுக்கு எனக்கு ஒரு பள்ளியை வாடகைக்கு எடுத்து பிரம்மாண்டமாகத் தொடங்கிவைத்து என்னை ஆசிரியர் ஆக்கினார் என் மாஸ்டர்.

“நாங்கள் ரெண்டு மணி நேரமா எங்க குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கக் காத்துக்கிட்டு இருக்கோம். மாஸ்டர் எப்போ வருவார்?”

என் பணியாளர் என்னைக் காண்பித்து, “இதோ வராரு பாருங்க” என்றார்.

இரண்டு மணிநேரம் காத்திருந்தவங்க என்னைப் பார்த்தவுடன் இரண்டு நிமிடத்தில் என்னிடம் வேறு ஏதேதோ பேசிவிட்டு நழுவிவிடுவர்.

இது எனக்குப் பழக்கப்பட்டுவிட்டது. என் உதவியாளருக்கும்தான்.

நான் நிகழ்ச்சி நடத்தப் போகும் இடங்களில் என் நாட்டியத்தைப் பார்ப்பவர்களின் குழந்தைகள், முற்போக்குச் சிந்தனை கொண்டவர்களின் பிள்ளைகள் என என்னிடம் இத்தனை வருடக் காலத்தில் பரதம் கற்றுக்கொண்டவர்கள் இந்த 11 பிள்ளைகள் மட்டும்தான்.

நான் ஆணுடையில் இருந்து பெண்ணுடைக்கு மாறும் பருவம் என்னை இந்தக் கலையில் இருந்து தூரமாகக் கொண்டு சென்றது. அப்போதும் என் மாஸ்டர் என்னைக் கையைப் பிடித்து முன்னே நிற்க வைப்பார்.

எனக்கு ரப்பர் பேண்ட் போடும் அளவிற்கு முடி வளரவில்லை. பரட்டையாக இருக்கும் அந்த நேரத்தில் பொது இடத்துக்கு வருவதற்குக் கூச்சமாக இருந்தது. முகத்தில் லேசர் சிகிச்சை செய்யும் காலத்தில் மேக்கப் போட கஷ்டமாக இருக்கும். அப்படிப் போட்டாலும் அது அழகாக இருக்காது. அந்தக் காலத்தில் என்னை எத்தனையோ பேர் சொறிமூஞ்சி எனக் கேலி பேசியதுண்டு.

இதற்கெல்லாம் மேலாக நான் எனது பாலின உறுதி சிகிச்சைகளை மேற்கொண்டபோது நிறைய நாள்கள் ஓய்வு தேவைப்பட்டது. அப்போதெல்லாம் நான் எனது காலைத் தூக்கி ஆடும் வலிமையைச் சீக்கிரம் கொடு சிவனே என்று தினமும் வேண்டியதுண்டு.

இவற்றை எல்லாம் தாண்டி “மாஸ்டர் லயா அம்மா, நீங்க எங்கள் குழந்தைகளை இவ்ளோ சீக்கிரம் அரங்கேற்றம் பண்ண வச்சது எங்களின் பாக்கியம்” என்று சில பெற்றோர் மேடையில் பேசிய போது அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது.

(தொடரும்)

கட்டுரையாளர், திருநர் செயற்பாட்டாளர்.

-----

கதையல்ல நிஜம்

* கலைக்கும் பாலினத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ‘பாவம்’, ராகம், தாளம் மூன்றையும் உள்ளடக்கிய பரதம் திருநங்கைகளுக்குப் பிடித்த கலை.

* பரதக்கலையில் நல்ல பெயர் எடுத்து, மிக உயரிய விருதுகளைப் பெற்று, தமிழக அரசின் மாநிலத் திட்டக் குழுவில் உள்ளவர் திருநங்கை நர்த்தகி நடராஜ் என்பது அனைவருக்கும் பெருமை.

* தூத்துக்குடி பரதக் கலைஞர்களான திருநங்கை பொன்னியும் அஞ்சலியும் வசதி குறைந்த, ஆர்வமுள்ள குழந்தைகளுக்குக் கட்டணமில்லாமல் பரதம் கற்றுத் தருகின்றனர். திருநங்கைகள் லக்‌ஷயா, ராஜகுமாரி, வனிதா ஆகியோரின் நாட்டியத்தைக் காண கண்கோடி வேண்டும்.

* கேரளத்தைச் சேர்ந்த ‘ஸ்ரீசத்ய சாய் ஆதரவற்றோர் அறக்கட்டளை’ சென்னையில் திருநங்கைகளுக்காகக் கட்டணமில்லாப் பரதப் பள்ளி ஒன்றை நடத்திவருகிறது. நடனத்தில் ஆர்வமுள்ள திருநங்கைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவும் பணியை ‘சகோதரன்’ அமைப்பு செய்கிறது.

* பிரபலமான கோயில்களில் மார்கழி உற்சவங்களில் திருநங்கைக் கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கிட வேண்டும் என்பதே வளர்ந்துவரும் இளம் தாரகைகளின் ஏக்கமாக உள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in