

இலக்கியக் குழு ஒன்றில் யாரோ ஒருவர், ‘இலக்கிய விலைமாதுகளுக்கு எழுத்து ஒரு போர்வை’ என்னும் தலைப்பில் எழுதியிருந்ததை வாசித்துப் பல நாள்கள் ஆன பிறகும் அக்கட்டுரையின் மீதான எண்ணம் மனதை விட்டுப் போகவே இல்லை. ஆண் எழுத்து, பெண் எழுத்து என்கிற பிரிவினைகள் இல்லாத போதிலும் பெண்களின் எழுத்தை வைத்து அவளை விலைமாது (கொஞ்சம் நாகரிகம் கருதி இப்படி எழுதுகிறேன்.. அந்த எழுத்தோ கொச்சையாகவே இருந்தது) என்பது எவ்வளவு கீழ்த்தரமான சிந்தனை.
ஆசைக்கும் நுகர்வுக்கும் அடிமையாகத் தன்னைப் பலிகேட்கும் பலிபீடங்களைப் பெண்கள் உடைத்தெறிந்துகொண்டே வருகிறார்கள். தன்னை வெறும் ஒரு உடல் என்று கடந்து போகும் ஆதிக்க மனோபாவத்தை மிதித்து, தான் சக மனுஷியென உலகுக்கு எடுத்துச் சொல்லிக்கொண்டே இருக்கிறாள் பெண். அதை எழுதத் தொடங்கியும் காலங்கள் ஆகிவிட்டன. ஆனால், சமூகத்தோடு தன் ஆற்றலால் உரசிக்கொள்ளும் பெண்களை அவ்வளவு எளிதில் இவ்வுலகம் கரம் நீட்டி வரவேற்பதில்லை. பெண்களை அடித்து வீழ்த்த எடுத்துக்கொள்ளும் வலிமையான ஆயுதம், அவமானப்படுத்தி அவளை ஒடுக்குவதாகவே இருக்கிறது. உடலை அவமானப்படுத்தினால் பின் அவள் எழும்பிவர முடியாது என்று அவமானச் சிலுவையை வசை மொழிகளால் செய்து, விமர்சன ஆணிகளால் அறைகிறார்கள். இதை நான் புதிதாகப் பார்க்கவில்லை. இந்த அவமானக் குருதியைச் சிந்தாமல் சமூகத்தில் எந்தப் பெண்ணும் வந்திருக்க முடியாது.
பாலியியல் தொழிலாளியும் பின்னாளில் எழுத்தாளாராகப் பரிணமித்தவருமன நளினி ஜமிலாவைச் சந்தித்துப் பேசும் சூழல் அமைந்தது. அன்பின் தேடலில் ஆரம்பமான வாழ்க்கை பல நூறு வாடிக்கையாளர்களைச் சந்திக்கும் அளவுக்கு அவரைப் பாலியல் தொழிலாளியாக மாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். காசுதான் சகலமும் என்று வாழ்க்கை நெரித்தபோது ஆணாதிக்கத்தால் கட்டமைக்கப்பட்ட உலகம் அவரைப் பாலியியல் தொழிலுக்குள் கொண்டு சேர்த்தது.
“எங்களையெல்லாம் பாவிகள் எனப் பகலில் சொல்லும் ஒவ்வொருவனும் இருட்டில் எங்களைத் தேடி வருகிறவர்கள்” என்று அவர் வெறுமையாகச் சிரித்தார். தன் உடலை, தன் பேராற்றலை வல்லமையோடு எடுத்தியம்பும் படைப்பாளிகளையும் விலைமாதுக்கள் என விமர்சிக்கும் அந்தக் கட்டுரையை ஆழமாக வாசிக்கையில் நளினி ஜமிலா குறிப்பிட்டதுபோல் இருக்கட்டுமே அந்த இடமென்று நினைத்துக்கொண்டேன்.
சுதந்திரமான எழுத்தும், பேச்சும், ஆண் என்கிற மேட்டிமையை விட்டொழிந்த நிமிர்வும் அந்த நபரை ‘இலக்கிய விலைமாதுக்கள்’ என்று எழுதத் தூண்டியிருக்கலாம். இலக்கியம் தெரிந்த ஆண் மனங்களே இப்படியெல்லாம் எழுதும்போது சாதாரண மனநிலையாளர்கள் இலக்கியத்தில் புழங்கும் பெண்களை எப்படி அணுகுவார்கள்?
தூக்கியெறியப்பட்டு, விமர்சிக்கப்பட்டு, வேண்டாமென ஒதுக்கப்பட்டு, வேரோடு பிடுங்கி எறியப்பட்டு, சமூக ஓரத்தில் வந்து விழுந்து, தானாகவே எழுந்து, தானாகவே ஊன்றி வந்த இலக்கியப் பெண்கள் ஒரு வகையில் பல முறை அவமானப் பீடத்தில் பலியானவர்கள் என்பதால் அந்தக் கட்டுரையை வெறுமனே கடந்து போகிறேன்.
மலர்வதி, எழுத்தாளர்.