

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ சார்பில் கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாக அரங்கில் ‘மகளிர் திருவிழா’ ஜனவரி 7ஆம் தேதி கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்வில் கோவை மாநகரப் பகுதியைச் சேர்ந்த வாசகியர் மட்டுமன்றி, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சூலூர், வால்பாறை உள்ளிட்ட கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வாசகியரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
உடல்நலனில் அக்கறை வேண்டும்
இவ்விழாவில் மகப்பேறு மருத்துவர் சசித்ரா தாமோதரன், பெண்கள் தங்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் உடல்நலனைப் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்தும் விரிவாக விளக்கிப் பேசினார். அவர் பேசும்போது, “பெண்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் நலனில் காட்டும் அக்கறையைத் தங்கள் உடல்நலனில் காட்டுவதில்லை. மாறிவரும் வாழ்க்கை முறையால் உணவு, உடற்பயிற்சி, உறக்கம் ஆகியவற்றிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெண்கள் தங்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும். இயற்கை உணவுக்குப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். உடல் எடையில் கவனம் செலுத்துங்கள். தினமும் 30 நிமிடங்கள் வீதம் வாரத்தில் குறைந்தபட்சம் ஐந்து நாள்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைப்பயிற்சிக்குச் செல்ல வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் உறக்கம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. உறக்கத்தைக் கெடுப்பதில் செல்போனுக்குப் பெரும்பங்கு உள்ளது. உறங்கச் செல்லும்போது, செல்போன் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். அது உறக்கத்தை மட்டுமன்றி ஹார்மோன் செயல்பாட்டையும் பாதிக்கிறது. மகளிர் உடல்நலனைப் பேணிப் பாதுகாக்க உணவு, உடற்பயிற்சி, உறக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
சுயசார்புடன் இருக்க வேண்டும்
தொடர்ந்து ‘பெண்கள் முன்னேற்றம்’ குறித்து அவினாசிலிங்கம் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் பேராசிரியையும் தன்னம்பிக்கைப் பேச்சாளருமான குருஞானாம்பிகை பேசினார். “உழைக்கும் பெண்கள் அதிகமாக வாழும் ஊர் கோவை. ஆண்களுக்கு ஒரே வாழ்க்கை. ஆனால், பெண்களுக்கு அப்படியில்லை. திருமணத்துக்கு முன்பு தந்தையின் வீட்டில் இருப்பர். திருமணத்துக்குப் பின்னர் கணவர் வீட்டில் இருப்பர். திருமணத்துக்குப் பின்னர் பெரும்பாலான பெண்கள் தங்கள் சுயத்தை இழக்கின்றனர். அடையாளத்தைத் தொலைக் கின்றனர். நாம் நாமாக இருந்தால்தான் நமக்கான முன்னேற்றம் இருக்கும். திருமணத்துக்குப் பிறகு பெண்கள் தங்களது நலனைப் பற்றி யோசிப்பதில்லை. பெண்கள் சுயசார்புடன் இருக்க வேண்டும். அனைத்தையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்” என்றார் குருஞானாம்பிகை.
இளையோர் சக்தி
புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவின்போது தேவாரப் பாடல்கள் பாடிய குழுவில் இடம்பெற்றிருந்த உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவி உமாநந்தினி, திருமுறைப் பாடல்களைப் பாடி உரையாற்றினார். “தொடர்ந்து பாடிவரும் திருமுறை என்னை மேன்மை நிலைக்குக் கொண்டுவந்துள்ளது. திருமுறைப் பாடல்கள் மன எழுச்சியையும் தன்னம்பிக்கையையும் தரும். சக்தியைக் கொடுக்கும் தெய்வங்களாகப் பெண் தெய்வங்கள் உள்ளனர்” என்றார்.
முயற்சிக்கு அங்கீகாரம்
தனியார் உணவு வழங்கல் நிறுவனத்தில் பகுதிநேரமாக வேலைசெய்து கொண்டே வங்கித் தேர்வுக்குத் தயாராகி வரும் கோவையைச் சேர்ந்த ரசிகப்பிரியாவுக்கு உஜாலாவின் ‘வுமன் ஆஃப் சப்ஸ்டன்ஸ்’ அங்கீகாரமும் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டன. “பெண்கள் கொண்டாட்டத்தைப் போல் போராட்டக் குணத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதனால்தான் நான் யாரையும் எதிர் பார்க்காமல் சுயசார்புடன் நிற்கிறேன்” என்று வாசகியருக்குத் தன்னம்பிக்கை அளிக்கும் விதத்தில் ரசிகப்பிரியா பேசினார்.
வாசகியரை ஆட வைத்த பறையிசை
கோவையைச் சேர்ந்த ‘நிகர் கலைக்கூடம்’ சார்பில் பறையிசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என 20க்கும் மேற்பட்டோர் இணைந்து பறையை இசைத்தனர். அரங்கத்தை அதிரவைத்த பறையிசையைக் கேட்டு வாசகியர் உற்சாகமடைந்தனர். இளம்பெண்கள் மட்டுமன்றி நடுத்தர வயதினரும் முதியவர்களும் உற்சாகமாகப் பறையிசைக்கு ஏற்ப நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
களைகட்டிய போட்டிகள்
அதைத் தொடர்ந்து வாசகியர் ஆவலுடன் எதிர்பார்த்த விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின. சிரமம் இல்லாமல், அதேநேரம் கவனத்தோடு விளையாடும் வகையில் ஒவ்வொரு போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பந்து வீசுதல் போட்டி, பலூன் ஊதும் போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, ஊசி மணி கோக்கும் போட்டி, ஃபேஷன் ஷோ ஆகியவை நடத்தப்பட்டன. வெற்றிபெற்ற வாசகியருக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்குமே பரிசு வழங்கப்பட்டது இந்நிகழ்வின் சிறப்பம்சம். மதிய உணவுக்குப் பிறகும் போட்டிகள் தொடர்ந்தன. இடையிடையே கோவை மாவட்டம் குறித்த பொது அறிவுக் கேள்விகள் கேட்கப்பட்டுச் சரியாகப் பதில் அளித்த வாசகியருக்குப் பரிசுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டன.
‘மகளிர் திருவிழா’வின் முக்கிய அம்சமாக இரண்டு வாசகியருக்கு பம்பர் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து வாசகியருக்கும் ‘ரிட்டர்ன் கிப்ஃட்’ வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுடன் ‘உஜாலா லிக்விட் டிடெர்ஜென்ட்’ இணைந்து வழங்கியது. ப்ரெஸ்டா வுமன்ஸ் வியர், ரத்தோர் எண்டர்பிரைசஸ் 115 கலெக்ஷன்ஸ், பவிழம் ஜூவல்லர்ஸ் கோவை, அரோமா பிரீமியம் டெய்ரி புராடெக்ட்ஸ், நாராயணா பியர்ல்ஸ், வாக்ஹ் பக்ரி ஆகிய நிறுவனங்களும் இதில் பங்கேற்றன. சின்னத்திரை தொகுப்பாளினி தேவி கிருபா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
எஸ்.கோபு
படங்கள்: ஜெ.மனோகரன்