

எல்லாருக்கும் ஒரு கதை இருக்கிறது. சில கதைகள் சோகத்தில் ஆழ்த்தும், சில கதைகள் பெரும் துயரிலிருந்து மீட்கும். சில கதைகளோ ஸ்தம்பிக்கச் செய்யும். இவை அத்தனையையும் உள்ளடக்கிய கதைதான் ஷீதள் (இப்பெயருக்கு குளிர்ச்சி என்று அர்த்தம்) தேவியின் கதை. இது தனித்து நிற்கும் கதை.
2023 அக்டோபர் மாதம் ஆசிய பாரா ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டியில் தங்கம் வென்று அனைவரையும் ஈர்த்த ஷீதள் தேவி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவினால் அர்ஜுனா விருது அளிக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.
இரண்டு கைகளுமின்றிச் சர்வதேச அளவில் வில்வித்தைப் போட்டியில் பங்கேற்கும் ஒரே வீராங்கனை ஷீதள்தான். ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஷீதள், பிறந்ததிலிருந்து உடல் சார்ந்த சவால்களைக் கொண்டிருந்தாலும் சிறுவயது முதலே விளையாட்டுப் போட்டிகளில் திறன்மிக்கவராக இருந்தார். கால்களே ஷீதளுக்கு எல்லாமுமாக இருந்து அவருக்கான அங்கீகாரத்தை ஏற்படுத்தத் தொடங்கின.
ஷீதளின் திறமையை அடையாளம் கண்ட இந்திய ராணுவம் அவர் வில்வித்தையில் பயிற்சி பெறுவதற்காக உதவியது. இதன் தொடர்ச்சியாக வில்வித்தைப் பயிற்சியாளரான குல்தீப் வேத்வானிடம் பயிற்சிபெற்ற ஷீதள், தனது திறன் மூலம் தேசியப் போட்டிகளில் வெற்றிபெற்று மிகக் குறுகிய காலத்தில் பிரபலமானார்.
“நான் எப்போதும் துவண்டு போவதில்லை. இந்தியாவுக்காக இன்னும் நிறைய பதக்கங்களை வெல்வதே என் இலக்கு” என வில்வித்தைப் பயணத்தை விவரிக்கும் ஷீதள் களத்தில் நம்பிக்கையுடன் நிமிர்ந்து நிற்கிறார்.
அர்ஜுனா அங்கீகாரம்
விளையாட்டுத் துறையில் சிறந்த பங்களிப்பை அளித்துவரும் வீரர், வீராங்கனைகளைக் கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு ஆண்டுதோறும் அர்ஜுனா விருதை வழங்கிவருகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டுக்கான அர்ஜூனா விருது பெற்ற 26 பேரில் 13 பேர் பெண்கள்.
ஷீதள் தேவியோடு அதிதி கோபிசந்த் (வில்வித்தை), ஆர்.வைஷாலி (செஸ்), திவ்யகிருதி சிங் (குதிரையேற்றம்), தீக் ஷா தாகர் (கோல்ஃப்), சுசீலா சானு (ஹாக்கி), ரித்து நெகி (கபடி), நஸ்ரின் (கோ-கோ), பிங்கி (லான் பவுல்ஸ்),ஈஷா சிங் (துப்பாக்கிச் சுடுதல்), அய்ஹிகா முகர்ஜி (டேபிள் டென்னிஸ்), நவோரெம் ரோஷிபினா தேவி (வூஷூ), பிராச்சி யாதவ் (பாரா படகுப்போட்டி) ஆகியோரும் அர்ஜுனா விருதைப் பெற்றனர்.