பெண்ணுடலில் உறையும் ஆண் மனம்

பெண்ணுடலில் உறையும் ஆண் மனம்
Updated on
3 min read

“எந்த வேலையா இருந்தாலும் எனக்குப் பிரச்சினை இல்லை. நான் நல்லபடியா செய்வேன். தயவுசெய்து வேலை வாங்கிக் கொடுங்க சார்.”

“புரியுது தியாகு. உங்க மனைவி வேலை செய்யறாங்க, உங்களுக்கு வேலை கிடைக்கலை. ஏதாவது வேலைய சீக்கிரம் பார்த்துடுறேன். ஆனா நீங்க உங்களைப் பத்தி எதுவும் தெரியாம பார்த்துக்கோங்க, சரியா.”

“சரி சார், நிச்சயமா ஜாக்கிரதையா இருக்கிறேன்.”

நான் திருநம்பி எனச் சொல்லாமல் பல இடங்களில் வேலைசெய்து வருகிறேன். ஆனால், எப்படியோ கண்டறிந்துவிடுகிறார்கள்.

“தியாகு நீ மட்டும் ஏன் எங்ககூட எங்கேயும் வரமாட்டேங்குறே?”

“இல்லடா மச்சான். தியாகு கூச்ச சுபாவம். பாத்ரூம்கூட டாய்லெட்லதான் போறான் பார்த்தியா?”

“ஏன் தியாகு எப்பவுமே சட்டை போட்டே இருக்கே. இந்த கம்பெனி முழுவதும் பசங்கதானே இருக்கோம். கரன்ட் போனாலும் சட்டையைக் கழட்ட மாட்டேங்குறியே.”

இப்படிக் கேள்வி மேல கேள்வி கேட்டு என்னைக் கண்டுபிடிச்சா நான் என்ன செய்யறது? நான் யாரையும் பெர்சனலா ஒரு நாளும் இப்படிக் கேட்டது இல்லையே.

“தியாகு, ஒரு பேக்கரில பக்கோடா போடற வேலை இருக்காம் போறியா?”

“மச்சான் எம்.காம்., படிச்ச நான் வாடகை வண்டி ஓட்டுறேன். நீ பி.காம்., படிச்சிட்டு பக்கோடா போடுறே சூப்பர்டா.”

“டேய் உனக்கு எப்பவும் கிண்டல்தானா? நம்ம நிலையை நெனச்சி வருத்தமே வரலையா?”

“வருத்தப்பட்டு என்னடா ஆகப்போவுது. நம்ம திருநம்பிகள் நிலைமை இதுதான்.”

ஏங்க... கொஞ்சம் பணம் எடுத்துவச்சி உங்களுக்கு ஆபரேஷனுக்குத் தயாராகணும்னு என் மனைவி சொல்லும்போது மனசு கஷ்டமாவுது. ஏற்கெனவே டாப் சர்ஜரிக்கு அவதான் லோன் போட்டுக் கொடுத்தா. இப்போ அந்த முக்கியமான சர்ஜரிக்கு அவளே பணம் கொடுக்கிறதா?

“செல்வி வேணாம்டி. நான் பாத்துக்குறேன். நீ உனக்குக் கொஞ்சம் பணம் எடுத்து வை. எதிர்காலத்துல தேவைப்படும்.”

“இதோ பாருங்க, நம்ம வாழ்க்கைல நீங்க, நான் அவ்ளோதான். இதுல எனக்குத் தனியா என்ன இருக்கப்போகுது?”

கதையல்ல நிஜம்

 ஒரு திருநம்பி, தன்னை நேசித்தவரோடு சேர்ந்து வாழும்போது ஏற்படும் பிரச்சினைகளை நாம் இக்கதையின் மூலம் அறியலாம்.

 பொதுவாகத் திருநம்பிகளைப் பார்த்தவுடன் கண்டறிந்துவிட முடியாது. ஒரு பெண்ணை உற்றுநோக்கும் பலர் ஆணுடையில் உள்ளோரை அவ்வளவாக நோக்குவதில்லை. ஆனால், ஒரு திருநம்பியை அவர் பணிபுரியும் இடத்தில் உள்ள மற்றவர்கள் எவ்வாறு கண்டறிந்து மன உளைச்சல் கொடுக்கின்றனர் என்பதை தியாகு கதை உணர்த்துகிறது.

 திருநங்கையோ திருநம்பியோ பரஸ்பரம் விருப்பத்தோடு திருமணம் செய்துகொள்ளலாம் என்று சட்டம் தெளிவாகக் கூறுகிறது. ஆனால், இவர்களது திருமணம் ஏதோ தவறான செயல் போல் கருதப்படுகிறது.

 ஒரு குடும்பமாக இணைந்து வாழ LGBTQ மக்கள் விரும்புகிறார்கள். ஆனால், பொதுச் சமூகம் அவர்களை அவ்வாறு இருக்கக் கூடாது என்று அவர்கள் விரும்பாத திருமணத்தை நடத்தி வைக்கவே விரும்புகிறது. அது அந்த எதிர் பாலினருக்குச் சமூகம் செய்யும் துரோகமாகும்.

 மூன்றாம் பாலினம் என்பது ஒரு சாதாரண நிகழ்வு என்கிற கண்ணோட்டம் முதலில் நமக்கு ஏற்படவேண்டும். அப்படி இருந்தால் அவர்களின் அறுவை சிகிச்சை முறைகள் குறித்துப் பொதுப்படையாக பேச இயலும். அப்போது இக்கதையில் வரும் திருநம்பி தியாகு மாதிரி பாலின உறுதி அறுவை சிகிச்சை முறைகளை மறைக்க வேண்டியதில்லை.

செல்வி என்கூடப் படிக்கும்போதே அவ சாப்பாட்டை எனக்குக் கொடுப்பாள். என் மீது ரொம்ப பாசமா இருப்பா. ஒருநாளும் என்னைக் கஷ்டப்படுத்துற மாதிரி எதுவும் கேட்க மாட்டா. என்கூடப் படிச்ச மத்த எல்லாப் பொண்ணுங்களும் என்னைப் பையன் பொண்ணுன்னு கிண்டல் பண்ணுவாங்க. அவங்ககிட்ட செல்வி சண்டை போடுவா. செல்விக்குப் பயந்தே என்னை யாரும் கிண்டல் பண்ண மாட்டாங்க.

ஏன்டி செல்வி, அந்தப் பொண்ணோட சேராத சேராதன்னு சொன்னா கேக்க மாட்டியான்னு அவ அப்பா எவ்ளோ சொன்னாலும் என் நட்ப விட்டது இல்ல செல்வி. எனக்கு அவளைப் பிடிக்கும். ஆனால், அவளும் என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புறாள்னு தெரிஞ்சதும் நான் ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்தேன்.

செல்வி ஒரு ஆணைத் திருமணம் செய்யாமல் என்னோடு வாழ்வது என் கிராமத்தில் உள்ள ஒருவருக்கும் பிடிக்கவில்லை. அது குறித்து நாங்கள் இருவரும் கவலைப்படவும் இல்லை. இந்தக் காதலை ஏற்றுக்கொள்ள மனிதர்கள் இன்னும் பக்குவப்படவில்லை. என்னைப் போன்ற திருநம்பிகள் பிறந்து ஒரு வாழ்க்கையும் அமையாமல் இறந்துபோக வேண்டுமா?

இப்போ எல்லாம் என்னை பக்கோடா தியாகுன்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க.

“தியாகு அண்ணா எப்போ செல்வி அண்ணி குழந்தை பெத்துக்கப் போறாங்க? உங்களுக்குக் கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆச்சின்னு சொல்றீங்க இப்படிக் குழந்தையைத் தள்ளிப்போட்டா எப்படின்னு என்னை நெறய பேரு கேக்குறாங்க செல்வி. எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல.”

“எனக்கும்தான் தெரியல. நாளாக நாளாக குழந்தை இல்லாத தம்பதின்னு நெனக்கட்டும் விடுங்க”

செல்வி இதைப் பெருசா எடுத்துக்க மாட்டா.

“ஒரு மாசம் வரைக்கும் நான் யாரை வேலைக்கு வைக்கிறது, இதுக்குதான் வெளியூர் ஆள்களை வேலைக்கு வைக்கக் கூடாது”ன்னு பக்கோடா கடை ஓனர் சத்தம் போட்டார்.

“இல்ல சார். கிட்னில கல்லு பெருசா ஆகுது. அப்படியே விட்டுட்டா ஆபத்துனு டாக்டர் சொல்றாரு.”

“அதுக்கு எதுக்கு ஒரு மாசம்? ஒரு வாரம் போதுமே. என் தம்பிக்கும் அந்தப் பிரச்சினை இருந்தது. நம்ம ராமோஜி ஹாஸ்பிடல்ல வச்சி ஒரு வாரத்துல சரிபண்ணிட்டேன். நீ நெறய பொய் சொல்றே. உன் சிகிச்சை முடிச்சுட்டு வேற வேலை பார்த்துக்கோ. உன் நடவடிக்கையே சரி இல்ல.”

வேலை போனதை நினைத்து தியாகு கலங்கினான்.

“ஏங்க விடுங்க. உங்க முக்கியமான சர்ஜரி முடிச்சிட்டு உங்களுக்கு வேற வேலை பார்க்கலாம்.”

தியாகுவுக்கு ஆபரேஷன் முடிந்து நன்றாக இருப்பதாக தியாகுவின் நண்பர்களிடம் செல்வி சொன்னாள்.

“இவ சொல்றா, ஆனா இவளே இன்னும் பாக்கலையாம்.”

“ஏன் தியாகு அண்ணனை இங்க வச்சி அந்தக் கல்லு ஆபரேஷனைப் பண்ணா என்னவாம்? இந்த செல்வி அவனுக்கு வேலை இல்லைனு கை கழுவ பாக்குறாளோ என்னவோ. பாவம் அந்த தியாகு அண்ணன்.”

(தொடரும்)

கட்டுரையாளர், திருநர் செயற்பாட்டாளர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in