வாட்ஸ் அப் வழியே விவசாயம்
சந்தைக்கு வரும் காய்கறிகள் பலவும் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தியே விளைவிக்கப்படுகின்றன என்பதைப் பலரும் அறிவோம். இது குறித்த விழிப்புணர்வு இருந்தாலும் வேறுவழியில்லாமல் சந்தையில் கிடைப்பதை வாங்கிப் பயன்படுத்தும் நிலையே பலருக்கும் உள்ளது. அப்படி வெளியில் வாங்கும் காய்கறிகள், கீரைகளின் தேவையைக் குறைத்துத் தேவையானவற்றை வீட்டிலேயே இயற்கையான முறையில் நஞ்சில்லாமல் விளைவிக்க முடியும் என நூற்றுக்கணக்காணோருக்கு வழிகாட்டிவருகிறார் கோவை வடவள்ளியைச் சேர்ந்த சுமதி ராணி.
ஐம்பது வயதைக் கடந்த இவர், பத்து ஆண்டுகளுக்கு முன் வீட்டில் சிறிய அளவில் காய்கறித் தோட்டம் அமைத்தார். அவர் கலை ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளியின் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் காய்கறி, பூச்செடிகள் வளர்ப்பு குறித்துக் கற்றுத்தந்தார்.
“மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் போன்றவை குறித்து ஆலோசனை வழங்கிவரும் கோவையைச் சேர்ந்த ‘தோட்டம்’ சிவாவின் செயல்பாடுகள் குறித்த கட்டுரையை 2017இல் வார இதழ் ஒன்றில் படித்தேன். அதைப் பார்த்து அவரது வாட்ஸ் அப் குழுவில் இணைந்தேன். அது தமிழகம் முழுமைக்குமான குழு. அதே போல கோவைக்கு மட்டுமான ஒரு குழுவை உருவாக்கினால் பலருக்கும் பயன்படும் என்று நினைத்தேன். அந்தக் குழுவில் இருந்த கோவையைச் சேர்ந்த 6 பேர் இணைந்து தனியாக ‘Coimbatore Terrace Garden’ என்கிற வாட்ஸ் அப் குழுவை 2019இல் தொடங்கினோம். அந்த 6 பேரையும் அட்மினாக்கி, அவரவர் பகுதியில் ஆர்வமுள்ளவர்களை இணைத்தோம். ஒன்றரை ஆண்டுகள் செயல்பாட்டுக்குப் பின் நடைபெற்ற குழுவின் முதல் கூட்டத்தில் கோவையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 150 பேர் கலந்துகொண்டனர்” என்கிறார் சுமதி ராணி.
ஒரே குழுவில் அதிக உறுப்பினர்களைச் சேர்க்க முடியாத காரணத்தால் கோவையின் குறிப்பிட்ட சில பகுதிகளை ஒவ்வொரு மண்டலமாக்கித் தனித்தனி குழுக்களை உருவாக்கி, குழுவுக்கு ஒரு பொறுப்பாளரை நியமித்தார்கள். மேலும், பகுதிவாரியாகக் குழுவை உருவாக்கியதால் அந்தப் பகுதியில் உள்ளவர்கள் விதைகளையும் நாற்றுகளையும் எளிதாகப் பரிமாறிக்கொள்ள முடிந்தது. கோவையில் தற்போது 15 மண்டலக் குழுக்கள் இருக்கின்றன.
வியாபார நோக்கம் கூடாது
“குழு உறுப்பினர்கள் தங்களிடம் உள்ள விதைகள், செடிகளை மற்ற உறுப்பினர்களுக்கு இலவசமாக மட்டுமே வழங்க வேண்டும், வியாபார நோக்கம் இருக்கக் கூடாது என்பது உள்ளிட்ட விதிமுறைகளை உருவாக்கினோம். இதனால், செடி, கொடிகள் வளர்ப்பு குறித்த பயனுள்ள கேள்வி, பதில்கள் மட்டுமே குழுவில் இடம்பெற்றுவருகின்றன. மேலும், தாங்கள் அறுவடை செய்ததைப் படங்களாக எடுத்து உறுப்பினர்கள் அனுப்புவார்கள்.
நாட்டுக் காய்கறி விதைகளைச் சேகரித்து இலவசமாக வழங்கிவரும் திருப்பூர் பிரியா எங்களுக்கு விதைகளை வழங்கி உதவிவருகிறார். அந்த விதைகளைப் பெருக்கி, மண்டல அளவிலான குழு உறுப்பினர்களுக்கு வழங்குகிறோம். அது போக, மீதமாகும் விதைகளை பிரியாவிடமே கொடுத்துவிடுவோம்” என்று தங்கள் குழுவின் செயல்பாடுகள் குறித்து சுமதி ராணி பகிர்ந்துகொண்டார்.
ஒரு சென்ட் இடம் போதும்
“மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டத்தை அமைக்க ஒரு சென்ட் இடம் போதும். பெயின்ட் டப்பா, சாக்லெட் பாக்ஸ், 20 லிட்டர் குடிநீர் கேன், பழைய பிரிட்ஜ் பெட்டி என மீண்டும் பயன்படுத்தும் வகையிலான எதை வேண்டுமானாலும் தொட்டியாகப் பயன்படுத்த லாம். தொட்டியின் மீது சூரிய ஒளி நேரடியாகப் படுமாறு இருக்க வேண்டும். தோட்டம் அமைக்க முதலில் மண்ணைத் தயார்செய்ய வேண்டும். அதற்குத் தேங்காய் மட்டை, அடுப்புக் கரி, ஆடு, மாட்டின் கழிவுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
பூக்கள், காய்களாக வேண்டுமெனில் மகரந்தச் சேர்க்கை அவசியம். மகரந்தச் சேர்க்கைக்கு வண்ணத்துப்பூச்சிகள், வண்டுகள், குளவிகள், தேனீக்கள் உதவுகின்றன. எனவே, அவற்றை ஈர்க்கப் பூச்செடிகள் சிலவற்றையும் மாடித்தோட்டத்தில் வளர்க்க வேண்டும். 50 தொட்டிகள் இருந்தால் அதில் செண்டுமல்லி, ஜினியா வகைச் செடிகள், செவ்வந்தி என ஐந்து தொட்டிகளில் பூச்செடிகளை வளர்க்க வேண்டும்” என்று சொல்லும் சுமதி ராணி, விளைச்சல் குறைவாக தரும் இயற்கை விவசாய முறையை மட்டுமே ஊக்குவிக்கிறார்.
இயற்கையே நல்லது
“அது எவ்வளவு விளைச்சல் தருகிறதோ அது போதும் என்பதை எடுத்துக்கூறுகிறோம். மாட்டுச் சாணம், மண் புழு உரம், காய்கறி, பழங்களின் கழிவு, அமிர்தக் கரைசல், ஜீவாமிர்தம் போன்றவற்றை மட்டுமே பயன்படுத்துகிறோம். மாடித்தோட்டத்தில் சவாலாக இருப்பவை பூச்சிகள். அவற்றைக் கட்டுப்படுத்த இயற்கை பூச்சிவிரட்டிகளை உபயோகப்படுத்துகிறோம்.
50 தொட்டிகளை வைத்தால் வீட்டுக்குத் தேவையான கத்தரி, தக்காளி, பச்சைமிளகாய், வெண்டைக்காய், செடி அவரை, குடை மிளகாய், பீர்க்கங்காய், குட்டைப் புடலை உள்ளிட்ட கொடிக் காய்கறிகள், மூலிகைகள், கீரை வகைகளை வளர்க்க முடியும். கீரை வகைகளை வெளியில் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. குறைந்தபட்சம் ஏழு வகையான கீரைகளைச் சுழற்சி முறையில் வளர்க்க முடியும்.
சில தொட்டிகளில் இருந்து கிடைக்கும் தக்காளி ஒரு குடும்பத்தின் தேவையைப் பூர்த்தி செய்யாது. இருப்பினும், உட்கொள்ளும் பாதி நஞ்சை குறைக்கலாம். பத்துத் தொட்டிகளில் பச்சை மிளகாய் செடி இருந்தால் கடையில் மிளகாய் வாங்கும் தேவையே இருக்காது. துளசி, கற்பூரவல்லி, தூதுவளை, பிரண்டை போன்ற மூலிகைச் செடிகள் ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக இருக்க வேண்டும். மாடித்தோட்டத்தில் அறுவடை செய்ய பொறுமை அவசியம் வேண்டும். உடனே, எல்லாம் கிடைக்காது. ஒரு விஷயத்தைத் தொடர்ந்து செய்தால்தான் பலன் கிடைக்கும்” என்கிறார் சுமதி ராணி.
