

“கிராமியக் கலையில் சிறந்து விளங்கும் இந்த காமாட்சியைத் தெரியாதவர்கள் இருக்க முடியுமா? நீ இன்னைக்கு வந்தவ.”
“இருக்கட்டும். நீ கரகத்துல பேர் போனவள்னா நான் கூத்துல பேர் இருக்குறவ.”
“அடியே தாரா நானும் பேர் இருக்குறவதான்.”
“எதுக்குடி நமக்குள்ள வாக்குவாதம், விடுங்கடி”
- என்று சமாதானப்படுத்திய மாஸ்டர் சிந்துவும் திருநங்கைதான். மூத்த கலைஞர். அறுபதை வயதைத் தாண்டியவர். ஆனால், அலட்டிக்கொள்ளாமல் இருப்பார். ஒரு நிகழ்ச்சிக்கு இவ்வளவு எனத்தொகை பேசி, மூன்று அல்லது நான்கு திருநங்கைகளைத் தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்வார்.
காமாட்சி கரகம் ஆடும்போது செம்பைத் தலையில் வைத்து ஆடுவது மட்டுமல்ல, அதைப் பல கோணத்தில் வளைத்தும் நெளித்தும் ஆடுவார். அந்தச் செம்பின் மேல் தேங்காய் வைத்து அதை தாரா கண்ணைக் கட்டி உடைப்பது என அந்த மேடையே களைகட்டும்.
இன்னைக்கு நிகழ்ச்சிக்கு முதல்வர் வரார்னு கேள்விப்பட்டதுல இருந்து சிந்துஅம்மாவுக்கு சந்தோஷம்.
அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு அடிக்கடி அரசு பெண் அதிகாரிகள் வருவதும் போவதுமாக இருந்தனர்.
“அம்மா உங்களுக்கு ஒதுக்கிய 15 நிமிடத்துல நிகழ்ச்சியை முடிச்சுடுங்க. தயவுசெய்து அதிக நேரம் எடுத்துக்காதீங்க”னு அந்த அதிகாரிகள் சொல்லும்போது சிந்துவுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.
“இந்தக் கலைவிழாவில் கலந்துகொண்ட அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். குறிப்பாகத் திருநங்கை சிந்து அவர்களின் குழுவினரை நான் மனதாரப் பாராட்டுகின்றேன். அவர்களின் ஆர்வமும் நயமும் என்னைச் சிலிர்க்க வைத்தன” என முதல்வர் மேடையில் சிந்து குழுவினரைப் பாராட்டிப் பேசினார்.
“சிந்துமா கலக்கிட்டீங்க”னு விழா முடிவில் எல்லாரும் சிந்துவையும் காமாட்சி, தாராவையும் வாழ்த்தோ வாழ்த்து என வாழ்த்தினர்.
“இது மாதிரி கலைநிகழ்ச்சிகளை ரொம்ப வருசமா பண்றீங்களாம்மா?”ன்னு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவர் கேட்டார்.
| கதையல்ல நிஜம் கிராமியக் கலைகளில் அந்தக் காலம் முதல் திருநங்கைகள் பங்கேற்றுள்ளனர். தெருக்கூத்துக்களில் கடந்த 50 வருடங்களாகப் பங்கேற்றுவரும் திருநங்கைகளும் தமிழகத்தில் உள்ளனர். எத்தனையோ அவமானங்களை எதிர்கொண்டாலும், ’இந்தத் தொழில் மட்டுமே செய்வேன்’ எனக் கிராமியக் கலைக் குழுக்களை நடத்திவரும் திருநங்கைகள் பல மாவட்டங்களில் உண்டு. சில இடங்களில் இந்தக் குழுவினரைக் கிண்டலாக நடத்துவது இன்னமும் தொடர்கிறது. இவர்களின் கலையைப் பார்ப்பதைவிட இவர்கள் திருநங்கைகள்; ஆடச் சொன்னால் எந்த மாதிரி பாட்டுக்கும் ஆட வேண்டும் என்ற எண்ணம் சமூகத்தில் நிலவுவதும் கசப்பான உண்மையே. இது மாற வேண்டும். ஒப்பாரியாக இருந்தாலும் அதையும் கலையாக நினைத்துச் செய்கின்றனர். திருநங்கைகள் எந்த நல்ல விஷயத்தைச் செய்தாலும் சமூகம் அவர்களைப் பாராட்டி அங்கீகரிக்க வேண்டும். காரணம், இப்போதுதான் அவர்கள் பொதுமக்களோடு கொஞ்சம் கொஞ்சமாக இணைந்துவருகின்றனர். தமிழக அரசு திருநங்கை மக்களின் நல்ல செயல்களை ஊக்கப்படுத்திவருகிறது. ஊடகங்களும் திருநங்கை மக்களின் வளர்ச்சியைக் கவனப்படுத்துகின்றன. இவையெல்லாம் மூன்றாம் பாலினத்தவரின் தொடர் வளர்ச்சிக்குக் காரணங்கள். |
சிந்தும்மா யோசித்தார். ‘கூத்து, கணியன் கூத்து, தெம்மாங்குப் பாட்டு, ஒப்பாரிப் பாட்டு, மதுரை சண்டியர் பாட்டு, தனுஷ்கோடி ரயில் விபத்து கதை, அரியலூர் ரயில் விபத்து கதை, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கதை, பாலம்மாள் கதை, சென்னை ஆளவந்தான் கதை, ஒருவனுக்கு ஒருத்தி... இப்படி நான் கத்துக்கிட்டு நடத்துன எதை இந்தப் பையன்கிட்ட சொல்ல. அந்தக் காலத்து தெருகூத்துலயும் ஆடியிருக்கேன், இப்போ மாறிப்போன நாடகத்துலேயும் ஆடிருக்கேனே, அதல்லாம் இந்த பையன்கிட்ட சொல்லவா?
தெருக்கூத்துல எத்தனை புராணத்தை எத்தனை கிராமங்கள்ல சொல்லியிருப்பேன். மகாபாரதக் கதையில நான் போடாத வேசமா? அதிலும் கர்ணன் மோட்சமும் குறவஞ்சியும் என் வாழ்க்கையில மறக்க முடியுமா? நல்லதங்காளாவும் வேஷம் போட்டு இருக்கேன், அவ அண்ணியாவும் அவளைக் கொடுமை பண்ணிருக்கேன். அதெல்லாம் இந்தக் குழந்தைகிட்ட சொல்லவா?
நான் இப்படித் திருநங்கையா வெளில வரதுக்கு முன்னாடியே ஆண் உடையிலேயே பொம்பள வேஷம் போட்டுருக்கேன். யாரு இது, பொண்ணா பையனானு கேப்பாங்களே...’ என நினைக்கும்போதே சிந்து அம்மாவுக்கு முகம் சிவந்தது.
’திருநங்கையான மதுரை தர்மாம்மா ஆடுற ஆட்டத்தைச் சொல்லவா? தேனி மீனாட்சி உடம்புல நெருப்பை வச்சி ஆடுவாளே அதைச் சொல்லவா? திருபுவனம் ராதா சலங்கையைக் கட்டுனா ஊரே அவளைப் பார்க்கத் திரண்டு நிக்குமே, அந்த அழகைச் சொல்லவா? சேலம் சிந்து கூத்துதான் வாழ்கையின்னு வாழறாளே அதை நெனைச்சி பெருமைப் படவா? உசிலம்பட்டி முருகேஸ்வரி மேடைல போடாத வேசமா?’ என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே ஊர் வந்துவிட்டது.
“சிந்தும்மா எம்மா சிந்தும்மா..”
“சொல்லுப்பா? இன்னா இவ்ளோ காலைல?”
“காலைல எதுக்கு வருவோம்? ஊர்ல மட்டை தேசப்பன் அப்பா இறந்துட்டாரு. ஒப்பாரிக்கு வந்துடுங்க.”
“இப்போதாம்பா சென்னைல இருந்து விழா முடிச்சிட்டு வரோம். ஒரு பத்து மணிக்கு வரோம்யா.”
“இந்தா பாரு சிந்து, இது பெரிய சாவு. ஒப்பாரிய ரெண்டாவதா வை. முதல்ல நல்ல குத்தாட்டம் போடச் சொல்லு உன் பிள்ளைகள.”
“இந்தாயா பாண்டி. இந்த சிந்துதான் கிடைச்சாளா? இவ குத்தாட்டம் போட்டுட்டாலும்.. எம்மா இதுக்கெல்லாம் உன் குரூப்புல ரெண்டு பொம்பள புள்ளய வச்சிக்க வேண்டியதுதானே?”
“சரி சரி. வந்துட்ட அந்த சின்னவ தாராவை ஒரு ஆட்டம் போடச் சொல்லு. நீ போய் ஓரமா ஒக்காரு.”
“யோவ் பாவம் அதுங்க. வயித்துப் பொழப்பு. விடுங்கய்யா ஓவரா சதாய்காதீங்க. இதோ பாரு சிந்து நான் எப்படியும் அலைஞ்சி திரிஞ்சி முதலமைச்சரைப் பார்த்து இந்த ஊருல கவுன்சிலர் ஆயிடுவேன் அப்புறம் எப்படியாவது உன்ன சி.எம்.ம பாக்க வச்சுடுறேன்.”
(தொடரும்)
கட்டுரையாளர், திருநர் செயற்பாட்டாளர்.