Published : 21 Jan 2018 12:34 PM
Last Updated : 21 Jan 2018 12:34 PM

வான் மண் பெண் 41: நிலத்தை மீட்ட பெண்கள்!

ந்தியா நிலவுடைமைச் சமுதாயங்கள் நிறைந்த நாடு. இங்குதான் நிலத்தைப் பெண்களுக்கு இணையாக ஒப்பிடுகிறார்கள். ‘நிலமென்னும் நல்லாள்’ என்கிறார்கள் தமிழர்கள். ஆனால், இந்த நாட்டில் இன்னமும் பெண்களுக்கு நிலத்தின் மீதான உரிமை இல்லை. இருந்தும் அகழ்வாரைத் தாங்குவது நிலமும் பெண்ணும்தாம்!

மக்களுக்கே நிலம்

அந்த இடம், பல பெருமைகளைக் கொண்ட இடம். அங்குதான் புத்தர் ஞானம் பெற்றார். அங்குதான் மகாபண்டிதன் ராகுல சாங்கிருத்யாயன் வாழ்ந்தார். அங்குதான் நக்ஸலைட்டுகள் தங்கள் திட்டங்களைத் தீட்டினார்கள். அந்த இடம் பிஹாரில் உள்ள புத்த கயா. ஆனால், அந்த இடம் இன்னொரு காரணத்துக்காகவும் மிகவும் புகழ் பெற்றது. இங்குதான் புத்த கயா மடத்தின் கீழிருந்த சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றி நிலங்களை இழந்த தலித்துகளுக்கு விநியோகித்தது ‘சத்ர யுவ சங்கர்ஷ் வாஹினி’ எனும் பெண்கள் அமைப்பு.

பண பலமும் ஆள் பலமும் கொண்ட பண்ணையார்களும் ஜமீன்தார்களும் மட்டுமே நிலத்துக்கு அதிபதியாக இருக்கும் வழக்கம் நம் நாட்டில் தொன்றுதொட்டு இருந்துவருகிறது. சார்லஸ் கார்ன்வாலிஸ் என்ற ஆங்கிலேய அதிகாரி 1793-ல் ஜமீன்தாரி முறையைச் சட்டப்பூர்வமாக மாற்றினார். அதாவது ஜமீன்தார்களின் நிலத்தில் குடியானவர்கள் முதுகு ஒடிய வேலை செய்ய வேண்டும். அவர்களுக்குக் கூலியாக வழங்கப்படுவதில் ஒரு பாதியை வரியாக ஜமீன்தார் எடுத்துக்கொள்வார்.

இந்த முறை முதன்முதலில் நடைமுறைக்கு வந்த மாநிலங்களில் ஒன்று, பிஹார். இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு ஷங்கர் என்பவர் புத்த கயா மடத்தை ஆரம்பித்தார். 1590-ல் காமண்டி என்பவர் இந்த மடத்தின் முதல் மடாதிபதியாகப் பொறுப்பேற்றார். 17-ம் நூற்றாண்டில் இந்த மடம் பிரபலமான தாந்திரீக மடமாக வளர்ந்தது.

மடம் வளர்ந்துவந்த காலங்களில் மக்களை ஏமாற்றி அவர்களின் நிலங்களை எல்லாம் ‘மடத்துக்காக’ என்று சொல்லி வாங்கிக்கொண்டனர். 1977-ல் தன்சுக் கிரி என்பவர் மடாதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு அங்கு பல்வேறு காரணங்களால் பூசல்கள் எழுந்தன. மக்களிடமிருந்து வாங்கப்பட்ட நிலம் எக்காரணம் கொண்டும் மீண்டும் மக்களின் கைகளுக்குச் சென்றுவிடக் கூடாது என்பதில் மடம் தெளிவாக இருந்தது.

இப்படி 138 கிராமங்களிலிருந்து 9,575 ஏக்கர் நிலத்தை மடம் கைப்பற்றியிருந்தது. இந்த நிலத்தில் பணியாற்றும் மக்களுக்கும் முறையான கூலியை வழங்காமல் ஏமாற்றிவந்தது. சன்னியாசிகள் என்பவர்கள் மண், பொன், பெண் போன்ற எல்லாவற்றையும் துறந்தவர்களாக இருக்க வேண்டும். ஆனால், இந்த மடத்திலோ சன்னியாசிகள் சுக வாழ்க்கை வாழ்ந்தார்கள். ஒவ்வொரு சன்னியாசிக்கும் ஏராளமான மனைவியர் இருந்தனர். கல்லாத பெண்களை ஏமாற்றித் தங்கள் தேவைகளுக்காகக் கூலி பெறாத பணியாட்களாக மாற்றிக்கொண்டனர்.

இரண்டில் இருந்து இருபத்திநான்கு

பாதிக்கப்பட்ட அந்தப் பெண்களுக்குக் கைகொடுக்கவந்தது, சத்ர யுவ சங்கர்ஷ வாஹினி அமைப்பு. 1974-ல் ஜெயபிரகாஷ் நாராயணனால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மட்டுமே அனுமதி. 1974 முதல் 1977 வரை அப்போதைய காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டவே இந்த அமைப்பு பணியாற்றியது. 1977-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி கவிழ, அந்த அமைப்பின் கவனம் சமூகப் பிரச்சினைகளை நோக்கித் திரும்பியது.

எந்தப் பிரச்சினையைக் கையில் எடுப்பது என்பது குறித்து 1978-ல் இந்த அமைப்பு ஒரு கூட்டம் நடத்தியது. 50 பேர் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில் இருவர் மட்டுமே பெண்கள். எனினும், இந்த எண்ணிக்கை அந்த ஆண்டு ஏப்ரல் மாதம், மடத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் உயர்ந்தது. அப்போது 24 பெண்கள் நிலம் வேண்டி மடத்துக்கு எதிராகப் போராடினார்கள். இந்த அமைப்பில் தொடக்கத்தில் ஆண்கள்தான் அதிக அளவில் இருந்தார்கள் என்றாலும் போகப் போக அமைப்பின் எல்லாப் படிநிலைகளிலும் பெண்கள் அதிக அளவில் பணியாற்றத் தொடங்கினர்.

அதிர்வை உண்டாக்கிய முழக்கம்

அந்தப் போராட்டத்தில் ‘விதைப்பவரும் உழுபவருமே நிலத்தின் உரிமையாளர்கள்’ என்று அவர்கள் எழுப்பிய முழக்கம் மடாதிபதிகளை நடுங்கச்செய்தது. நவம்பரில் அறுவடைக் காலம் வந்தது. பெண்கள் யாரும் நிலத்துக்குள் வந்துவிடாதபடி வயலைச் சுற்றிலும் அடியாட்களை மடம் நிறுத்தியிருந்தது. அதற்கு அஞ்சாமல் வயலில் பெண்கள் இறங்கினர்; தடியடி நடந்தது. பெண்கள், அகிம்சை வழியில் போராடினார்கள். அவர்களின் போராட்டத்தைப் பார்த்து அதற்குப் பின் வந்த நாட்களில் நிலத்தை மடத்துக்குக் கொடுத்த கிராமங்களிலிருந்தும் பெண்கள் திரண்டனர்.

மக்களின் இந்த எழுச்சியைப் பார்த்த மடம், ‘இனி தங்கள் நிலத்தில் யாருக்கும் வேலை கிடையாது’ என்று சொன்னது. மேலும், வெளியூர்களிலிருந்து ஆட்களை வரவழைத்து நிலப் பணிகளை மேற்கொண்டுவந்தது. இவ்வாறு வந்த ஆட்களை ஒரு முறை எருமைகளை விட்டுத் துரத்தினார்கள் பெண்கள். 1979-ல் கிராமப் பெண்கள் எல்லோரும் அந்த மடத்தைத் தாக்கினார்கள். அத்துடன் அந்த மடம் முடிவுக்கு வந்தது.

இவ்வாறு பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு சொற்ப நிலத்தை மட்டும் அரசு சிலருக்கு விநியோகித்தது. ஆனால், அவையும் பயனற்றுப் போயின. காரணம் அந்த மக்கள் பல காலமாக இன்னொருவரின் நிலத்தில் கூலியாட்களாகவே வேலை செய்து பழகியவர்கள். அதனால் தங்கள் நிலத்தை எப்படிப் பண்படுத்துவது என்ற சிந்தனை இல்லாமல் போயிற்று. மேலும், அந்த நிலத்தைச் சரியாகப் பயன்படுத்த அரசும் அவர்களுக்கு எந்தவிதமான உதவியையும் செய்யவில்லை. அதனால் இப்போதைக்கு இந்த வரலாறு மட்டுமே எஞ்சி நிற்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x