

ஆகாய வாணி அறிய
பூமா தேவி அறிய
முப்பத்து முக்கோடி தேவர்கள் அறிய
காமாட்சி விளக்கு அறிய
இங்குள்ள மூத்த திருநங்கைகள் அறிய
நான் இவர்களுக்கு மகளாகச் செல்லச் சம்மதிக்கிறேன்
- ஜமாத்தில் மூத்த திருநங்கை சொல்லச் சொல்ல உறுதிமொழியைப் புதிய திருநங்கையும் ஏற்றாள்.
“சரி, இந்தப் பிஞ்சு திருநங்கைக்கு என்ன பேரு வைக்கப்போறீங்க?”
மூத்த திருநங்கை எல்லாரையும் கேட்டாள்.
“குரு, நீங்களே வைங்க.”
“உன் சொந்த பேரு என்னடி?”
அவள் கூறிய பெயரைக் கேட்டு அவளுக்கு ‘கலா’ என அந்த மூத்த திருநங்கை பெயர் வைத்தாள். எல்லாரும் கலா என்கிற பெயரை உச்சரித்துச் சந்தோஷப்பட்டனர்.
“இங்க பாரு கலா. இவளை அம்மான்னு சொல்லலாம், இல்லைனா குருன்னும் சொல்லலாம் சரியா. ஆனா, அவ பேச்சை மீறிப் பேசுறதோ அவளை அவமதிக்கிறதோ கூடாது. அப்படி மீறி அவளுக்குக் கெட்டப்பெயர் வாங்கிக் கொடுத்தா உனக்கு ஜமாத்துல தண்டு (அபராதம்) விழும்.
நீ உங்க பெத்தவங்க வீட்டுக்குப் போகலாம், வரலாம். அங்கேயேகூட இருக்கலாம். அது உன் இஷ்டம். ஆனா எங்ககூட இருந்தா எங்க பெரியவங்களுக்குக் கட்டுப்பட்டு ஒழுங்கா இருக்கணும் சரியா?
தெருவுல இருக்குற ஆம்பளப் பசங்ககிட்ட கொஞ்சறது, அரைகுறை ஆடையோடு ரோட்டுக்குப் போறதுனு இருக்கக் கூடாது சரியா கலா?”
கலா அங்குள்ள மூத்த திருநங்கைகளைப் பார்த்து, “சரி” என்று பவ்யமாகச் சொன்னாள்.
“என் மகளுக்கு நான் இரண்டு புடவை கொடுக்குறேன். ஜமாத்ல வாங்கிக்கங்க.” கலாவின் குரு ரேகாம்மா புடவையை அவரின் குருவான மேகலாம்மாவிடம் கொடுத்து கலாவிடம் ஒப்படைத்தாள்.
ஜமாத்திற்கு வந்திருந்த எல்லாருக்கும் டீ வாங்கிக் கொடுத்து வழியனுப்பினாள் ரேகாம்மாள்.
| கதையல்ல நிஜம் திருநங்கைகள் கடை கேட்பது சரிதான் என நாங்கள் வாதாடவில்லை. ஆனால், அந்தச் சூழலைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். குடும்பம் திருநங்கைகளை ஏற்றுக்கொள்ளாததே அவர்களின் இந்தச் சூழலுக்குக் காரணம். திருநங்கையாகப் பிறப்பவர்கள் பெண்களைப் போல வாழப்பிறந்தவர்கள். அவர்களை அவ்வாறுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். நம் குழந்தைகளில் ஒருவர் திருநங்கை எனப் பெற்றவர்கள் இதை இயல்பாக எடுத்துக்கொள்வதே இதற்குத் தீர்வு. திருநங்கை எனத் தெரிந்தவுடன் வீட்டில் இருக்க முடியாத சூழலை ஏற்படுத்துவதால் அவர்கள் வெளியேறிய அடுத்த நாளே உலகில் சாதித்து நின்றுவிட முடியாது. அந்த நேரத்தில் அவர்களின் உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றுக்குப் பணம் தேவைப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் விரும்பும் வண்ணம் தங்களை உருவாக்கிக்கொள்ளவும் பணம் வேண்டும். ஒவ்வொரு திருநங்கைக்கும் ஓர் இலக்கு இருக்கும். இந்தத் திடீர் வறுமை அதை உடைத்துவிடும். அந்த நேரத்தில் பெற்றோரும் உடன் பிறந்தோரும் சமூகமும் உதவாத நிலையில் அவர்களின் மனநிலையைப் புரிந்து உடன் வைத்துக்கொள்ளும் மற்ற திருநங்கைகளைக் குடும்பத்தினர் வசைபாடக் கூடாது. திருநர் மக்களின் பாலின உறுதி அறுவை சிகிச்சை Gender Affirming Surgery [GAS] எனக் கூறப்படுகிறது. ஆரம்ப காலத்தில் Emasculation எனப்படும் பாலின உறுதி அறுவை சிகிச்சை திருநங்கைகளுக்கு மேற்கொள்ளப்பட்டது. பிறகு VAGINOPLASTY என்கிற பாலின உறுதி அறுவை சிகிச்சை முறை வந்தது. இதில் Penile Inversion, Sigmoid Colon என இரண்டு வகைகள் நடைமுறையில் உள்ளன. இந்தியாவில் பல மருத்துவர்கள் இதைச் சிறப்பாகச் செய்துவருகின்றனர். மருத்துவர்கள் சிவகுமார், ஜெயராமன், தாமோதரன், சரண் போன்றோர் இந்த அறுவை சிகிச்சைகளைச் செய்வது மட்டுமன்றி இது குறித்துக் கூட்டங்களில் தெளிவாக விளக்குவர். திருநர் மக்களின் Gender Affirmative Surgery மற்றும் Harmonal சிகிச்சை ஆகியவற்றை Trans/Form Health (TFH) என்று ஒரு திட்டமாகவே ‘சகோதரன்’ அமைப்பு கடந்த நான்கு வருடங்களாக நடத்திவருகிறது. இதன் மூலம் சரியான திறன்மிக்க மருத்துவர்களைத் திருநர் மக்களுக்கு அடையாளம் காட்டுகிறது. அரசு மருத்துவர்களிடையே மருத்துவத்துறை செயலாளர் அனுமதியுடன் TFH குறித்துப் புரிதலையும் சகோதரன் அமைப்பு ஏற்படுத்துகிறது. 2007இல் முதல் முறையாகத் திருநங்கை மக்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாகப் பாலின உறுதி அறுவைசிகிச்சை (GAS) முறையைக் கொண்டுவந்த முதல் மாநிலம் தமிழ்நாடு. இது பெரும் வரவேற்பைப் பெற்றது. இதற்குப் பிறகு சத்தீஸ்கர், டெல்லி, ஒடிசா (திருநம்பிகளுக்கு மட்டும்) ஆகிய மாநிலங்கள் இதைக் கொண்டுவந்துள்ளன. கேரளத்தில் தனியார் மருத்துவமனையில் திருநர் மக்கள் GAS சிகிச்சை மேற்கொண்டு அந்தப் பணத்தை அரசிடமிருந்ந்து பெற்றுக்கொள்ளும் முறை உள்ளது. |
கலா, தான் முழுதாகப் பெண்ணாக மாற எவ்வளவு செலவாகும் என்று ரேகாம்மாவிடம் கேட்டாள். ரேகாம்மா சிரித்தபடி அவளை உட்காரவைத்துப் பேச ஆரம்பித்தாள்.
“கலா முதல்ல உன் முகத்துக்குச் சிகிச்சை அளிக்கணும். லேசர் சிகிச்சை செஞ்சி முகத்துல இருக்குற கொஞ்ச நஞ்ச முடிய அகற்றணும்.”
“அது தானாவே போகாதா குரு?”
“அடி செல்லம். முகத்திலும் உடம்பிலும் மாற்றம் தானா வராது. இதுக்கு இருபத்தி அஞ்சாயிரம் ரூபாய் ஆகும்.”
“அந்தக் காலத்துல நாங்கல்லாம் எதுவுமே தெரியாம வசதி வாய்ப்பும் இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டோம். காலம் மாற மாற உங்களுக்கு நிறைய தொழில்நுட்பம் வந்துடுச்சி கண்ணு. அன்னைக்கு எங்களுக்குப் பாதுகாப்பும் இல்லை. இப்போ மாதிரி திருநர் பாதுகாப்புச் சட்டம், நல வாரியம் எல்லாம் அப்போ இல்லாததால நாங்க ரொம்ப அவதிப்பட்டோம்மா. அதனாலதான் நம்மள மாதிரி பொறந்தவங்க அவங்க பிறந்த ஊருல இல்லாம வேற ஊருக்குப் போய் பிழைச்சாங்க.
காலம் மாற மாற எல்லாம் சரியாகுது. இப்போல்லாம் தமிழ்நாட்டுத் திருநங்கைகள் வேற மாநிலத்துக்குப் போறதில்லை. வேற ஊர் திருநங்கைகள்தான் இங்க வராங்க. சரி, விஷயத்துக்கு வரேன். அடுத்து உனக்கு அறுவை சிகிச்சை செய்து உறுப்பு மாற்றம் செய்யணும். அதுக்கு நம்ம தமிழ்நாட்டு அரசு மருத்துவமனையே போதும். இலவசமா செஞ்சிடுவாங்க, செலவு இல்லடி செல்லம்.”
“அரசு ஆஸ்பத்திரில ஆபரேஷன் செய்ய காத்திருக்கணும்னு என் குருபாய் சொன்னா. வரிசைப்படிதான் பண்ணுவாங்களாம்.”
“அதனால என்ன? இப்போ என்ன அவசரம் உனக்கு?”
“இல்ல குரு. எனக்கு இப்போ 24 வயசு. என் இஷ்டப்படி நான் திருநங்கையா மாறிட்டேன். ஆனா, என் குடும்பத்துல அது பிடிக்கலை. தினமும் எனக்கு போன் போட்டு நீ ஆம்பளை பையனா இருன்னு சொல்லிட்டே இருக்காங்க.
எங்க மாமா என்னை எப்படியாவது தூக்கிட்டுப் போய் ஒரு கல்யாணம் பண்ணி வச்சிட்டா எல்லாம் சரியாகிடும்னு நெனைக்குறார். நான் எப்படி ஒரு பெண்ணுக்குத் துரோகம் செய்ய முடியும்? நானும் மனசால ஒரு பொண்ணுதானே. அதனால சீக்கிரம் ஆபரேஷன் செஞ்சிட்டா அவங்க என்னைத் தொல்லை பண்ண மாட்டாங்கல்ல.”
“தனியார்ல பண்ணணும்னா நிச்சயம் ஒரு லட்சத்தில் இருந்து ஒன்னரை லட்சமாவது வேணும்மா.”
கலா மலைத்துப் போனாள். தான் நினைத்த மாதிரி வேலைக்குப் போய் சம்பாதிக்க ரொம்ப நாளாகும் என்று புரிந்தது.
“குரு, நான் எந்த ஏரியாவிற்குக் கடை கேட்கப் போகணும்?”
(தொடரும்)
கட்டுரையாளர், திருநர் செயற்பாட்டாளர்