Last Updated : 28 Jan, 2018 11:38 AM

 

Published : 28 Jan 2018 11:38 AM
Last Updated : 28 Jan 2018 11:38 AM

முகம் நூறு: உழைப்பால் உயர்ந்த தேவி

 

கா

லமெல்லாம் தன்னுடன் இருப்பார் என்று நம்பிய கணவனைத் திருமணமாகி சில ஆண்டுகளிலேயே இழந்தார் தேவி. இரண்டு குழந்தைகளுடன் இருக்க வீடில்லாத நிலையில் வாழ்க்கையே அவருக்குச் சூனியமாகிப் போனது. அந்தக் கையறுநிலையிலும் நம்பிக்கையின் ஒளியை மட்டும் அணையாமல் பாதுகாத்துக்கொண்டார். அந்த ஒளிதான் தேவியின் வாழ்வை இருளில் புதையாமல் பார்த்துக்கொண்டது. அரியலூர் மாவட்டம் முடிகொண்டான் கிராமத்தில் பால் முகவர் தேவி என்றால் தெரியாதவர்கள் குறைவு. அதுவே அவரது வளர்ச்சிக்குச் சான்று.

உதவிய உறவுகள்

கணவருடைய குறைந்த வருவாயிலும் நிறைவாகவே குடும்பம் நடத்தினார் தேவி. இந்நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டுத் தேவியின் கணவர் இறந்துவிட்டார். “ஒரு சின்ன பொருள் வேணும்னாகூட என் கணவர்கிட்டதான் கேட்பேன். ஊர், உலகம் தெரியாமல் வளர்ந்த எனக்கு, அவர்தான் உலகமா இருந்தார். அவர் இல்லாத வெறுமை இப்பவும் என்னை வாட்டிக்கிட்டுதான் இருக்கு” எனச் சொல்லி முடிக்கும் முன்பு தேவியின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

“அவருக்குப் பிறகு ரெண்டு குழந்தைகளை வச்சிக்கிட்டு இந்த உலகத்துல எப்படி வாழப்போறோம்னு எதுவுமே புரியாம இருந்தேன். அப்போதான் என் கணவருக்குச் சேர வேண்டிய ஒரு பகுதி வயல் எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. அதை விற்றுவிட்டு என் அப்பா கொடுத்த கொஞ்ச பணத்தையும் போட்டு முதல்ல சின்னதா வீட்டைக் கட்டினேன். ஆனால், தினசரி செலவுகளுக்கும் குழந்தைகளின் படிப்பு, எதிர்காலத்துக்கும் என்ன செய்யறதுன்னு புரியாம தவிச்சேன்” என்று சொல்லும் தேவிக்கு கறவை மாடுகளை வளர்க்கும் எண்ணம் ஏற்பட்டிருக்கிறது.

உழைப்புக்குக் கிடைத்த உயர்வு

ஏற்கெனவே தன் அம்மா வீட்டில் கறவை மாடுகளை வளர்த்த அனுபவம் தேவிக்கு இருந்திருக்கிறது. அந்தத் தைரியத்தில் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி மூன்று கறவை மாடுகளை வாங்கினார். “கறவை மாடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வது, வைக்கோல், இலை தழைகளைக் கொண்டுவந்து போடுவதுதான் என் தினசரி வேலை. பக்கத்துல இருக்குற கடைகளுக்குப் பால் ஊத்தி என் தினசரி செலவுகளைப் பார்த்துக்கிட்டேன். அப்போதான் ஆவின் நிறுவனத்துக்குப் பால் விநியோகம் செய்யலாம்னு தோணுச்சு” என்று சொல்லும் தேவி, அப்போதே தன் எண்ணத்துக்குச் செயல் வடிவம் கொடுத்தார்.

21chlrd_devi (2)

மூன்று கறவை மாடுகளுடன் தொடங்கிய பயணத்தில் தற்போது 15 கறவை மாடுகளைப் பராமரித்துவருகிறார் தேவி. தன் கிராமத்தில் உள்ள மற்ற பெண்களையும் ஆவின் நிறுவனத்துக்குப் பால் விநியோகம் செய்ய ஊக்கமளித்துவருகிறார். தேவியின் இந்த முயற்சியால் முடிகொண்டான் கிராமத்தில் தற்போது ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், பலர் ஆவின் நிறுவனத்தில் பால் கொண்டுவந்து கொடுக்கவும் தேவி தூண்டுதலாக உள்ளார் .

“என் வாழ்க்கை எப்படி இருக்குமோ எனத் தவித்த நேரத்தில் கறவை மாடுகள்தான் கைகொடுத்து என்னைத் தூக்கிவிட்டன. அதனால்தான் என் ரெண்டு பிள்ளைகளையும் படிக்கவைக்க முடியுது. கொஞ்சம் கடன் இருக்கு. ஆனால், அதைச் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையும் இருக்கு” என்கிறார் திடமாக.

“ஒவ்வொரு பெண்ணும் ஏதோவொரு வகையில் பாதிக்கப்படுறாங்க. அப்படிப் பாதிப்புக்கு ஆளாகும் பெண்கள் மனம் தளரக் கூடாது. வாழ்க்கையில் முன்னேற உழைப்பைக் கையில் எடுக்கணும். விடாமுயற்சியோடு உழைச்சா எதிலும் வெற்றி நிச்சயம்” எனச் சொல்லும் தேவி, அதைத் தன் வாழ்க்கையிலும் நிகழ்த்திக்காட்டியிருக்கிறார்.

டங்கள்: பெ. பாரதி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x