துணிவு தேடித்தந்த வெற்றி

துணிவு தேடித்தந்த வெற்றி
Updated on
1 min read

வீரத்தின் விளைநிலமான எட்டயபுரத்தில் இருந்து விளையாட்டில் பேர்சொல்லும் பெண்ணாக உருவாகிவருகிறார் சுபாஷினி. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் முதுகலை சமூகப் பணி முதலாம் ஆண்டு மாணவி இவர். அண்மையில் கோவா மாநிலத்தில் இளைஞர் மற்றும் விளையாட்டு ஊக்குவிப்பு சங்கம் சார்பில் நடைபெற்ற தேசியத் தடகள விளையாட்டுப் போட்டியில் 1,500 மீட்டர் ஓட்டப் போட்டியில் முதலிடம் பெற்றுத் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

சுபாஷினியின் தந்தை எட்டயபுரம் பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநராகப் பணியாற்றிவருகிறார். பள்ளி நாள்களில் விளையாட்டின் மீது ஆர்வமின்றி இருந்த சுபாஷினி, கல்லூரியில் சேர்ந்த பிறகும் விளையாட்டில் இருந்து தள்ளியே இருந்தார்.

“நான் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது கல்லூரி விளையாட்டு விழாவில், 1,500 மீட்டர் ஓட்டப்போட்டியில் நண்பர் வற்புறுத்தலால் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தையும் பிடித்தேன். எந்தவிதப் பயிற்சியுமின்றி இரண்டாவது இடத்தைப் பிடித்ததைப் பார்த்த என் நண்பர், தன் நண்பர்களோடு எனக்குப் பயிற்சி அளிப்பதாகக் கூறினார். காலை ஐந்தரை மணிக்குத் தொடங்கும் பயிற்சி எட்டு மணி வரையும் மாலை நான்கரை மணி முதல் ஆறு மணி வரையும் நடக்கும்” என்று சொல்லும் சுபாஷினிக்கு அதன் பிறகு கோவா மாநிலத்தில் நடைபெற்ற இளைஞர் மற்றும் விளையாட்டுத் தேசியக் கூட்டமைப்புக் கோப்பைக்கான தேசியத் தடகள விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பங்கேற்க அவருடைய நண்பர்கள் உதவினர். 1,500 மீட்டர் ஓட்டப் போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்றவர் சுபாஷினி மட்டும்தான்.

“தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் விளையாட்டுச் செயலாளர் நாகராஜன் தலைமையில் கோவாவுக்குச் சென்றோம். இதில், வெற்றி பெற்றதன் மூலம் நேபாளத்தில் உள்ள காத்மாண்டுவில் நடைபெறும் சர்வதேசப் போட்டியில் பங்கேற்கத் தகுதிபெற்றிருக்கிறேன்.

துணிவும் எண்ணத்தில் தெளிவும் இருந்தால் வெற்றிபெறலாம் என்பதைப் புரிந்துகொண்டேன். வெற்றிகளைத் தக்கவைக்கும் தகுதிபெறுவதற்காக திருநெல்வேலியில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்திருக்கிறேன். எட்டயபுரத்தின் அடையாளமான பாரதி சொல்லிச் சென்றதைப் போல் புதுமைப் பெண்ணாக இருக்க முயல்வேன்” என்று புன்னகைக்கிறார் சுபாஷினி.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in