திருநம்பியும் திருநங்கையும் 12: எங்களுக்காக யார் பேசுவார்?

திருநம்பியும் திருநங்கையும் 12: எங்களுக்காக யார் பேசுவார்?
Updated on
3 min read

இன்னைக்கு எங்களோட மாதாந்திரக் கூட்டம். நிர்வாகிகள் எல்லாம் வந்தாச்சு.

‘இந்த அறக்கட்டளை முழுக்க திருநங்கைகளின் வளர்ச்சிக்காக நடைபெறுகிறது என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஏரியா பொறுப்பாளர்கள். எனவே, உங்கள் பொறுப்பை உணர்ந்து பணி செய்யுங்கள். பல வருடங்களாக இந்த அமைப்பு திருநங்கைகளின் நலனுக்காகச் செயல்படுகிறது. இதை உருவாக்கி, கஷ்டப்பட்டு இந்த நல்ல நிலைக்கு வந்துள்ளோம்’ என்று தலைவர் உரையை முடித்தார்.

செயலாளர் பேசும்போது, ‘பாரபட்சம் இல்லாமல் நமது திட்டங்களை மக்களுக்குக் கொண்டு செல்லுங்கள். நீங்களும் திருநங்கைகள். நீங்கள் ஜமாத்தில் ஒரு வீட்டில் பெண்ணாக, மருமகளாக இருக்கலாம். அதற்காக ஒரு வீடு சார்ந்தே பணிகள் இருந்துவிடக் கூடாது. அனைவருக்கும் உங்கள் சேவை சென்றடைய வேண்டும். பொதுப்பணியைப் பொதுவாகப் பார்க்கவேண்டும்’ என்று அனைவருக்கும் அறிவுரை கூறினார்.

தொடர்ந்து மற்ற ஐந்து நிர்வாகிகளும் பேசி முடித்தனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் எங்கள் அமைப்பு செயல்படுத்தும் திட்டங்களின் போக்கை மிகத் தெளிவாக விவரித்தார். நோய்த் தடுப்புப் பணிகளில் இந்த மாதம் எத்தனை பேர் பயனடைந்தார்கள், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் மூலமாக எடுத்த நல்ல முயற்சிகள் என்னென்ன என்பதையும் விளக்கினார். சமூக நலத் திட்டங்களை எவ்வளவு பேர் இந்த மாதம் எடுத்துக் கொண்டனர் என்பதையும் ஒருங்கிணைப்பாளர் மேக்னா தெளிவாக விளக்கினார். தலைவர் அம்மா மேக்னாவைப் பாராட்டினார்.

எங்கள் அறக்கட்டளையின் பொருளாளர் மயூரி அம்மா மிகவும் பொறுமையானவர். மாதக் கூட்டங்களில் மட்டுமே நிதிநிலை குறித்து அவர் பேசுவார். இந்த மாதம் நோய்த் தடுப்புப் பணி, சமூக நலத் திட்டங்களைப் பெற்றுத்தருதல் என இரண்டு திட்டங்களுக்கும் செய்த செலவு, அவற்றுக்கான ரசீது ஆகியவற்றைப் பொருளாளரிடம் ஒப்படைத்தார் கணக்காளர் நிர்மலா. சில பில் கைக்கு வராததால் அவர்களுக்குப் பணம் தராமல் நிறுத்திவைத்திருப்பதாகக் கூறினார்.

‘நாம் பல வருடங்களாக இந்த அமைப்பை நடத்திவருகிறோம். FCRA பெற்று வெளிநாட்டு நிதி உதவியை அமைப்புக்குப் பெற்றுத்தர முன்வர வேண்டும். அதை விடுத்து நாம் பின்தங்கி இருக்கக் கூடாது’ என ஒட்டுமொத்த நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர்.

இந்த மாதம் நம் நோய்த் தடுப்புப் பணிக்கான ஆய்வுக் கூட்டத்திற்கு மூன்று பேரை டெல்லிக்கு அழைத்துள்ளதாக ஒருங்கிணைப்பாளர் கூறினார். நிர்வாகிகளில் அடிப்படை உறுப்பினரில் இருந்து மாலா, ஒருங்கிணைப்பாளர் மேக்னா, பயனாளிகளில் ஒருவராக ஒரு திருநங்கை என மூன்று பேருக்குப் போக வர விமான டிக்கெட் போட்டுவிடும்படி தலைவர் கூறினார்.

“நம்மளோட மூன்று கிளை அலுவலகத்தின் நிர்வாகிகள் வந்திருக்கீங்க அங்கே நம்ம திட்டங்கள் எப்படிப் போகுது?” எனத் தலைவர் கேட்டதும், எந்தப் பிரச்னையும் இல்லை எனவும் திட்டங்கள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் அவர்கள் கூறியது நிர்வாகிகளுக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது.

அரசு நலத் திட்டங்களைச் செய்துவரும் பணியாளர்களிடம் அதில் மக்கள் பயனடைந்த விவரங்களைக் கேட்டனர். இந்த அறக்கட்டளையில் அரசுத் திட்டங்களைப் பெற்றுத்தரும் பொறுப்பில் எட்டுப் பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் தமிழக அரசின் திட்டங்களை அனைத்துத் திருநங்கைகளுக்கும் பெற்றுத் தருகின்றனர்.

’நமது அரசு பல நன்மைகளை நம் மக்களுக்குச் செய்து வருகிறது. எனவே அரசுக்கு நாம் கடமைப்பட்டு இருக்கிறோம்’ என்று தலைவர் கூறும்போது இடைமறித்த அர்ச்சனா, தான் விண்ணப்பித்த மறுநாளே தனக்கு ரேஷன் அட்டை கிடைக்காதது குறித்துக் கோபத்துடன் பேசினார். “நாங்க திருநங்கைனுதானே இவ்ளோ லேட் பண்றீங்கன்னு சம்பந்தப்பட்ட அதிகாரியை அவங்க அலுவலகத்துல வச்சே சத்தம் போட்டேன். அதுக்கு அப்புறம் பயந்துபோய் மறுநாளே கார்டு கொடுத்துட்டாரு” என்று அர்ச்சனா சொன்னதும் எல்லா நிர்வாகிகளும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ‘நம்ம மாநிலத்துல திருநங்கைகள் மட்டும் வசிக்கலை; பல கோடிப் பேரு வாழறாங்க. அந்த வரிசைப்படி நமக்குக் கிடைக்காது. இன்னும் சொல்லப்போனால் நமக்குப் பல இடங்களில் முன்னுரிமையுண்டு. முதல் நாள் அப்ளை பண்ணிட்டு மறுநாளே ரேஷன் அட்டையை எதிர்பார்க்குறது அபத்தம்” என்று சொன்ன நிர்வாகிகள், அதிகாரிகளிடம் கோபமாகப் பேசிய அர்ச்சனாவை 15 நாள்கள் சஸ்பெண்ட் செய்வதாகக் கூறியது யாரும் எதிர்பாராத ஒன்று.

(தொடரும்)

கட்டுரையாளர், திருநர் செயற்பாட்டாளர்.

************************************************

கதையல்ல நிஜம்

* இந்தியா முழுவதும் திருநங்கைகள் தொண்டு நிறுவனம் நடத்திவருகின்றனர். அதை Non Govermental Organisation என்கிற பொருளில் அறக்கட்டளை அல்லது சங்கமாகப் பதிவுசெய்வர். அதில் நிர்வாகிகளாகப் பெரும்பாலும் திருநங்கைகளே இருப்பார்கள்.

* தேசிய அளவிலும் உலக அளவிலும் நிதியுதவி பெற்றுத் திருநங்கை மக்களுக்குப் பணிகளை இவர்கள் செய்துவருகின்றனர். தங்களுக்கான தேவைகளை அமைப்புகளின் நிர்வாகிகள் மாநில, மத்திய அரசிடம் தொடர்ந்து பேசி பல்வேறு திட்டங்களைத் திருநங்கை மக்களுக்குப் பெற்றுத்தருகின்றனர்.

* தங்களின் கூட்டங்களுக்கும் விழாக்களுக்கும் சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோரை அழைத்துப் பேசவைக்கின்றனர். அரசு அதிகாரிகளும் அமைப்பு நடத்தக்கூடியவர்களிடம் நல்லவிதமாக நடந்துகொள்வர்.

* தமிழகத்தில் திருநங்கைகளின் அமைப்புகள் அதிகமாகத் தொடர்பில் இருப்பது சமூக நலத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகும். ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் ஒருவர் இருப்பார். அவர் மூலமாக அரசின் திட்டங்களைத் திருநங்கைகளுக்கு இவர்கள் வாங்கித் தருகின்றனர்.

* மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் கீழ் திருநங்கைகளுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த அமைச்சகத்தோடும் இந்திய அளவில் திருநங்கை அமைப்புகள் தொடர்பில் உள்ளன.

* திருநங்கை அமைப்புகள் மூலம் திருநங்கைகளின் பல்வேறு பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்படுகின்றன.

* மாநில அளவிலும் தேசிய அளவிலும் திருநர் கூட்டமைப்புகள் உள்ளன. திருநர் பாதுகாப்புச் சட்டம் போன்றவற்றில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர தேசிய அளவில் திருநர் அமைப்புகள் ஒன்றுதிரண்டு போராட்டங்கள் நடத்தியதும் உண்டு.

* தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, திருநங்கைகளின் நலனில் முக்கியப் பங்காற்றுகிறது. பல்வேறு மாவட்ட திருநங்கைகளை நன்கறிந்து அவர்களின் தேவைகளை உடனுக்குடன் அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறது இந்தத் துறை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in