

என் நான்கு வயது மகளைச் சில நாள்களுக்கு முன்னர் வீட்டின் அருகிலுள்ள பூங்காவிற்கு அழைத்துச் சென்றிருந்தேன். சிறார்கள் விளையாடும் ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு முதலியவை அங்கே இருந்தன. சட்டை, பாவாடை அணிந்திருந்த என் மகளால் ஆண் பிள்ளைகளைப் போல இயல்பாகச் சறுக்கி விளையாட முடியவில்லை. ஒவ்வொரு முறை சறுக்கும்போதும் பாவாடையை உடலோடு ஒட்டிவைத்து உட்கார வேண்டியிருந்தது. ஆண் பிள்ளைகள் போல் ஏறியவுடன் அவளால் சறுக்கி விளையாட முடியவில்லை. ஒவ்வொரு முறையும் உடை மீது கவனம் செலுத்தியபடியே இருந்தாள்.
இதே நிலைமைதான் பள்ளிக்கூடத்திலும். குட்டைப் பாவாடை அணிந்து பள்ளிக்குச் செல்லும்போது இயல்பாக உட்கார முடியாது. உடல் குறித்த அச்சவுணர்வு அல்லது கவனத்துடனேயே செயல்பட வேண்டியிருக்கிறது.
துணிக் கடைகளுக்குச் சென்றால் ஒரு வயதுக் குழந்தைக்குக் கூடப் பாலினம் சார்ந்து உடைகள் அடுக்கப்பட்டுள்ளன. அதிலும் பெண் குழந்தை களுக்கான ஆடையில் பூக்கள், ஜிகினா என்று அலங்காரங்கள் கூட்டப் பட்டுள்ளன. ஒரே வயதுடைய ஆண் - பெண் குழந்தைகளின் ஆடைகளில், அளவு ஒன்றாக இல்லை. பெண் குழந்தைக்கான உடை இறுக்கமானதாக உள்ளது. பெண் குழந்தைகள் என்றால் இந்தவிதமான உடைகளைத்தான் அணிய வேண்டும் என்று அதைத் தயாரிப்பவர்கள்தாம் முடிவுசெய்கின்றனர்
உடை என்பது உடலை மறைப்பதற்காக, உடலுக்கு அழகு சேர்ப்பதற்காக என்பதைத் தாண்டி அதை அணிந்துகொள்வதில் செளகரியமும் இருக்க வேண்டும். அப்படிச் செளகரியமில்லாத ஆடைகளைக் குழந்தை பார்த்தவுடன் ஆசைப்படுகிறது என்பதற்காகப் பெற்றோர்கள் அதை அனுமதிக்கக் கூடாது. அது சிறுவயதிலேயே உடல் மீதான கவன உணர்வைப் பழக்கி, அவர்களின் இயல்புத் தன்மையைப் பறித்துவிடுகிறது. குழந்தைகளுக்கான ஆடைகளில் பாலினச் சமத்துவம் வருவது எப்போது?
- இராகிலாதேவி, அரும்பாக்கம், சென்னை.