திருநம்பியும் திருநங்கையும் 11: தாய்மை என்பது அனைவருக்கும் பொது

திருநம்பியும் திருநங்கையும் 11: தாய்மை என்பது அனைவருக்கும் பொது
Updated on
3 min read

“மகா அக்கா, நீங்கதான் என் குழந்தைக்குப் பேர் வைக்கணும். இந்தக் குழந்தைக்கு நீங்கதான் தாய். நீங்க போட்ட சோத்துலதான் நானும் வளர்ந்தேன், என் வயித்துல இருக்குற குழந்தையும் வளருது.”

“அடி பைத்தியம், நீ என் வீட்டுல குடி இருக்குற பொண்ணு. உன்னை நல்லா பார்க்கறதால எப்படி நான் தாயாக முடியும்? முதல்ல நல்லபடியா குழந்தையைப் பெத்துக்கோடி.”

“உன் புருஷன் எப்போ வரான் அனுஷா?”

“அவரு இந்த மாசம் வராருக்கா.”

“அவன் வந்தவுடனே உக்காந்து பேசி நல்ல நாளு பாத்து கல்யாணத்தைப் பண்ணிக்கோடி. இந்த நிலைமையில் விமரிசையா கல்யாணம் பண்ணிக்க வேண்டாம் புரிஞ்சுதா?”

அனுஷா வெட்கத்தோடு சரி என்றாள்.

இந்த வீட்டுக்கு அவள் அம்மாவோடு குடிவரும்போது அனுஷாவுக்கு 16 வயது. இப்போ அனுஷா 19 வயதுப் பெண். ஒரு அண்ணன் மட்டும்தான், அப்பா கிடையாது. வட மாநில ஆளுங்களுக்கு வாடகைக்கு விடாதேன்னு என் அக்கம் பக்கத்தினர் என்னைத் தடுத்தாங்க. நான் கேட்கலை. இது என் சொந்த வீடு, நான் யாரை அனுமதி கேட்கணும்?

அது மட்டும் இல்லீங்க, நான் திருநங்கையா மாறிட்டேன்னு இந்த ஊர்ல என்னை அவமானப்படுத்தி படிக்க விடாம 20 வருசத்துக்கு முன்னாடி வீட்டை விட்டு வெளியே அனுப்பும்போது, என்னை பாம்பேல வாழ வச்சது வடமாநிலத்துக்காரங்கதானே. பாம்பேல கொழந்த பொறந்தாலும் கல்யாணம் நடந்தாலும் ஆசிர்வாதம் பண்ணப் போவேன். அதுல கெடச்ச பணத்துலதானே இந்த வீட்டையே வாங்கினேன்.

எத்தனை திருநங்கைகள் எந்தெந்த ஊரிலோ பிறந்து ஒதுக்கப்பட்டு பாம்பேல வாழுறாங்க தெரியுமா? நான் பாம்பேல வாழ்ந்ததால எனக்குத் தமிழ் தவிர தெலுங்கு, இந்தி, கன்னடம்னு மொத்தம் நாலு மொழி தெரியும். வட மாநிலம், தென் மாநிலம் அந்த சாதி, இந்த மதம்னு நாங்க (திருநங்கைகள்) பார்க்க மாட்டோம். இதெல்லாம் இல்லாதது மனித குலத்துக்கு எவ்ளோ பெருமை தெரியுமா?

ஆனா, இதெல்லாம் பார்க்காம வாழுற எங்களை மனிதனாவே நெறைய பேரு நெனைக்கறது இல்ல. பல குடும்பங்களில் இருந்து இனரீதியாகக் காயப்பட்டு ஒன்று சேர்ந்த எங்களுக்கு யாரையுமே பிரிச்சிப் பார்க்கத் தோணலீங்க.

இப்போ என் வீட்டுல என்னோட ரெண்டு தம்பிகளும் ஒரு தங்கையும் என் எல்லாச் சொந்தங்களும் என்னை நல்லா புரிஞ்சிக்கிட்டாங்க. எனக்கு எல்லாவிதத்திலும் உதவியா இருக்காங்க.

“அக்கா அவரு நம்பருக்கு ஒரு போன் போடுங்களேன். ரெண்டு நாளா நான் பேசவே முடியல. தொடர்பு எல்லைக்கு வெளில இருக்காருனே போன்ல சொல்லுது.”

நானும் கபீர் நம்பருக்கு போன் போட்டேன். முதல் ரிங் போச்சி. உடனே கட் ஆயிடுச்சி.

“எனக்கும் தொடர்பு எல்லைக்கு வெளில இருக்கான்னுதான் சொல்றாங்க அனுஷா. சரி லைன்ல வருவான் விடு” என்று அனுஷாவைச் சமாதானப்படுத்தினேன்.

ஆனால், நான் சமாதானம் ஆகவில்லை. ஏதோ தவறு நடப்பதுபோல் என் மனம் குழம்புகிறது. ஒரு ரிங் போய் ஏன் போன் கட் ஆனது? அனுஷா நம்பரையும் என் நம்பரையும் ‘பிளாக்’கில் போட்டிருக்கிறான் இந்த கபீர் என்கிற சந்தேகம் வந்தது எனக்கு. அவன் அனுஷாவுக்குத் துரோகம் செஞ்சிட்டான்னு நான் உறுதி பண்ணேன். பெண்கள் விஷயத்தில் சில ஆண்கள் இப்படித் துரோகம் செய்வது என்ன நியாயம்?

“மகாம்மா, நான் இப்போ என்ன பண்றதுன்னு தெரியலை. என் பொண்ணு ஏமாந்துட்டா. அந்த கபீர் நல்லவன் மாதிரி வந்து என் மகளுக்குக் குழந்தையையும் கொடுத்துட்டு இப்படி ஓடிப்போய்ட்டானே”ன்னு அனுஷா அம்மா அழுதாங்க. போலீஸில் புகார் அளிக்கலாம் என்றால் மறுத்துவிட்டார்கள்.

“அக்கா அதெல்லாம் வேண்டாம். விருப்பம் இல்லாமல் ஓடிப் போனவனோட வாழ எனக்கு விருப்பமில்லை. நான் தனியாவே வாழ்ந்துடுறேன். என் குழந்தையை மட்டும் நீங்க வளர்த்துக்கோங்க” ன்னு அனுஷா சொன்னா.

“மகாம்மா, நீங்க எங்களுக்கு எவ்வளவோ உதவி பண்ணீங்க. குழந்தை பிறக்குற வரை உதவி செய்யுங்க. அப்புறம் அனுஷா சொன்ன மாதிரி அந்தக் குழந்தையை நீங்க வளர்த்துக்கோங்க. நாங்க எங்க சொந்த ஊருக்கே போயிடறோம். நாங்க குழந்தையைப் பார்க்கக்கூட மாட்டோம். அனுஷாவுக்கு நான் ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சிடுறேன்.”

எனக்குக் குழப்பமா இருந்துச்சி. ஆனாலும் இந்தச் சின்ன வயசுல அனுஷா துணை இல்லாம இருப்பாளே, அவளுக்குக் கல்யாணம் ஆவறது நல்லதுன்னு நானும் குழந்தையை வளர்க்க ஒப்புக்கிட்டேன். அனுஷா விரும்பினா குழந்தையை எப்போ வேணும்னாலும் வந்து பார்க்கட்டும்னு சொல்லி அவங்களை ஊருக்கு அனுப்பி வச்சேன். குழந்தை பிறந்து ஆறு மாசம் ஆகுது. அனுஷாவுக்கு அடுத்த மாசம் கல்யாணம்.

என்னை விசாரித்த பெண் காவல் அதிகாரியிடம் இதையெல்லாம் நான் சொன்னேன். மொத்தத்தையும் பொறுமையாகக் கேட்டவங்க, “உங்களுக்குக் குழந்தையை எடுத்து வளர்க்க உரிமை இல்லை. இதை அரசு குழந்தைகள் பாதுகாப்பு மையம் விசாரித்து முடிவு செய்யும்”னு சொன்னாங்க.

“நான் தத்து எடுத்தது தப்பா மேடம்?”

“நீங்க எப்படி ஒரு குழந்தையை வளர்க்க முடியும்? உங்களுக்கு யாரும் உதவிக்கு இல்லை. நீங்களே யாசகம் கேட்டு சாப்புடுறீங்க. நீங்க என்ன வேலை செஞ்சு அந்தக் குழந்தையைக் காப்பாத்துவீங்க? சட்டம் உங்களுக்குத் தத்து எடுக்கும் உரிமையை வழங்கலை.”

“யாசகம் கேட்கறதுக்காகக் குழந்தை பெத்துக்கறவங்க உண்டு. ஆனா, நான் இந்தக் குழந்தையைப் படிக்க வச்சி நல்ல ஆளா உருவாக்குவேன். அனுஷா பாவம். அவளால இந்தக் குழந்தையைப் பத்தி வெளியில் சொல்ல முடியாத நிலை. ஆனா நீங்க கூப்பிட்டுக் கேட்டா சொல்லுவா.”

நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் காவல் அதிகாரி குழந்தையை என்னிடம் கொடுக்க மறுத்துவிட்டார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

கதையல்ல நிஜம்: குழந்தையைத் தத்தெடுக்கும் உரிமை திருநர் மக்களுக்குக் கிடையாது. இதற்காகச் சில வழக்குகள் நீதிமன்றங்களில் உண்டு. single parent எனப்படும் தனித்து வாழும் நபர்களுக்குத் தத்தெடுக்கும் உரிமை எப்படி இருக்கிறதோ அதன் அடிப்படையில் திருநங்கைகளுக்குக் குழந்தையைத் தத்தெடுக்கும் உரிமையைக் கொடுக்கலாம்.

l இந்தக் கதையில் வரும் திருநங்கை மகாவுக்கு அவருடைய குடும்பம் ஒத்துழைப்பது, மகாவின் வருமானம், அவருக்குப் பிறகு அந்த குழந்தைக்கு உண்டான பாதுகாப்பு போன்றவை நன்றாக இருக்கும்போது அவரைப் போன்ற திருநங்கைகளை மனதில்கொண்டு மத்தியப் பெண்கள் - குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், CARA (Central Adoption Resources Authority) போன்றவை திருநங்கை மக்களுக்குத் தத்தெடுக்கும் உரிமையைக் கொண்டுவரலாம்.

l இக்கதையின் மூலம் திருநங்கைகளின் பொதுச் சிந்தனை, உதவும் குணம் ஆகியவற்றை நாம் அறிய முடிகிறது. பல திருநங்கைகள் தங்களின் உடன் பிறந்தோரின் குழந்தைகளை வளர்த்து நன்கு படிக்க வைத்துள்ளனர். அவ்வாறு திருநங்கைகளின் அரவணைப்பில் வளர்ந்த பெண் குழந்தைகள் நல்ல இடங்களில் திருமணம் முடித்துச் சிறப்பாகவும் வாழ்கின்றனர்.

l பிறந்த குழந்தைகளை ஆசிர்வாதம் செய்வது மட்டுமல்லாமல் அந்தக் குழந்தையைச் சட்டப்படி வளர்த்து சிறந்த தாயாக உருவாகும் வாய்ப்பைப் பல திருநங்கைகள் எதிர்பார்க்கின்றனர்.

(தொடரும்)
கட்டுரையாளர், திருநர் செயற்பாட்டாளர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in