மகளிர் திருவிழா: மகிழ்ச்சி வெள்ளத்தில் மதுரை வாசகிகள்

மகளிர் திருவிழா: மகிழ்ச்சி வெள்ளத்தில் மதுரை வாசகிகள்
Updated on
2 min read

‘இந்து தமிழ் திசை’யின் ‘பெண் இன்று’ சார்பில், மதுரை மாநகரில் மகளிர் திருவிழா கடந்த டிசம்பர் 3 ஞாயிற்றுக்கிழமையன்று கோலாகலமாக நடைபெற்றது. கடலூர் மகளிர் திருவிழாவைத் தொடர்ந்து மதுரையில் நடைபெற்ற மகளிர் திருவிழாவில் மதுரை மட்டுமல்லாமல் திருச்சி, திண்டுக்கல், பழனி, விழுப்புரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் வாசகியர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மதுரை சரக டிஐஜி ஆர்வி. ரம்யா பாரதி, மனநல மருத்துவர் கௌதமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

பெண்களுக்குத் தன்னம்பிக்கை அவசியம்: மதுரை சரக டிஐஜி ஆர்வி. ரம்யா பாரதி பேசுகையில், “நேரம் கிடைக்கும்போது, புத்தகங்களைப் படியுங்கள். புத்தகங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும். சரியானதைத் திரும்பத் திரும்பச் செய்வதால் வெற்றி கிடைக்கும். வெற்றி என்பது ஒரு செயல்பாடாக அல்லாமல் ஒரு பழக்கமாக மாறவேண்டும். சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்பது என் சிறு வயது குறிக்கோள். அதற்காக உழைத்தேன், வெற்றிபெற்றேன். அவரவர் வாழ்க்கைக்கு ஏற்ப குறிக்கோளை வகுத்துக்கொள்ளுங்கள். நம்மால் முடியும் என அடியெடுத்து வையுங்கள். எதிலும் வெற்றிபெற குறுக்கு வழி நிரந்தரமல்ல. கடினமான பாதையைக் கடந்தால் இலக்கை அடையலாம்.

பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் முக்கியம். காலையில் பயிற்சி செய்தால் உற்சாகமும் ஆற்றலும் கிடைக்கும். ஆரோக்கிய வாழ்வுக்கு உடற்பயிற்சி முக்கியம். நாம் எப்போதும் அடுத்தவரை சார்ந்து இருக்கக் கூடாது. ஒவ்வொருவருக்கும் சமூகப் பொறுப்பு, சமூக அடையாளம் தேவை” என்று தன் வாழ்க்கையையே உதாரணமாக முன்வைத்துப் பேசினார்.

குழந்தைகளுக்குக் காதுகொடுங்கள்: பதின்பருவக்குழந்தைகளைச் சமாளிப்பது எப்படி என்பது பற்றி மனநல மருத்துவர் கௌதமி பேசினார். “பதின் பருவத்தில் குழந்தைகள் தங்கள் உடலிலும் மனதிலும் பல மாற்றங்களை உணர்வார்கள். இவை அதிகமான மனக் குழப்பங்களைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தக்கூடும். பெற்றோர் அந்தக் குழப்பத்தைப் போக்க உதவியாக இருக்கவேண்டும். இந்தப் பருவத்தில்தான் குழந்தைகள் தன்னிச்சையாக முடிவெடுக்கத் தொடங்குவார்கள். அப்போது பெற்றோர் அம்மாவாக, அப்பாவாக மட்டுமின்றி, நண்பர்களாக இருந்து நம்பிக்கை அளிக்க வேண்டும். பதின் பருவக் குழந்தைகளுக்கு செல்போன் மிக ஆபத்தாக உள்ளது. பல குழந்தைகள் போனுக்கு அடிமையாகி மனநல சிகிச்சைக்கு வருகின்றனர். செல்போன் பயன்பாடு அவர்களது படிப்பை அதிகமாகப் பாதிக்கிறது. செல்போனை மறக்கும் அளவுக்குக் குழந்தைகளுக்கு அதற்கு நிகரான வாய்ப்புகளைப் பெற்றோர் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். என்ன காரணத்தால் செல்போனுக்கு அடிமையாகின்றனர் என்பதைக் கவனிக்க வேண்டும். குழந்தைகள் ஏதாவது பேசவந்தால் இதெல்லாம் ஒரு பிரச்சினையா என அலட்சியப்படுத்தக் கூடாது. அந்த வயதில் அவர்களுக்கு அது பிரச்சினைதான். அதனால், குழந்தைகள் கூறும் விஷயங்களைக் காது கொடுத்துக் கேட்பது முக்கியம். குழந்தைக்குப் பாதுகாப்பான இடமாக வீடு இருக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.

பெண்கள் எந்தெந்த வகையில் சேமிக்கலாம் என்பது குறித்து குட்வில் வெல்த் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் மதுரை மண்டல கிளை மேலாளர் எம். மகாலட்சுமி விளக்கினார். 100 ரூபாயைக்கூடப் பங்குச் சந்தை மூலம் சேமிக்கலாம் என்று சொன்ன அவர், குழந்தைகளுக்கும் பங்குச் சந்தை பற்றி சொல்லித்தர வேண்டும் என்றார். பெண்கள் பொருளாதாரச் சுதந்திரத் துடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் உணர்த்தினார்.

தன் கணவரது மறைவுக்குப் பிறகு இரண்டு குழந்தைகளோடு பரிதவித்த சுமா, 25 ஆண்டுகளாகக் கறிக்கடை நடத்திவருவது குறித்து நம் வாசகியருடன் பகிர்ந்துகொண்டார்.

களைகட்டிய போட்டிகள்: கருத்துக்குச் சிந்தனையளித்த கருத்துரை களைத் தொடர்ந்து வாசகியரை உற்சாகமூட்டும் வகையில் காலையிலேயே போட்டிகள் தொடங்கிவிட்டன. போட்டிகளில் வெற்றிபெற்றவர்களோடு பங்கேற்ற அனைவருக்கும் பரிசு என்பது வாசகியரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. போட்டிகளுக்கு நடுவே தேனி தமிழ் மலர் கலைக்குழுவினரின் பறையாட்டம், ஒயிலாட்டம் போன்றவை வாசகியரையும் நடனமாட வைத்தன. அந்த உற்சாகத் துள்ளலுக்கு இடையே மதுரை குறித்து பொது அறிவுக் கேள்விகள் கேட்கப்பட்டு, சரியாகப் பதில் அளித்தவர்களுக்கு உடனடியாகப் பரிசுகள் வழங்கப்பட்டன. மதிய உணவுக்குப் பிறகும் போட்டிகள் களைகட்டின. மகளிர் திருவிழாவின் முக்கிய அம்சமாக, இரண்டு வாசகியருக்கு பம்பர் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் ‘ரிட்டர்ன் கிஃப்ட்’ வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுடன் உஜாலா லிக்விட் டிடெர்ஜென்ட் இணைந்து வழங்கியது. குட்வில் கமாடிட்டி, நாராயணா பியர்ல்ஸ், வாக்ஹ் பக்ரி, மதுரை கேகே. நகர் ரிவப் ஸ்டோர்ஸ் ஆகிய நிறுவனங்களும் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்றன. சின்னத்திரை தொகுப்பாளினி தேவி கிருபா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in