இது தன்மானப் பிரச்சினை

இது தன்மானப் பிரச்சினை
Updated on
2 min read

மணமகன் வீட்டில் கழிப்பறை இல்லை என்பதற்காக மணமகனின் கிராமத்துக்குச் செல்ல மறுத்த மணமகள் தொடங்கி கழிப்பறையைக் காரணமாகச் சொல்லி திருமணத்தையே நிறுத்திய பெண்கள் குறித்த செய்திகள் வலம்வருவதை நாம் படித்திருக்கலாம். கழிப்பறைக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவத்தைப் பெண்கள் கொடுப்பதற்குக் காரணம், அது சுகாதாரம் சார்ந்தது மட்டும் அல்ல, பெண்களின் தன்மானம் சார்ந்தது.

உலகமெங்கும் 350 கோடி மக்கள் இன்றும் பாதுகாப்பான கழிப்பறை இல்லாமல் இருக்கிறார்கள். பாதுகாப்பற்ற கழிப்பறைகளைப் பயன்படுத்துவதால் எண்ணற்ற நோய்களுக்கும் அவர்கள் ஆளாகிறார்கள்.

‘ஸ்வச் பாரத்’ திட்டத்தைத் தொடங்கிய ஐந்தாவது ஆண்டு (2019), காந்தியடிகளின் பிறந்தநாள் அன்று, இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் திறந்தவெளிக் கழிப்பிடப் பயன்பாடு ஒழிக்கப்பட்டுவிட்டது என்று பெருமையுடன் அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள 25 சதவீத மக்கள் இன்னும் திறந்தவெளிக் கழிப்பிடங்களைத்தான் பயன்படுத்துகிறார்கள் என்றது அதற்குப் பின்னர் ஒன்றிய அரசு வெளியிட்ட தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு ஆய்வறிக்கை (NFHS 5). அதிலும் பிஹார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் இந்த விழுக்காடு 40க்கும் அதிகமாக இருந்தது.

அரசு கண்காணிக்க வேண்டும்: தமிழ்நாட்டில் பொதுக் கழிப்பிடங்கள் முறையாகப் பராமரிக்கப்படாமலும் பயன்படுத்தும் தரமின்றியும் உள்ளன. வெளியூர்ப் பயணங்களிலோ பேருந்து நிற்கும் இடங்களில் கழிப்பறை வசதி பற்றிச் சொல்லவே வேண்டாம். அவ்வளவும் முகம் சுளிக்க வைப்பவை. பணிக்குச் செல்லும் பெண்கள், குறிப்பாக முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் கழிப்பறை இல்லாமையால் படும் அவதிக்கு அளவே இல்லை. நமது தெருக்களின் வழியே காய்கறி, பழங்கள் விற்கும் பெண்கள் அவசரத்துக்கு என்ன செய்வார்கள் என்று நாம் என்றாவது யோசித்திருக்கிறோமா?

நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர்களாகப் பெண்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர். பெரும்பாலான கடைகள், குறிப்பாக சென்னையில் உள்ள நியாயவிலைக் கடைகள் தனியார் கட்டிடங்களில் இயங்குகின்றன. இவற்றின் உரிமையாளர்கள் கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதில்லை. காலையில் இருந்து மாலை வரை நியாயவிலைக் கடைகளில் இயற்கை உபாதைகளை அடக்கிக்கொண்டு பணிபுரியும் பெண்களின் நிலைமை மிகவும் மோசமானது.

சென்னை மாநகராட்சியின் பெண்களுக்கான நடமாடும் கழிப்பறைகள் திட்டம் வரவேற்கத்தக்கது. என்றாலும் தொடர் பராமரிப்பின்மூலம் மட்டுமே அவை தொடர்ச்சியான பயன்பாட்டில் இருக்க முடியும்.

‘2030 நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு’களில் இந்தியா அடைய வேண்டியது சுகாதாரமான கழிப்பறைகளையும்தான். அதில் அரசின் பங்களிப்பு முறையானதாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் வடமாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகம் பணிபுரிந்துவரும் நிலையில், அவர்களுக்கான கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஒப்பந்ததாரர்களால் முறையாகச் செய்து தரப்படுகிறதா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும். தேவை ஏற்பட்டால், உரிய விதிமுறைகளை ஏற்படுத்த வேண்டும். பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை வலுப்படுத்துவதற்கான திட்டங்களோடு நில்லாமல், அவர்களின் கண்ணியத்தையும் பாதுகாக்கும் வழியில் செயல்படுவதே அனைவருக்குமான மாடல் அரசு.

- கட்டுரையாளர், எழுத்தாளர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in