

ஆண்களால் மட்டுமே கறிக்கடை நடத்த முடியும் என்கிற பலரது எண்ணத்தைப் பொய்யாக்குகிறார் சுமா. மதுரையில் 25 ஆண்டுகளாக கறிக்கடை நடத்திவரும் இவர், இன்று வெற்றிகரமான தொழில் முனைவோர். கணவரை இழந்து கைக் குழந்தைகளோடு அல்லப்பட்ட சுமாவால் எப்படி இந்த உயரத்தை எட்ட முடிந்தது? “எதற்கும் தளராத உறுதிதான்” எனப் புன்னகைக்கிறார் சுமா.
மதுரை செபஸ்தியார்புரம் சிந்தாமணி சாலை பகுதியைச் சேர்ந்த சுமாவின் பூர்விகம் கேரள மாநிலம் திருவனந்தபுரம். 1996இல் திருமணமாகி மதுரை வந்தார். இவருடைய கணவர் குழந்தைராஜ், சிந்தாமணி குடிசைப்பகுதியில் கறிக்கடை நடத்தி வந்தார். மகளுக்கு ஐந்து வயதானபோது சுமா நிறைமாத கர்ப்பிணி. அப்போதுதான் இவரது வாழ்க்கையில் பேரிடி விழுந்தது. கணவர் குழந்தைராஜுவுக்குத் திடீரென்று மாரடைப்பும் அதைத் தொடர்ந்து மூளையில் பாதிப்பும் ஏற்பட்டுப் படுத்த படுக்கையானார். அவரது கறிக்கடை வருமானத்தில் ஓடிக்கொண்டிருந்த குடும்பம் நிலைகுலைந்துபோனது. ஆள் போட்டு நடத்த முடியாமல் கறிக்கடையும் மூடிக்கிடந்தது. வீட்டில் முடங்கிய கணவரையும் பராமரிக்க வேண்டும். திக்குத் தெரியாத காட்டில் சுமா திகைத்தார். பிறந்த வீடும் இவர்களைத் தாங்கிப் பிடிக்கும் அளவுக்கு வசதியானது அல்ல. கணவர் குடும்பத்து உறவினர்களும் கைவிட, வீட்டு வேலைகளுக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்ற சுமா முடிவெடுத்தார். குழந்தைகளை யாரிடமும் விட்டுவிட்டுச் செல்ல முடியாத நிலையில் அந்த வேலைக்கும் போக முடியவில்லை.
உழைப்பும் முன்னேற்றமும்: அடுத்தவரிடம் வேலை கேட்டு நிற்பதற்குப் பதில் கணவர் நடத்திவந்த கறிக்கடையை எடுத்து நடத்த சுமா முடிவெடுத்தார். கணவர் கடையில் இருந்தபோது அவருக்குச் சாப்பாடு, டீ கொண்டு வரும் நேரத்தில் கடையில் சிறிது நேரம் அமர்ந்து செல்வார். அப்போது கணவருக்கு உதவியாகச் சிறு சிறு வேலைகளைச் செய்துள்ளார். அந்த அனுபவத்தில் கறிக்கடையை நடத்தத் தொடங்கினார். கறிக்கடைத் தொழிலை ஆண்களுக்கான தொழிலாகவே இந்தச் சமூகம் பார்க்கிறது. சுமா கறிக்கடையை நடத்தியதைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் கேலி, கிண்டல் செய்துள்ளனர். சுமாவின் கண் முன் அவருடைய கணவர், குழந்தைகள் நின்றதால் மற்றவர்களுடைய ஏச்சும் பேச்சும் அவரது காதில் விழவே இல்லை. கொஞ்சம் கொஞ்சமாகத் தொழிலைக் கற்றுக்கொண்டு சிறப்பாகச் செயல்படத் தொடங்கினார். பத்தாம் வகுப்புவரை படித்திருந்ததால் கடை நிர்வாகம் எளிதில் புரிபட்டது. அன்றாட வரவு செலவு கணக்குப் பார்ப்பது, நேர்த்தியாக வியாபாரம் செய்வது என்று கறிக்கடை நடத்துவதில் கைத்தேர்ந்தார்.
தனியொரு பெண்ணாகக் கறிக்கடை நடத்த முடியுமா என்று எள்ளி நகையாடியவர்களே அவரது தன்னம்பிக்கையையும் முயற்சியையும் பாராட்டும் அளவிற்கு சுமா சிறப்பாகக் கடையை நடத்தினார். இதற்கிடையே குழந்தைராஜுவின் ஐந்து ஆண்டு கால மரணப் போராட்டம் முடிவுக்கு வந்தது. அப்போதும் சுமா மனம் தளரவில்லை. குழந்தைகளை வளர்த்துக்கொண்டே கறிக் கடையை நடத்த, வியாபார சிரமங்களையும் நஷ்டத்தையும் சமாளித்தார்.
மகளிர் சுய உதவிக்குழு மூலம் கிடைத்த கடனைப் பெற்று வியாபாரத்தைச் சீர்ப்படுத்தினார். ஓரளவு லாபம் கிடைக்க ஆரம்பித்தது.
துணைநின்ற குழந்தைகள்: நின்று நிதானிக்க நேரமில்லாத நெருக்கடியிலும் தன் மகளையும் மகனையும் படித்து வைத்துப் பெரிய ஆளாக்கவேண்டும் என்கிற வைராக்கியமும் சுமாவுக்கு இருந்தது. அம்மாவின் போராட்டத்தையும் கஷ்டங்களையும் அறிந்த குழந்தைகளும் நன்றாகப் படித்தனர். தாய்க்கு ஆதரவாக அவர்களும் அவ்வப்போது கறிக்கடைக்கு வந்து உதவினர். மகள் பன்னிரண்டாம் வகுப்பில் இரண்டு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றார். பி.காம் படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றார். ‘சி.ஏ.,’வில் தேர்ச்சி பெற்று திருமணம் முடிந்து கணவரோடு வசித்துவருகிறார். மகன் ஆரோக்கிய மெல்பின், இன்ஜினீயரிங் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். விடுமுறை நாள்கள் மற்றும் பண்டிகை நாள்களில் அம்மாவுக்குத் துணையாகக் கறிக்கடைக்கு வருகிறார். “இவ்வளவு கஷ்டத்துக்கு நடுவிலும் கொஞ்சமா பணம் சேர்த்து மதுரையில வீட்டு மனை வாங்கியுள்ளேன்” என்று சொல்லும்போது சுமாவின் முகத்தில் அவ்வளவு பெருமிதம்!
‘‘அவமானமும் புறக்கணிப்புமே ஒருவரை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதற்கு என் வாழ்க்கையே சாட்சி. வாழ்க்கையில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். அதற்காக முடங்கிவிடக் கூடாது.
இளம் வயதிலேயே கணவரை இழந்து கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு நிர்கதியாக நின்றபோது என் கணவர் எனக்கு விட்டுச்சென்ற ஒரே சொத்து அவரது கறிக்கடைதான். தன்னுடைய வாழ்க்கையில் இப்படி நடக்கும் என அவருமே எதிர்பார்த்திருக்க மாட்டார். அவர் இல்லாத இந்த வாழ்க்கையில் சுமைகளைப் பகிர்ந்துகொள்ள ஆளில்லை. மற்றவர்களிடம் கூறி ஆறுதலடையவும் முடியாது. சோர்வும் சங்கடங்களும் ஏற்படும்போது என்னை நானே தேற்றிக்கொள்வேன். ஒவ்வொரு முறையும் நான் சோர்ந்துபோகும்போது குழந்தைகள்தான் என் கண் முன் நிற்பார்கள். வளர்ந்து பெரியவர்களானதும் எனக்கு ஆதரவாக நின்றார்கள். வாழ்க்கைச் சுமையும் குறையத்தொடங்கியது. என் இந்த உத்வேகத்திற்கு அவர்கள்தான் முக்கியக் காரணம். கணவர் இருந்திருந்தால் எங்கள் வாழ்க்கையில் என்னென்ன நடந்திருக்குமோ, அதைத் தனி மனுஷியாக ஒரளவு நான் செய்திருப்பதில் மகிழ்ச்சி. என் குழந்தைகள் கல்லூரியில் படித்தாலும் நான் கறிக்கடை நடத்துவதையும் விடுமுறை நாள்களில் இங்கே வந்து வேலை பார்ப்பதையும் அவர்கள் சங்கடமாக நினைத்ததில்லை. இளம்வயதில் கணவரை இழந்தவர்கள் என்னைப் போல் பலர் உள்ளனர். கணவர் இறந்துவிட்டால் எல்லாம் முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள். அடுத்த கட்டத்திற்குச் செல்லாமல் மனமுடைந்து முடங்கிவிடுகிறார்கள். என்னுடைய வாழ்க்கை அவர்களுக்கு ஓர் உந்துதலாக இருக்கட்டும்” என்று கண்களில் நம்பிக்கை மின்னப் பேசுகிறார் சுமா.