

உறவினர்கள் எல்லாம் இந்தியாவில் தீபாவளியைக் கொண்டாட எங்களுக்கோ கனடாவில் விடிந்தது தீபாவளி. வெள்ளை மருந்தைத் தலைப்பாகையாகக் கொண்ட புஸ்வாணங்களாகப் பனி மலைகள். மஞ்சள், பச்சை, ஆரஞ்சு நிற இலைப்பொறிகளைத் தெறிக்கும் மத்தாப்புக்களாக மேபிள் மரங்கள் (கனடா நாட்டில் உள்ள மேபிள் மர இலைகள் இலையுதிர் காலத்தில் மூவர்ணங்களில் காட்சியளிக்கும்).
8,000 கி.மீ. நீளமுள்ள சரமாக கனடாவின் மிக நீளமான ட்ராண்ஸ் கனடா தேசிய நெடுஞ்சாலை. மேற்கு கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா மாகாணத்தின் எரிபொருள் கருவூலம் கேல்கேரி நகரம். இங்கிருந்து நண்பர்களுடன் ஒன்றரை மணி நேரம் சாலை வழியாகப் பயணித்தோம். வழியெங்கும் தீபாவளி புத்தாடை உடுத்தி களைகட்டின இயற்கைக் காட்சிகள்.
விசாலமான கார் பார்க்கிங் வசதியுடன் நம்மைக் கட்டணமில்லாமல் வரவேற்றது ஜான்ஸ்டன் பள்ளத்தாக்கு. ‘லோயர்’ அருவிகளை நோக்கி ஒன்றரை கி.மீ நடைப் பயணம். வழியில் கடைகள் எதுவும் இல்லை என்பதால் தேவைக்கேற்ப தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் சென்றோம். குழந்தைகளின் ‘ஸ்ட்ராலர்’ வண்டிகளையும் இளையவர்களின் ‘ஸ்னீக்கர்’ காலணிகளையும் முதியவர்களின் கைத்தடிகளையும் தாங்கும் கரடுமுரடான மலைப்பாதையில் கிட்டத்தட்ட அரை மணி நேரம் நடந்தோம். சீறிப் பாய காத்துக்கொண்டிருக்கும் 8,000 அடி உயரமான ராக்கெட்டுகளாக கேஸில் மலைகள். இவற்றின் சுண்ணாம்புப் பாறைகளை அரித்து அழகிய காவியத்தைத் தீட்டியுள்ளது ஜான்ஸ்டன் ஓடை. மலைப்பாதையின் ஒற்றை ஜரிகையாக அடியிலிருக்கும் பாறைகளையும் காட்டும் தெளிவான நீரோடை. ‘லோயர்’ அருவிகள் உடை மாற்ற ஏதுவாகச் சுற்றி அணைகட்டியுள்ள ஜான்ஸ்டன் பள்ளத்தாக்கு. அருவிகளை அருகிலிருக்கும் சிறிய குகை வழியாகவும் ரசிக்கலாம்.
இங்கிருந்து சற்று செங்குத்தான மலைப்பாதையில் ஒன்றரை கி.மீ., நடந்து ஆர்ப்பரிக்கும் உச்சியில் இருக்கும் அருவிகளை அனைத்துக் கோணங்களிலும் படம்பிடித்தோம். மேலும் ஐந்து கி.மீ., நடந்தால் ‘இங்க்பாட்ஸ்’ எனப்படும் ஐந்து நீலநிற இயற்கை நீரூற்றுகளைக் காணலாம். எங்களைப் பல்லிளித்து வழியனுப்பி வைத்தன சிவப்பு அணில்கள். மனித நடமாட்டம் இல்லாத நேரத்தில் இங்கு க்ரிஸ்லி கரடிகள் வலம் வரும். குளிர்காலத்தில் முற்றிலுமாக உறைந்திருக்கும் இந்த அருவிகளைப் பார்க்க உலகெங்கிலும் இருந்து மக்கள் குவிகின்றனர்.
1880களில் ஜான்ஸ்டன் என்னும் ஆராய்ச்சியாளர் தங்கத்தைத் தேடி இந்தப் பள்ளத்தாக்கிற்கு வந்தாராம். அதனால், இந்தப் பள்ளத்தாக்கிற்கும் ஓடைக்கும் அவர் பெயரே சூட்டப்பட்டுள்ளது என்கின்றனர் உள்ளூர்வாசிகள்.
இங்கிருந்து அரை மணி நேர சாலைப் பயணத்துக்குப் பின் லூயி ஏரியை வந்தடைந்தோம். டெம்பிள், வைட், நிப்ளாக் மலைகளை முக்கோண கேமராக்களாக்கி, நீலநிற வானத்தின் பிம்பத்தைத் தன் முகத்தில் ஏந்தித் தற்படம் எடுத்துக்கொண்டிருந்தது லூயி ஏரி. இதே ஆண்டு ஏப்ரல் மாதம் முற்றிலும் சிலையாக உறைந்திருந்த ஏரியின் மீது நடந்த அனுபவம் மறக்க முடியாதது. இயற்கையின் மடியில் அமைதியாக இளைப்பாறிய அந்த இனிய நொடிகள், திகட்டாத தீபாவளி!
- ஸ்வர்ண ரம்யா, கனடா.