பார்வை: நடிகைகளின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்

பார்வை: நடிகைகளின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்
Updated on
3 min read

நடிகை த்ரிஷாவுடன் இணைந்து நடிக்கும் வகையில் ‘லியோ’ படத்தில் தனக்கு வாய்ப்பு அமையாதது குறித்து நடிகர் மன்சூர் அலிகான் தகாத முறையில் பேசியது, ‘நடிகைகள் என்றாலே இப்படித்தான்’ என்கிற ஆணாதிக்கப் பொதுப்புத்தியின் வெளிப்பாடு.

ஒரு படத்தில் குறிப்பட்ட நடிகை ஒருவரோடு இணைந்து நடிக்கும் காட்சிகள் தனக்கு அமைய வில்லை என்று இயல்பாகச் சுட்டிக்காட்டிப் பேசுவது வேறு, அதையே சகித்துக்கொள்ள முடியாத ஆணவ உடல்மொழியோடு, ‘நான் பார்க்காத நடிகைகளா?’ என்கிற தொனியில் அருவருக்கத்தக்க வகையில் பேசுவது வேறு என்கிற வேறுபாட்டை மன்சூர் அலிகான் உணராதவரல்லர். த்ரிஷாவை மட்டுமல்லாமல் வேறு சில நடிகைகளையும் தன் பேச்சில் குறிப்பிட்ட மன்சூர் அலிகானின் பேச்சு, பெண் வெறுப்பின் அநாகரிக வெளிப்பாடு.

மன்சூர் அலிகானின் இழிவான, பெண் வெறுப்புப் பேச்சைக் கண்டித்து ‘X’ தளத்தில் எழுதிய த்ரிஷா, “இதுபோன்றவர்கள் மனித குலத்துக்கே அவப்பெயரைத் தேடித்தருகிறார்கள்” எனப் பதி விட்டிருந்தார். த்ரிஷாவுக்கு ஆதரவாக விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மிகச் சிலர் மட்டுமே குரல் கொடுத்திருந்தனர். திரை யில் பெண்களுக்கு ஒன்று என்றால் ஓடிவந்து குரல்கொடுக்கும் முன்னணி நட்சத்திர நடிகர்கள் பலரும் இந்தப் பிரச்சினையைக் கண்டுகொள்ளாததன் மூலம் தங்கள் அசலான முகத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர். அநீதி நடைபெறுகிறபோது நாம் காக்கிற மௌனம், அந்த அநீதியை ஆதரிப்பதாகவும் அமைந்து விடுவது உண்டு.

நாயகர்களின் அசல் முகம்: முன்னணி நடிகர்களின் மௌனத்துக்கு அவர்களுக்குள் மண்டியிருக்கும் ஆணாதிக்கச் சிந்தனையும் காரணமாக இருக்கக்கூடும். ‘நமக்கு ஏன் வம்பு’ என்று ஒதுங்கி வாழும் நிலையில் இருக்கும் குரலற்ற எளிய மனிதர்கள் அல்ல அவர்கள். கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடும் நாயகர்கள். தன்னுடன் பணியாற்றும் சக பெண் ஒருவர் குறித்து மோசமாகப் பேசிய ஒருவரது செயலைக் கண்டிக்காததன்மூலம் தன்னைப் பின்தொடரும் ரசிகர்களுக்கு, ‘நடிகைகளை நாம் எப்படி வேண்டுமானாலும் அநாகரிகமாகப் பேசலாம், நடந்துகொள்ளலாம்’ என்கிற கருத்தைத்தானே மறைமுகமாகச் சொல்கிறார்கள்? தலைவனே இப்படியிருக்க, அவரை வழிபடுகிற ரசிகர்கள், தன்னைச் சுற்றி வாழும் பெண்களை எப்படித் தனக்குச் சமமாகவும் மரியாதையுடனும் நடத்துவார்கள்?

த்ரிஷாவுக்கு ஆதரவாகச் சிலர் கருத்து சொன்னதுமே நடிகர் சங்கமும் ‘கண்டன அறிக்கை’ மூலம் தன் இருப்பை வெளிப்படுத்தியது. மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டால் போதும் என்கிறரீதியில் வெளியிடப்பட்ட அறிக்கையால் யாருக்கு என்ன பலன்? தன்னிடம் விளக்கம் கேட்காமல் நடிகர் சங்கம் எடுத்த முடிவில் தனக்கு உடன்பாடு இல்லை எனவும் தான் மன்னிப்பு கேட்க முடியாது எனவும் மன்சூர் அலிகான் தெரிவித்திருந்தார். தேசிய மகளிர் ஆணையம் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழகக் காவல்துறையைக் கேட்டுக்கொண்டது. அதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது புகார் பதிவுசெய்யப்பட்டது. காவல் நிலைய விசாரணையின்போது, மன்னிப்பு கேட்பதையே ஏதோ பெரும் சாதனை புரிந்ததுபோல் சொல் வித்தை காட்டினார் மன்சூர் அலிகான்.

எளிய இலக்கு அல்ல: இந்தப் பிரச்சினை தேசிய மகளிர் ஆணையம் தலையிடுகிற அளவுக்குப் பேசுபொருளாக ஆனதால் மன்சூர் அலிகான் ஒருவர் மட்டுமே குற்றவாளியல்ல. திரைத்துறையின் ஆரம்ப காலத்திலிருந்தே அதில் இயங்கும் பெண்களுக்கு நாம் மதிப்பு அளித்ததில்லை என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. திரைத்துறை என்பதும் பிற பணிகளைப் போன்றதுதான் என்கிற எண்ணமே நம்மில் பலருக்கும் இல்லை. திரைத்துறையைச் சார்ந்த பெரும்பாலான ஆண்களும் இதற்கு விதி விலக்கல்ல. திரைக்கு முன்னால் ஒருவர் நடிப்பதாலேயே அவரையும் அவரது தனிப்பட்ட வாழ்க் கையையும் விமர்சிக்கும் உரிமை இருப்ப தாகப் பலர் நம்புகின்றனர்.

சிலர் அதற்கும் கீழே தரம் தாழ்ந்து சமூக ஊடகங்களில் நடிகைகள் குறித்து மிக மோசமாகப் பேசியபடியும் நடிகைகளின் படத்தைச் செயற்கைத் தொழில்நுட்பத்தின் உதவியோடு அநாகரிகமாகச் சித்தரித்து வெளியிட்டபடியும் இருக்கின்றனர். நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ‘டீப்ஃபேக்’ காணொலி வெளியானதும் அதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானதும் இதற்குச் சமீபத்திய சான்று. நடிகைகளைத் தவறாகச் சித்தரிக்கும் இழிபிறவிகளின் அறிவின் அளவு அவ்வளவுதான் என்று நாம் கடந்துபோய்விட முடியாது. காரணம், நடிகைகளும் இந்தச் சமூகத்தில் பிறரைப் போல் கண்ணியத்துடன் வாழ்வதற்கான அனைத்து உரிமைகளையும் பெற்றவர்கள்தாம். அந்தக் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் அவர்களுக்கு எதிராக உதிர்க்கப்படும் சொல்கூட அவர்கள் மீதான வன்முறையே.

அண்மையில் தனியார் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் நடிகை விசித்ரா குறிப்பிட்ட சம்பவமும் இதைத்தான் உணர்த்துகிறது. 2001இல் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு ஒன்றின்போது தனக்கு நேர்ந்த வேதனை மிகுந்த நிகழ்வு குறித்து அவர் சொன்னது வெறும் அனுபவப் பகிர்வு அல்ல. அது 22 ஆண்டு கால வேதனை. இவ்வளவு ஆண்டுகள் கழிந்த பிறகும் எளிதில் கடந்துவிட முடியாத அளவுக்கு அவரை வதைத்துக் கொண்டி ருப்பதைத்தான் அன்றைக்குச் சொன்னார். திரைத்துறைக்குள் நிலவும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கான ஒரு பானைச் சோறு இந்தச் சம்பவம். திரைத்துறையில் செயல்படும் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் இதுபோன்ற வன்முறைகள் குறித்துப் பொதுச்சமூகத்துக்கு எவ்வித அக்கறையும் இல்லை. அவர்களின் பணியிடப் பாதுகாப்பை உறுதி செய்வதற்குப் பதிலாக, நடிகைகள் அனைவரும் அனைத்து வித நிர்ப்பந்தங்களுக்கும் ஆளாக வேண்டியவர்கள்தாம் என்கிற முடிவுக்குப் பெரும்பான்மைச் சமூகம் வந்துவிடுவதோடு நடிகைகள் அனைவரையும் அதே கண்கொண்டு பார்ப்பது கண்டிக்கத்தக்கது.

திரைத்துறையில் பெண்களை மோசமாக நடத்தும், நிர்ப்பந்திக்கும் ஆண்கள் குறித்து நமக்கு எந்தப் புகாரும் இல்லை. பாதிப்புக்குள்ளாகும் பெண்களையே எளிய இலக்காக்கி வேட்டையாடுகிறோம்.

புகார் குழுக்கள் அவசியம்: திரைத்துறை, சின்னத்திரை போன்றவற்றில் பணிபுரிகிற பெண்களைப் ‘பணியாளர்கள்’ என்கிற வரையறைக்குள் நாம் வைப்பதே இல்லை. நாம் கொடுக்கிற பணம், அவர்களது நடிப்பை ரசிக்கத்தானே தவிர அவர்களது அந்தரங்கத்தைக் கூறுபோட அல்ல. திரைத்துறையில் செயல்படும் பெண்கள் தங்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு எதிராக அமைப்பாகத் திரண்டு செயல்படுகிறபோதுதான் அநாகரிகப் பேச்சுகளும் செயல்களும் குறையும். மலையாள நடிகை ஒருவர் மீது பாலியல் துன்புறுத்தல் நிகழ்த்தப்பட்டபோது அது அவரது தனிப்பட்ட பிரச்சினை என ஒதுங்கிவிடாமல், ‘விமன் இன் சினிமா கலெக்டிவ் (WCC)’ என்கிற அமைப்பைத் தொடங்கி, திரைத்துறைப் பெண்களுக்காகக் குரல்கொடுத்துவரும் கேரள நடிகைகளை நாம் முன்மாதிரியாகக் கொள்ளலாம். அந்த அமைப்பின் தொடர் சட்டப் போராட்டத்தால் திரைத்துறைப் பெண்களுக்கான பணியிடப் பாதுகாப்பு (POSH) உறுதிசெய்யப்பட்டிருப்பதும், பாலியல் புகார்கள் சொல்வதற்கு ஏதுவான உள்ளகப் புகார் குழு அமைக்கப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கவை.

தமிழ்த் திரையுலகில் #மீடு புகார்கள் எழுந்தபோது 2019இல் பெயரளவுக்கு ஓர் உள்ளகப் புகார் குழு அமைக்கப்பட்டது. அந்த அமைப்பின் செயல்பாடுகள் தீவிரமாக இருந்தால் நடிகைகளைத் துச்சமாகப் பேசவோ நடத்தவோ ஆண்களுக்குத் துணிவு வருமா? கேரளத்தைப் போல் இங்கேயும் நடிகைகளின் பணியிடப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வலுவான அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். த்ரிஷா போன்ற முன்னணி நடிகைகளோடு மூத்த நடிகைகளும் சேர்ந்து அதை முன்னெடுப்பது, வளர்ந்துவரும் நடிகைகளுக்கு நம்பிக்கை அளிப்பதாக அமையும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in