

குடும்பங்களில் முக்கியமான உறுப்பினர்களான இணையர்களின் பெற்றோரைப் பற்றியும் நிறைய பேசவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். முதலில் பிள்ளைகளின் இணையர் தேர்வில் பெற்றோர்கள் தலையிடக் கூடாது. பிள்ளைகளைப் பொறுப்புணர்வுடன் வளர்ப்பதே போதும். தங்கள் இணையரைத் தாங்களே தேர்ந்தெடுக்க விரும்புபவர்களை நாம் அவர்கள் விருப்பத்திற்கு விட்டுவிடுவதே நல்லது. நமக்கு, நம் அனுபவத்தினால் அவர்கள் தேர்வு சரியில்லை எனத் தோன்றினால், தக்க காரணங்களுடன் ஏன் சரியில்லை என்று விளக்கலாம். ஆனால், அதற்கு மேல் அங்கு நமக்கு வேலையில்லை.
இணையர் தேர்வை விடுவோம். திருமணத்திற்குப் பிறகு இந்தப் பெற்றோர்கள் என்ன செய்யலாம்? இணையர்கள் நிம்மதியாக, சந்தோஷமாக வாழ வேண்டும் என்று விரும்பினால், அவர்கள் இருவருக்கும் இடையே நம் மூக்கை அவசியமில்லாமல் நுழைக்காமல் இருக்கலாம். திருமணம் புரிந்து, பிள்ளைகள் பெறும் வயதுக்கு வந்துவிட்டவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள அவர்களுக்குத் தெரியாதா?
மூக்கை நுழைக்க வேண்டாம்: ஏதோ அந்தக் காலம் என்றால், சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். பெரியவர்களின் வழிகாட்டல் தேவைப்பட்டிருக்கும். இந்தக் காலத்தில் இந்தத் தலையிடல் அவசியமேயில்லை. புதிதாக இணைந்து வாழ ஆரம்பிக்கையில் அவர்களுக்குள் சில தடுமாற்றங்கள், சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும். சண்டைகள் இல்லையெனில் ஒருவரைப் பற்றி மற்றவர் முழுமையாகப் புரிந்துகொள்வது எப்படி? சிறிது காலத்திற்குப் பிறகு அவர்களே தெளிந்துவிடுவார்கள். அவர்களாக நம்மிடம் வந்து ஆலோசனை கேட்டால் தவிர நாமாக ‘எனக்குத்தான் எல்லாம் தெரியும்’ என்று உள்ளே நுழைவது தேவையற்ற குழப்பங்களைத்தான் ஏற்படுத்தும்.
நான் அனைத்து அம்மாக்களையும் குறை சொல்லவில்லை. ஆனால், சில அம்மாக்கள் இருக்கிறார்கள். தன்னைவிட்டால் தன் மகனுக்கு வேண்டியதை யாரும் செய்ய மாட்டார்கள் என நினைத்து, குறிப்பாக மகனுக்கான உணவுத் தேவையைத் தானே கவனிக்க வேண்டும் எனப் போராடுவார்கள். இல்லையெனில் மருமகளிடம், ‘என் மகனுக்கு இப்படித்தான் பிடிக்கும், அப்படித்தான் பிடிக்கும்’ என்று எதையாவது சொல்லி வற்புறுத்திக்கொண்டே இருப்பார்கள். பெண்ணின் அம்மாக்கள் அவ்வப்போது மகள் வீட்டுக்குச் சென்றோ இல்லை தொலைபேசியிலோ ‘அதைச் சொல்லிக்கொடுக்கிறேன் இதைச் சொல்லிக்கொடுக்கிறேன்’ என்று மகளது வாழ்க்கையில் தலையிட்டுக்கொண்டே இருப்பார்கள். இரண்டு தரப்பிலுமே இந்த மாதிரி அம்மாக்களால் இணையர்களுக்குள் நிறைய பிரச்சினைகளும் பிரிவினைகளும் ஏற்படுகின்றன.
மகன் உதவிசெய்தால் கோபம் ஏன்?- திருமணம் ஆன முதல் சில வருடங்கள் அவர்கள் தனியாகவே இருப்பதுதான் அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட ஏதுவாக இருக்கும். தனிமைக்காக இரவு வரையில் அவர்களைக் காத்திருக்க வைக்கவேண்டிய அவசியமென்ன? அவர்களுக்குள் பிரச்சினை என்றால்கூடப் பெரியவர்கள் முன்னால் பேச இயலாமல் மனதில் குமைந்து கொண்டிருக்க வேண்டிய அவசியத்தை நாம் ஏன் உருவாக்க வேண்டும்? சண்டையோ கொஞ்சலோ அவர்கள் ஒருவரை மற்றவர் புரிந்து நெருங்க அவர்களுக்குத் தனிமை வேண்டுமல்லவா?
வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் வளர்ந்த மகன், மனைவிக்கு உதவியாகச் சமையலறையிலோ வேறு வேலையிலோ ஈடுபட்டால் இந்த அம்மாக்களுக்கு ஏன் இவ்வளவு ஆற்றாமை? தனக்கு உதவி செய்யும்படி சொல்லிக்கொடுத்து வளர்த்திருக்க வேண்டும். நம் கணவர்தான் நமக்கு உதவவில்லை நம் மகனாவது மனைவிக்கு உதவி செய்கிறானே என்று மகிழ்வதற்கு மாறாகக் கோபம் எதற்கு வருகிறது? அது அவர்கள் வாழ்க்கை, அவர்களுக்கு எப்படி செளகரியமோ அப்படி வாழ்ந்துகொள்ளட்டுமே. நம் பிள்ளைகள் ஒற்றுமையாக மகிழ்வாக இருப்பதற்காகத்தானே திருமணம் செய்துவைக்கிறோம்? அது உண்மையெனில் அந்த ஒற்றுமையை, மகிழ்வைப் பார்க்க நமக்கும் மகிழ்வாகத்தானே இருக்க வேண்டும்?
மகள் மனம் உவந்து இணையரின் குடும்பத்திற்கு எதுவும் செய்தால், “நீ ஏன் இதையெல்லாம் செய்கிறாய்?” என்று கேட்கும் அம்மாக்களும் இருக்கிறார்கள். வேண்டாமே. அவளாக வந்து என் வாழ்க்கை பிரச்சினையாக இருக்கிறது எனும்போது நாம் என்னவென விசாரித்து ஆலோசனை வழங்கினால் போதுமே. இந்தக் காலத்தில் பெரும்பாலான விவாகரத்திற்குப் பெற்றோர்களே காரணமாக இருக்கிறார்கள் என்பது மிகவும் அதிர்ச்சியான விஷயம். பிடிக்காமல் இருந்தால் விவாகரத்து செய்வது தவறல்ல. ஆனால், அது அவர்களுக்கே பிடிக்கவில்லை என்றால் சரி, நாம் அவர்கள் ஒற்றுமைக்குத் தடை போட்டு அதன் மூலம் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் சூழலை ஏற்படுத்தக் கூடாது அல்லவா?
இங்கே பிரச்சினை என்னவெனில் அம்மாக்கள் பொதுவாகத் தங்கள் வாழ்க்கையைத் தங்கள் பிள்ளைகளைச் சுற்றியே அமைத்துக்கொள்கிறார்கள். பிள்ளைகள்தான் அம்மாக்களின் உலகமாக இருக்கிறார்கள். பிள்ளை களுக்குத் திருமணம் ஆனபின் அம்மாக்களின் வாழ்க்கை வெறுமை வேடம் பூணுகிறது. தான், தன் பிள்ளை என்று வாழ்ந்தவர்களுக்குப் பிள்ளைகளது வாழ்க்கையில் தன்னைவிட முக்கியமான ஒரு நபர் வந்துவிடுவதையும், தனக்கும் பிள்ளைகளுக்குமான நெருக்கம் குறைந்துவிடுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகிறது. ஆனால், இதுதான் நம் வாழ்க்கையின் நிதர்சனம். குடும்பம் என்கிற ஓர் அமைப்பே நமக்குப் பிறகு நம் பிள்ளைகளுக்கென மனிதர்கள் வேண்டும் என்பதற் காகத்தான் எனும்போது, நாம் அவர்களிடமிருந்து விலகித்தான் இருக்க வேண்டும். அதுதான் நமக்கும் நல்லது, அவர்களுக்கும் நல்லது.
நமக்கென நேரம் ஒதுக்குவோம்: பிள்ளைகளே நம் உலகமல்ல. அம்மா, அப்பா என்பது நாம் எடுத் திருக்கும் பல பொறுப்புகளில் ஒரு முக்கியமான பொறுப்பு, அவ்வளவு தான். அந்தப் பொறுப்பைச் சரிவரச் செய்தால் போதும். நமக்கென நட்புவட்டம், நமக்கென சில பொழுதுபோக்குகள் என்று தொடக்கத்திலிருந்தே இருந்துவிட்டால், பிள்ளைகளின் விலகல் நமக்கு வருத்தத்தை அளிப்பதைவிட அருமையான ஆசுவாசத்தைக் கொடுக்கும். ஒரு பொறுப்பு முடிந்தது. இனி நம் நேரம் நமக்கானது என்று உணர்வோம்.
நாம் அவர்களுக்கான இடத்தை அளித்துவிட்டால் அவர்களுக்கும் நம் மீதான மரியாதை கூடும். சுய நலமாகச் சிந்தித்தால்கூட, நமக்கு வேண்டியதும் அவர்களின் அன்பும் அக்கறையும்தானே? அதை நாமே நம் செயல்களால் எதற்குக் கெடுத்துக்கொள்ள வேண்டும்?
அவர்களுக்கான சுதந்திரத்தையும் மரியாதை யையும் கொடுத்துப் பொறுப்பாகவும் வளர்த்து, இனி உன் வாழ்க்கையை நீ அழகாக வாழ்ந்துகொள் என்று கைகுலுக்கி அனுப்பிவிடுங்கள். அந்தக் கையை அவர்கள் என்றுமே பற்றிக் கொண்டுதான் இருப்பார்கள். விட்டுவிட மாட்டார்கள்.
(விவாதிப்போம் மாற்றுவோம்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.