

ஜெ.தீபலெட்சுமி
deepa.j.joseph@gmail.com
தமிழ்த் திரையுலகில் திருமண உறவுகளை உளவியல் ரீதியாக அணுகும் ஒரு முயற்சியாக ‘இறுகப்பற்று’ எனும் திரைப்படம் வந்திருக்கிறது. மூன்று வெவ்வேறு வாழ்க்கை முறைகளும் குணநலன்களும் கொண்ட தம்பதிகளையும் அவர்களது உறவில் ஏற்படும் சிக்கல்களையும் எப்படி கவுன்சலிங் மூலமாகத் தீர்த்துக்கொள்கிறார்கள் என்பதே கதை.
தம்பதியர் உறவுகள் குறித்து இவ்வளவு நுட்பமாக ஒரு படம் எடுத்திருப்பதும் அவர்களுக்கிடையே எழும் சிக்கல்களை நேர்மையாக எந்தவிதச் சார்புமின்றி யாரையும் வலிந்து குற்றவாளியாக்காமல் பேசியிருப்பதும் சிறப்பு. நேர் மறையான பாத்திரங்களையே எடுத்துக் கொண்டிருப்பதால் அது சாத்தியமாகியிருக்கிறது.
ஆனால், நம் நாட்டைப் பொறுத்த வரை பெரும்பாலும் பொருளாதாரச் சிக்கல்கள் மட்டுமல்லாமல் சாதி, ஆணாதிக்கம், இருவரது குடும்பங்களின் தலையீடு போன்றவை எல்லாம் நல்ல திருமண உறவு இருப்பதற்கான சாத்தியங்களையே மொத்தமாகச் சிதைத்துவிடுகின்றன என்பதுதான் உண்மை.
கலாச்சாரம், பண்பாடு என்கிற பெயரில் சாதியத்தையும் பெண்ணடிமைத்தனத்தையும்தான் காலம் காலமாக வளர்த்துக்கொண்டு இருக்கிறோம் என்பதற்கு அண்மையில் கோவையில் வள்ளிக்கும்மி நடனமாடிய பெண்களை, ‘கவுண்டர் வீட்டுப் பையன்களையே திருமணம் செய்துகொள்கிறோம்’ என்று ஒருவர் சத்தியம் செய்யச் சொல்லிய சம்பவமே சாட்சி.
திருமண உறவு ஏன் அர்த்தமிழக்கிறது?
‘திருமணமானவர்களுக்கு இடையே பிரச்சினை வருவதற்குத் தனியாக எதுவும் காரணங்கள் வேண்டாம்; இருவருக்கும் திருமணமாகி இருக்கிறது என்கிற ஒரு காரணமே போதும்’ என்று படத்தில் வரும் வசனம் ஆழ்ந்த அர்த்தம் பொதிந்தது. ஆனால், ‘பிரிய ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் சேர்ந்து வாழ ஒரே ஒரு காரணம் இருந்தால்கூட அந்த உறவை விட்டு விடாமல் இறுகப்பற்றிக் கொள்ள வேண்டும்’ என்கிற கருத்து முதலில் நேர்மறையான உணர்வை ஏற்படுத்தினாலும், நமது சமூகத்தில் அது என்ன மாதிரியான புரிதல்களையும் விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதையும் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
“உலகிலேயே நம் நாட்டில்தான் விவாகரத்து விகிதம் குறைவு.”
“என் தாத்தாவுக்கும் பாட்டிக்கும் குழந்தைத் திருமணம் நடந்தது. அவர்கள் அறுபதாண்டுகள் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.”
“என் அம்மா திருமணத்தன்றுதான் அப்பாவின் முகத்தையே பார்த்தார்; பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம்தான். ஆனால், இன்று வரை மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.”
“காதலித்துத் திருமணம் செய்து கொண்ட ரவியும் ரம்யாவும் இரண்டே ஆண்டுகளில் கோர்ட் படியேறி விட்டார்கள். எல்லாம் மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கம்தான்.”
- இது போன்ற பேச்சுகளை அதிகம் கடந்திருப்போம். ஆனால், இவற்றில் எந்த அளவுக்கு உண்மையும் நியாயமும் இருக்கின்றன என்பதும் விவாதிக்க வேண்டியவையே.
பெண்ணடிமைத்தனம் ஊறிப்போன எந்தச் சமூகத்திலும் திருமணம் என்பது ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் வாழ்வாதாரத்துக்காகச் சார்ந்திருக்கும் அமைப்பாகவே இருக்கும். பொருளாதாரச் சுதந்திரம் அறவே இல்லாத நிலையில் பெண்கள் விவாகரத்து என்பதை யோசித்துப் பார்க்க முடியாத பேரவலமாகக் கருதினார்கள். கணவனால் கைவிடப் பட்ட ‘அபலைப் பெண்கள்’ என்கிற நிலையில்தான் அன்றைக்கு விவாகரத்தின் விளைவுகள் இருந்தன.
மலிந்திருக்கும் பிற்போக்குத்தனம்: ஆண்களுக்கும் மனைவி என்பவள் வீட்டில் தனது தேவைகளைக் கவனித்துக்கொண்டு, குழந்தை குட்டிகளை வளர்த்துக்கொண்டு, அடக்க ஒடுக்கமான பெண்ணாக இருந்தாலே போதும் என்கிற மனப்பான்மைதான் பெரும்பாலும் இருந்தது. இந்த விதிகள் எல்லாம் ஓரளவு பூர்த்தியாகிவிடும் நிலையில் விவாகரத்து வரை செல்லக்கூடிய தேவையே பலருக்கும் இருக்காது.
ஆனால், பெண்களும் படித்து வேலைக்குப் போகத் தொடங்கியது மட்டுமில்லாமல் சொத்துரிமை உள்பட உரிமைகள் பல பெற்றுவிட்ட காலத்திலும், இன்னும் நமது திருமண உறவுகள் மட்டும் பழைய விழுமியங்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதுதான் விவாகரத்துகள் அதிகரிக்க முக்கியக் காரணம்.
சட்டரீதியாகப் பல உரிமைகளைப் பெண்கள் பெற்றுவிட்டாலும் குடும்பங் களுக்குள் ஆண் - பெண் குறித்த பார்வைகள் இன்னும் மாறிவிட வில்லை. பெண்தான் சமைக்க வேண்டும் என்பதிலிருந்து ஆண் வாரிசுதான் பெருமை என்பது வரை சாதியம் பீடித்திருக்கும் நமது சமூகம் பெண்ணுக்கான சம அந்தஸ்தைக் கொடுப்பதில் தயக்கம் காட்டியே வருகிறது.
இந்நிலையில், டாக்டருக்குப் படித்திருந்தாலும் தனது பணி தொடர்பாக உலகம் முழுவதும் சுற்றி வந்தாலும் திருமணம் என்று வரும்போது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் தனக்கான துணையைத் தேர்ந்தெடுக்கவே உரிமை இல்லாத நிலைதான் நீடிக்கிறது. அண்மையில் கணவன் வீட்டில் கொடுமைகளைத் தாள முடியாத ஒரு பெண் விவாகரத்து பெற்றதும் அவருடைய தந்தை மகளை மேள தாளத்துடன் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு அழைத்து வந்த செய்தியைப் பலரும் அறிந்திருப்போம். அப்படியான செயல்களை நிச்சயம் வரவேற்க வேண்டும்.
சகித்துக்கொள்ளத் தேவையில்லை: பிடிக்காத உறவில், கொடுமை களையும் தாங்கிக்கொண்டு பல பெண்கள் உழல்வதும் அதற்குப் பெற்றோரே உடந்தையாக இருப்பதும் சமூகத்தில் “நாலு பேர் என்ன சொல்லிவிடுவார்களோ?” என்கிற பயத்தினால்தானே? அப்படியான ஒரு அர்த்தமற்ற அச்சத்தின் காரணமாகத்தானே மன்னார்குடி திவ்யா இருபது முறை பெற்றோர் வீட்டுக்குத் திரும்பி வந்தும் ஒவ்வொரு முறையும் கணவன் வீட்டார் கேட்ட நகை, பணத்துடன் அவரைப் பெற்றோரே நரகத்துக்குத் திருப்பி அனுப்பினார்கள்? பின்பு மாமனாரின் கையாலேயே கொல்லப்பட்ட அவரும், நூற்றுக்கணக்கான பவுன் நகைகளும் லட்சம் லட்சமாக வரதட்சிணையும் கொட்டிக் கொடுத்தும் கணவன் வீட்டில் அடி, உதை, சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுத் தற்கொலை செய்துகொண்ட, கேரளத்தைச் சேர்ந்த விஸ்மயாவும் திருமணம் என்பது பெண்களுக்குப் பாதுகாப்பு வளையம் அல்ல; உயிரையே பறிக்கக்கூடிய பயங்கரச் சூதாட்டம் என்று சொல்லாமல் சொல்லிச் சென்றார்கள்.
திருமண உறவில் வெறுப்போ வேறுபாடோ வந்த பிறகும் இறுகப்பற்றிக்கொண்டு பல்லைக் கடித்து வாழ வேண்டும் என்று காலம் காலமாகப் போதிக்கப்படுவதால் குடும்பத்துக்குள் நிகழும் தற்கொலை கள் தொடர்கதையாக நீள்வதை நாமறி வோம். ‘செத்தாலும் பரவாயில்லை, சேர்ந்து வாழுங்கள்’ என்ற நமது பாட்டன் பூட்டன் போதனையை உளவியல் நிபுணர்களும் ‘பாசிட்டிவிட்டி’ எனும் பெயரில் சொல்லத் தேவையில்லை என்பதுதான் ‘இறுகப்பற்று’ படத்தின் மீது நாம் வைக்க வேண்டிய விமர்சனமாக இருக்கிறது.
அடுத்தவர் கோப்பைகளை நிரப்புங்கள். அடுத்தவர் கோப்பையி லிருந்து குடிக்க வேண்டாம்.
சேர்ந்து ஆடிப்பாடி மகிழுங்கள். ஆனால், இருவரும் தனித்தே இருங்கள்.
சேர்ந்தே நில்லுங்கள். ஆனால், மிக நெருக்கமாக வேண்டாம். ஓக் மரமும் சைப்ரஸ் மரமும் ஒன்றின் நிழலில் மற்றொன்று வளராது.
காதல் மற்றும் திருமண உறவுகள் குறித்துச் சென்ற நூற்றாண்டுக் கவிஞரான கலீல் கிப்ரானின் சாகாவரம் பெற்ற பொன்மொழிகள் இவை.
ஆரோக்கியமான உறவுகளை வேண்டுபவர்கள் ஆணோ பெண்ணோ, முதலில் தன்னம்பிக்கையும் தற்சார்பும் உடையவர்களாகத் தங்களைச் செதுக்கிக்கொள்வது அவசியம் எனும் கருத்தும் இதில் அடங்கியிருக்கிறது.