

இப்போல்லாம் எங்கப்பா நல்லா குடிக்கிறார். ஒருநாள் நல்ல போதையில, “நான் குடிக்கிறதுக்கு நீயும் ஒரு காரணம்டா”ன்னு என்னைய சொன்னாரு.நான் ஏன் காரணம்? இவர் ஏதோ குடிச்சிட்டு உளறுறாருன்னு நெனைச்சிப்பேன். எங்க அண்ணனும் ஒருமுறை, “நீ ஒழுங்கா நடடா. ரோட்ல போகும்போது ஏன்டா குனிஞ்சிக்கிட்டே போறே?”ன்னு கேட்டான். வேற எப்படி போறது? சுத்த அறிவு கெட்டவன். அக்காவைக் கேக்காம என்ன மட்டும் கேக்குறான்.
என்னைக்குதான் இவங்களுக்கு அறிவு வரப் போவுதோ. எனக்கு எங்கம்மா கவலை அதிகமா இருக்கு. எங்கப்பா வீட்டுச் செலவுக்குப் பணம் கொடுக்குறது இல்லைன்னு, எங்கம்மா ஒரு வீட்டுக்கு வேலைக்குப் போகுது. அங்க கொடுக்குற மீந்த சாப்பாட்டை எங்களுக்குக் கொண்டு வந்து கொடுக்கும். “அம்மா நான் பாத்திரத்துக்கு சோப்பு நார் போடுறேன். நீ அந்தப் பக்கம் உட்கார்ந்து விளக்குமா”ன்னு சொன்னா, “வேணாம்பா. நீ போ வீட்டுக்கு”ன்னு அம்மா சொல்லும். நான் போக மாட்டேன்.
அந்த வீட்டுல நெறய வேலை வைப்பாங்க. பெருக்கணும், பாத்திரம் கழுவணும், வீடு மொத்தமும் தொடைக்கணும். அது மட்டுமில்ல. நான் கரி குடோனுக்குத் தினம் ரெண்டு குடம் தண்ணி ஊத்துவேன். தினம் 10 ரூபாய் கூலி. மாசம் 300 ரூபா கிடைக்கும். ஞாயிறு லீவு போக 260 ரூபாய்தான் தருவாங்க. அதை எங்கம்மாக்குத் தருவேன். கரி குடோன்ல தண்ணி ஊத்தும்போது அங்கே வேலை பாக்குற ஒருத்தன், “என்ன தண்ணிய இடுப்புல தூக்கலையா?”ன்னு கேப்பான்.
என்னைப் பார்த்தாலே மீசையை முறுக்குவான். என்னைச் சில நேரம் கிண்டலா கூப்பிடுவான். சில நேரம் ரொம்ப அசிங்கமா கூப்பிடுவான். என்னைப் பார்த்ததும் அவன் கையை வித்யாசமா தட்டிச் சிரிப்பான். நான் கண்டுக்க மாட்டேன். நான் எங்கம்மா கஷ்டத்துக்கு உதவியா காசுக்குத் தண்ணி ஊத்துறேன், இவன் கெடக்குறான்.
அவன் அடிக்கடி சொல்றானேன்னு ஒரு தடவை இடுப்புல தண்ணிய தூக்கினதுக்கு அந்தத் தெருவே சிரிச்சிச்சி. இந்த விஷயம் தெரிஞ்சி எங்க மாமனும் அண்ணனும் என்ன விளக்குமாத்தால அடிச்சாங்க. எனக்கு ஏழு சித்திங்க. எங்கம்மாகூடப் பிறந்தவங்க மூணு பேரு, எங்கம்மாவோட சித்தி பொண்ணுங்க நாலு பேரு. இது இல்லாம மாமாங்க மொத்தம் நாலு பேரு. இன்னைக்குக் காலைலயே எழுந்துட்டேன். தலைக்கு குளிச்சிட்டு ஈரத்தோட நெத்தியில சந்தனமும் குங்குமமும் பூசி எங்க சித்தியோட பெருமாள் கோயிலுக்குக் கிளம்பிட்டேன்.
ஏகாதசி ஆச்சே. எல்லாரும் இன்னைக்குக் கண்ணு முழிக்கத் தயாராவாங்க. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. விடிய விடிய தாயக்கட்டை விளையாடலாம், பரமபதம் விளையாடலாம். ஒரு நாளும் பரமபதத்துல நான் தோத்தது இல்ல தெரியுமா. நான் அந்தக் காலத்துலயே ராத்திரிலதான் கோலம் போடுவேன். எங்க வீட்டு ஆம்பளைங்க எல்லாம் தூங்கிட்டப்புறம் போடுவேன். கோலம் அழகா இருக்கேன்னு யாராவது கேட்டா, எங்க சித்திங்க அவங்க போட்டதா சொல்லிடுவாங்க. எங்க முத்து சித்திதான் எங்க வீட்ல பெரும்பாலும் சமைக்கும். அழகா அம்மிகிட்ட உக்காந்து தேங்கா துவையல் அரைக்கும் பாருங்க, சும்மா அசத்தலா இருக்கும்.
“டேய் கொஞ்ச நேரம் அம்மிய பாருடா. உள்ள உலையைப் பார்த்துட்டு வரேன்.” சோறு வடிச்சிட்டு வந்த சித்தி என்னைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்குது. “அக்கா இங்க வாயேன்.” ஓடி வந்த எங்கம்மாவும் என்னைய பார்த்து சிரிக்குது. எங்க பக்கத்து வீட்டு பத்மா அக்காவும் சிரிக்கிறாங்க. நான் என்ன சிரிப்பு காட்டினேன்னு இப்படிச் சிரிக்கிறாங்க? எங்க சித்தி மாதிரி ஒரு காலை மடக்கி ஒரு கால நீட்டி அம்மில தொவையல் அரைச்சது ஒரு தப்பா? இதுக்கு இவ்ளோ சிரிக்கணுமா? ஆனா எங்கம்மா மட்டும், “ஏண்டி என் பையன் கொழந்தைடி. போகப் போக சரியாயிடும் போங்கடி”ன்னு சொல்லுச்சு.
கதையல்ல நிஜம்:
# திருநங்கைகள் சிறுவயதில் ஆணுடையில் இருந்துகொண்டு பெண்களைப் போல நடந்துகொள்வது இயல்பு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.முடி வளர்த்து, புடவை கட்டி இருப்பவர்கள் மட்டுமே திருநங்கைகள்; இந்தச் சிறுவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என வேறுபடுத்திப் பார்க்க வேண்டாம்.
# இந்தச் சிறுவன் திருநங்கையாக மாறுவதற்கான சாத்தியம் உண்டு என்கிற நோக்குடன் அவன் கல்வி கெடாமலோ, சுற்றத்தார் அக்குழந்தையைக் கேலி, கிண்டல் செய்துவிடாமலோ பாதுகாப்பது நமது சமூகப் பொறுப்பு. ஒருவேளை இந்தச் சிறுவன் 25 வயதாகியும் புடவை கட்டிக்கொள்ளாமல், முடி வளர்க்காமல் இருந்து அதே ஆணுடையில் பெண் போன்ற செயல்பாடுகளைச் செய்தால் உங்களுக்குக் குழப்பம் ஏற்படலாம்.
# திருநர் பாதுகாப்புச் சட்டம் 2020 கூறியுள்ளதன்படி ஒரு திருநங்கை தன்னை ஆண், பெண் அல்லது திருநங்கை என எப்படி வேண்டுமானாலும் கூறிக்கொள்ளலாம். திருநங்கை ஒருவர் தன்னைத் திருநங்கை என்று கூறினால் அவர் அறுவை சிகிச்சை செய்து இருக்க வேண்டும் என்றோ புடவை கட்டி இருக்க வேண்டும் என்றோ சட்டமில்லை. அவர்களின் பாலினத்தை அவர்கள் மட்டுமே முடிவு செய்ய முடியும்.சிறாராக இருந்தால் பெற்றோருக்கு அந்த முடிவெடுக்கும் அதிகாரமுண்டு.
# மேற்கூறிய கதையில் நடந்தபடி அவர்களைக் கிண்டல் செய்வது உறுதிசெய்யப்பட்டால் குறைந்தது 6 மாதம் முதல் 2 வருடம் வரை சிறைத் தண்டனை உண்டு என்று சட்டம் சொல்கிறது.
# இக்கதையில் இன்னொன்றையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். திருநர் மக்கள் சிறுவயது முதலே சிறு சிறு கலைகளில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள். அதைப் பெற்றோர் புரிந்துகொண்டு இவர்களை மிகப்பெரிய சாதனைக் கலைஞராகக் கொண்டுவர முடியும். இரவில் யாருக்கும் தெரியாமல் கோலம் போடும் அளவுக்கு அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்பதைப் பெற்றோரும் மற்றவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
(தொடரும்)
- கட்டுரையாளர், திருநர் செயற்பாட்டாளர்; iticulturals@gmail.com