

விமன்’ஸ் டென்னிஸ் அசோசி யேஷன் பட்டத்தை வென்ற ஒரு வீராங்கனைக்கு மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வரலாம். ஆனால், துனிசிய நாட்டைச் சேர்ந்த ஆன்ஸ் ஜபேரின் கதறலும் கண்ணீரும் மகிழ்ச்சியால் ஏற்பட்டவையல்ல. அது பாலஸ்தீனத்தில் இறந்த, இறந்துகொண்டிருக்கும் குழந்தை களுக்கான கண்ணீர். அவர்களுக்காக ஏதாவது செய்துவிட முடியாதா என்கிற எண்ணம் அவரை மிகச் சிறந்த மனிதராக உலகத்துக்குக் காட்டியிருக்கிறது. ஆன்ஸ் ஜபேர், ஆப்ரிக்க அரேபிய இஸ்லாமியர்.உலகின் சிறந்த வீராங்கனைகள் பட்டியலில் 7ஆவது இடத்தில் இருக்கிறார். இரண்டு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இறுதிவரை சென்றிருக்கிறார்.
ஆன்ஸ் ஜபேருக்கு மூன்று வயதிலேயே டென்னிஸ் மீது ஆர்வம் வந்துவிட்டது. மகளின் ஆர்வத்தைப் புரிந்துகொண்ட அவருடைய அம்மா, டென்னிஸ் பயிற்சிப் பள்ளியில் சேர்த்துவிட்டார். 14 வயதில் அவர் பயிற்சி பெறுவதற்கான சரியான மைதானங்கள் இல்லை என்பதை அறிந்து தலைநகரத்துக்குக் குடிபெயர்ந்தார். பிறகு பெல்ஜியத்திலும் பிரான்ஸிலும் பயிற்சி எடுத்துக்கொண்டார். “ஒரு சிறுமியின் கனவு நூறு சதவீதம் நிறைவேறும் என்று சொல்ல முடியாது. ஆனால், என் கனவின் மீது என் பெற்றோர் நம்பிக்கை வைத்தனர்.
போட்டிகளுக்காக நாடு முழுவதும் சளைக்காமல் அழைத்துச் சென்றார் அம்மா. உண்மையில் அவர்களின் நம்பிக்கைதான் எனக்கு உத்வேகத்தைக் கொடுத்து, ஒரு வீராங்கனையாக மாற்றியிருக்கிறது” என்கிறார் ஆன்ஸ் ஜபேர். 25 ஆண்டுகளாக விளையாடி, கடின உழைப்பின் பலனாக இந்த இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார் ஆன்ஸ் ஜபேர். கடந்த சில ஆண்டுகளில் மிக வேகமாகத் தரவரிசைப் பட்டியலில் முன்னேறிவருகிறார். ’’எவ்வளவு காலம் எடுத்துக்கொள்கிறோம் என்பது முக்கியமல்ல. எங்கிருந்து விளையாட வருகிறோம் என்பதையும் என்னுடைய ஆட்டத் திறனையும் முக்கியமானதாகக் கருதுகிறேன்” என்கிறார் 29 வயது ஆன்ஸ் ஜபேர்.
விமன்’ஸ் டென்னிஸ் அசோசியேஷன் கோப்பையை வென்றபோது, “என் வாழ்க்கையின் மகத்தான தருணம்தான். நான் மகிழ்ச்சியில் திளைத்திருக்க வேண்டும். ஆனால், என் மனம் முழுவதும் துன்பம் சூழ்ந்திருந்தது. நான் சமூக ஊடகங்களில் குறைவான நேரத்தையே செலவிடுவேன். அப்படியும் பாலஸ்தீன மக்களின் துயரங்கள் என்னை மிகவும் தொந்தரவு செய்துவிட்டன. என்னால் என்ன செய்ய முடியும் என்று நினைத்து சும்மா இருக்க இயலவில்லை. அவர்களுக்காக என்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். விளையாட்டு வீரர்கள் அரசியல் பேசக் கூடாது என்றாலும், என்னால் இந்த விஷயத்தில் அப்படி நடந்துகொள்ள இயலவில்லை.
பல இரவுகளாகவே பாலஸ்தீனக் குழந்தைகள் என்னைத் தூங்கவிடாமல் செய்கிறார்கள். அவர்களின் ஓலம் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. என்னால் அவர்களின் துயர் முழுவதையும் துடைக்க முடியும் என்றோ போரை நிறுத்த முடியும் என்றோ நினைக்கவில்லை. ஆனால், என்னைப் போன்றவர்கள் போருக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். பல குரல்கள் சேரும்போது அதற்கு நிச்சயம் பலன் இருக்கும் என்று நினைக்கிறேன். நான் வென்ற பரிசுப்பணத்தின் ஒரு பகுதியை பாலஸ்தீனக் குழந்தைகளுக்கு வழங்குவதால் பெரிய மாற்றம் நிகழ்ந்துவிடாதுதான். ஆனால், உலக அமைதிக்காக என்னால் முடிந்ததையாவது செய்ய வேண்டும்தானே?” என்று சொல்கிற ஆன்ஸ் ஜபேரின் கதறல் எல்லாரின் கண்களையும் ஈரமாக்கிவிட்டது.
ஆன்ஸ் ஜபேர் பொதுப் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுப்பது இது முதல் முறை அல்ல. துனிசியாவில் ஆவணம் இல்லாமல் குடியேறியவர்களை அரசாங்கம் வெளியேறச் சொன்னபோதும் குரல் கொடுத்தார். ’பெருமைமிக்க துனிசிய, அரேபிய, ஆப்ரிக்கப் பெண்ணாக, ஒவ்வொருவரும் கண்ணியத்துடன் வாழ் வதற்கான உரிமையை நான் கொண்டாடுகிறேன்’ என்று பூஜ்ஜிய பாகுபாடு தினத் தன்று ட்வீட் செய்து,1961ஆம் ஆண்டு ஆப்ரிக்க தினத்தைக் கொண்டாடும் துனிசிய முத்திரையின் படத்தையும் அவர் வெளியிட்டார். கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றாலும் வெல்லாவிட்டாலும் வீராங்கனையாகத் தன்னுடைய வாழ்க்கை அர்த்தம் மிக்கதாக இருக்கிறது என்பதில் மகிழ்ச்சியடைவதாகச் சொல்கிறார்.
“நான் விளையாட ஆரம்பித்தபோது எங்கள் நாட்டில் டென்னிஸ் வீராங்கனைகள் இல்லை. இன்று பலரும் என்னைப் போல ஒரு வீராங்கனையாக வரவேண்டும் என்று சொல்லும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு டென்னிஸ் வீரராக வருவதற்கு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பிறந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்றும் எனக்கு ஸ்பான்சர்கள் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது என்றாலும், ஒரு சிறிய ஆப்ரிக்க நாட்டிலிருந்துகூட ஒரு வீராங்கனை உருவாக முடியும் என்கிற நம்பிக்கையை உருவாக்கியிருப்பதைப் பெரிய விஷயமாகக் கருதுகிறேன்” என்கிறார் ஆன்ஸ் ஜபேர்.