என் பாதையில்: ஒரு கோப்பைத் தேநீர்

என் பாதையில்: ஒரு கோப்பைத் தேநீர்
Updated on
2 min read

முதல் பருவத்தின் கடைசி வேலை நாள் அன்று. உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கியிருந்த பிள்ளைகளின் பெற்றோர் ஒவ்வொருவராக வர, அடுத்த பருவம் தொடங்கியவுடன் மீண்டும் பள்ளிக்கு வந்துவிட வேண்டும் என்கிற உறுதியை வாய்மொழியாகப் பெற்றுக்கொண்டு வழியனுப்பினேன். பிள்ளைகளை அனுப்பிவிட்டுக் புறப்படும் நேரம் வானம் எப்போது வேண்டுமானாலும் கொட்டித் தீர்த்துவிடுவதுபோல் மழை மேகங்களைச் சுமந்து கொண்டிருக்கிறது. விறுவிறுவெனநாலே எட்டில் மேட்டைக் கடந்து மூச்சிரைக்க என் இருசக்கர வாகனத்தைக் கிளப்பினேன். தட்டப்பள்ளம் நிறுத்தம் வந்தவுடன் செலினா மிஸ் என் வண்டியில் ஏறிக்கொண்டார். நாங்கள் இருவரும் சேர்ந்து பயணிப்பது வழக்கம்.

குஞ்சப்பனை வந்ததும் லேசாகத் தூறத் தொடங்கியது. தூறலில் நனைந்தபடியே போய்விடலாம் என்றால் அதற்குள் இருட்டிக்கொண்டு வந்தது. வேகமாக வண்டியை ஓட்டி வனக்கல்லூரியை அடைய மழை வலுத்தது. வனக்கல்லூரியைக் கடந்ததும் சற்றே துவட்டிவிட்டுச் செல்லலாம் என்று செலினா மிஸ் சொல்ல, அங்கிருந்த ஒரு தேநீர் கடைக்குள் புகுந்தோம். “மிஸ் வாங்க” என்று வரவேற்ற அண்ணனைப் பார்த்ததும் என் முகம் பிரகாசமானது. காரணம், என் வகுப்பில் படிக்கும் ஐந்து வயது பிரதீஸ்வரனின் அப்பா அவர்.

நாங்கள் பழ பஜ்ஜியோடு டீயை ருசித்த வேளையில் அந்த அண்ணன் அங்கிருந்தவர்களிடம் பெருமிதத்தோடு என்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார். பிறகு தன் மகனின் படிப்பு குறித்து விசாரித்தார். “மிஸ் என் பையன் எப்படிப் படிக்கிறான்? நல்லா படிக்கிறானா‌‌? வீட்டுல வந்து ஏதேதோ எழுதிட்டே இருக்கான்னுஎன் மனைவி போன்ல சொன்னாங்க” என்றார். “போன்ல சொன்னாங்களா? ஏன் நீங்க அவங்ககூடதானே இருக்கீங்க?” என்று கேட்டேன். “இல்லைமா. இப்ப கொஞ்ச நாளா இங்கதான் வேலை பார்க்கிறேன்.

விடியற்காலை நேரத்துல கடை திறக்கனும். நைட் கடையடைக்க லேட் ஆகும். அதான் நான் இங்கேயே இருந்தர்றேன். மாதம் ஒருமுறைதான் குழந்தைகளைப் பார்க்கப் போவேன்” என்றார். அதுவரை சிரித்துக்கொண்டே இருந்த அண்ணன் முகம் வாடியது. “நல்லா பார்த்துக்குங்கமா என் பையனை. நல்லா சொல்லிக் கொடுக்கறிங்கன்னு தெரியும். இருந்தாலும் வீட்ல மனைவியும் அதிகம் படிக்கல. நீங்க பார்த்துப்பீங்கன்னு நம்பிக்கை இருக்கு” என்றார். அவர் இப்படிச் சொன்ன பிறகு மனதில் என்னென்னவோ ஓடியது.

இப்படி தன் தந்தையையோ தாயையோ ஏதோ ஒரு காரணத்திற்காக பிரிந்து வாழும் சாதாரண சின்னஞ்சிறிய பிஞ்சுகள்தான் நம்மிடம் படிக்க வருகிறார்கள். பிள்ளைகளின் குடும்பச் சூழ்நிலை இப்படியெல்லாம் இருக்கிறதே என்று என் மனம் கனக்க ஆரம்பித்தது. இவர்களுக்கெல்லாம் நாம் என்ன செய்யப்போகிறோம்? இனி இவர்களின் குழந்தைகள் படித்து ஆளானால்தான், இந்தப் பெற்றோர்களின் துயரமும் தீரும். பாவம் இவருடைய சூழல் எப்போது மாறி இவர் எப்போது தன் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வது? நினைக்கும் போதே கண்கள் கலங்கின.

இந்தப் பிள்ளைகளுக்கு நானும் முடிந்தவரை என் பணிக்காலம் முடியும் வரை மனசாட்சியோடு படிப்பைச் சொல்லிக் கொடுத்துவிட வேண்டும் என்று மனதுக்குள் உறுதியேற்றேன். இந்த ஏழைப் பெற்றோர் நம்மிடம் எதிர்பார்ப்பது காசு பணத்தை அல்ல. குறைந்தபட்ச கல்வி, குறைந்தபட்ச எதிர்காலம். அவ்வளவே. உண்மைதான் ஆயிரம் அன்னச் சத்திரங்களைவிட ஏழைக்கு எழுத்தறிவித்தல் புண்ணியம் கோடி அல்லவா?

- சித்ரா, அரசுப் பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளி, அரவேனு - கோத்தகிரி.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in