

முன்பு பெரும்பாலான குடும்பங்களில் ஆண்கள் உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றுவதும் பெண்கள் குடும்பப் பொறுப்புகளை ஏற்பதும் வழக்கம். பெண்கள் கல்வி கற்க ஆரம்பித்த பின்னர் கணவன், மனைவி இருவரும் உழைக்கத் தொடங்கினர். குடும்பத்தின் பொருளாதாரச் சுமை இரு தோள்களில் விழுகிறபோது சுமப்பது எளிதாக இருந்தது. அரிதாகச் சில குடும்பங்களில் பெண்ணின் உழைப்பை மட்டுமே நம்பியிருக்கும் சூழல் ஏற்படுவதுண்டு. ஆட்டோ ஓட்டுநர் மஹ்முதாள்பீவி, அந்த அரிதானவர்களில் ஒருவர். இரண்டு கால்களும் செயலிழந்த கணவரைக் கவனித்துக்கொண்டு, இரண்டு பெண் குழுந்தைகளைப் படிக்க வைத்து ஒட்டுமொத்த குடும்ப பாரத்தையும் சுமந்துவருகிறார்.
தென்காசி சுற்றுவட்டார மக்களால் ஆட்டோ ராணி என பிரியத்துடன் அழைக்கப்படும் மஹ்முதாள்பீவியின் கணவர் செய்யது சுல்தான். இவர்களுக்கு அலிபாத்திமா, ரசூல்பீவி என்கிற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் எட்டாம் வகுப்பும், இளைய மகள் இரண்டாம் வகுப்பும் அரசுப் பள்ளியில் படிக்கின்றனர். தனது வாழ்க்கைப் போராட்டம் குறித்து மஹ்முதாள்பீவி கூறும்போது, “நான் எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளேன். எனது சொந்த ஊர் தென்காசி. என் கணவர் குழந்தைப் பருவத்திலேயே இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்டவர். வடகரையில் அவரது தந்தை நடத்திய பெட்டிக் கடையைக் கவனித்துவந்தார்.
இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்ட அவருக்கு யாரும் பெண் கொடுக்கவில்லை. என்னைப் பெண் கேட்டு வந்தனர். அவரைத் திருமணம் புரிந்துகொண்டன். எங்களுக்குத் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகின்றன. நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட எனது கணவரால் எந்த வேலையும் செய்ய முடியாமல் போனது. ஒரு குழந்தையைப் போல் அவரைக் கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கணவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆட்டோ ஓட்டுநர்கள் வருவதில்லை. யாராவது இரக்கப்பட்டு அழைத்துச் சென்றால்தான் உண்டு. குடும்பம் நடத்த வருமானமும் இல்லை. எனவே, கணவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும், வருமானத்துக்கு வழிவகை செய்யவும் ஆட்டோ ஓட்டக் கற்று, ஓட்டுநர் உரிமம் பெற்றேன்.
என்னுடைய தங்கை கடன் வாங்கி ஆட்டோ வாங்கிக் கொடுத்தார். அந்த ஆட்டோவை ஓட்டி குடும்பத்தைக் கவனித்து வருகிறேன். கடந்த ஏழு ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி, குடும்பத்தைக் கவனித்து வருகிறேன். கணவரையும் கவனிக்க வேண்டியிருப்பதால் அவரையும் சில நேரங்களில் என்னுடனேயே ஆட்டோவில் அழைத்துச் செல்வேன்” என்று சொல்கிறார். மலைபோல் வரும் துயரங்கள் யாவையும் துணிச்சலுடனும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டுவருகிறார்.
தென்காசி புதிய பேருந்து நிலையம் அல்லது பழைய பேருந்து நிலைய ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்ட அனுமதி கிடைத்தால் தனக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்கிறார் மஹ்முத்தாள்பீவி. “சொந்தமாக ஒரு ஆட்டோ இருந்தால் நன்றாக இருக்கும். பிள்ளைகளை நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டும் என்பது எனது விருப்பம்” என்று சொல்லும் மஹ்முதாள்பீவி, தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநர்.