

உலகத்தின் ஒரு பக்கம் வெப்பம் அதிகரிப்பதும் மறு பக்கம் அதிக மழை பொழிவதும் வெள்ள பாதிப்பு ஏற்படுவதுமான நிகழ்வுகள் நடந்துவருகின்றன. இதற்குக் காலநிலை மாற்றம்தான் காரணமென விஞ்ஞானிகள் சொல்கின்றனர். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் ஓர் எச்சரிக்கை என்றாலும் இதனால் பெண்கள், விளிம்புநிலை மக்கள், பால்புதுமையினர் ஆகியோர் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.
பெண்கள் பங்களிப்பு: காலநிலை நீதியும் பாலினச் சமத்துவமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவ. இக்கருத்தை வலியுறுத்தும் வகையில் சென்னையில் சமீபத்தில் இரண்டு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. இதில் ஐந்து தென் மாநிலங்களைச் சேர்ந்த பெண் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர். காலநிலை விவாதங்களில் பெண்களின் பங்களிப்பு பற்றியும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பற்றியும் இப்பயிலரங்கில் எடுத்துரைக்கப்பட்டது.
இது குறித்து விரிவாகப் பேசிய ’வழிகாட்டி’ அமைப்பின் இயக்குநர் ஆர். வசந்தா, “வேகமான நகர்ப்புற, தொழில்துறை விரிவாக்கங்களால் காலநிலை மாற்றம் குறித்த பிரச்சாரத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. இயற்கை வளங்களான காடுகள், ஓடைகள், சிறிய நீர்நிலைகள், ஏரிகள், சிற்றோடைகள் எல்லாம் மெல்ல மறைந்துவருவதை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மாற்றத்தால் சுற்றுச்சூழல் மேலும் மோசமடையாமல் தடுக்கக் கிராமப்புற, நகர்ப்புற மக்கள் என அனைவரிடமும் காலநிலை பாதிப்புத் தடுப்பு குறித்த தகவல்கள் சென்றடைய வேண்டும்.
பெண்கள் மட்டுமன்றி ஒவ்வொரு தனிமனிதரின் பங்களிப்பால் காலநிலை மாற்றம் மோசமாவதைத் தடுக்க முடியும். இதன் மூலம் காலநிலை நீதிக்கான முன்னெடுப்புகளின் கூடவே பாலினச் சமத்துவம் என்கிற நிலையையும் அடைய வேண்டும். அதன் அடிப்படையில் காலநிலை மாற்றம் பற்றி மேலும் அறிதல், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு கொண்டவராக இருத்தல், இனியும் காலம் தாழ்த்தாமல் இப்போதே காலநிலை மாற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் பங்கெடுத்தல், காடு, பூமியைக் காத்தல், காலநிலையைப் புறக்கணிக்காமல் இருத்தல் ஆகிய ஐந்து முழக்கங்கள் வலியுறுத்தப்பட்டன.
பயிலரங்கில் பங்கெடுத்து காலநிலை கல்வியறிவு பெற்ற பெண்கள் தத்தம் ஊர்களுக்குச் சென்று பெருவாரியான மக்களிடம் இது குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த முயற்சியின் மூலம், நீர் பாதுகாப்பு, நில மேலாண்மை, கழிவு மேலாண்மை, விவசாயம், வாழ்வாதாரப் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பல்லுயிர் பாதுகாப்பு, காடுகள், தாவரங்களின் பாதுகாப்பு, கடலோர சுற்றுச்சூழல் மேலாண்மை போன்றவற்றை சாத்தியப்படுவதை இலக்காகக் கொண்டு தொடர்ந்து பயணிக்க உள்ளோம்” என்றார்.
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் எஸ்.ஜனகராஜன், சென்னை சமூகப் பணி பள்ளி பேராசிரியர் அமுதலட்சுமி, பின்தங்கிய நகர்ப்புற சமூகங்களுக்கான வள மையத்தின் (ஐஆர்சிடியுசி.,) வனேசா பீட்டர், நிலையான வளர்ச்சிக்கான அறக்கட்டளையின் டாக்டர். கே.கிருஷ்ணன், துறை சார்ந்த நிபுணர்கள் உள்ளிட்டோர் பயிலரங்கின்போது தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.