

சிரிஷா பண்ட்லா - ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்து, அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் வளர்ந்தவர். கல்பனா சாவ்லாவுக்குப் பிறகு விண்வெளிப் பயணம் மேற்கொண்ட இந்தியாவில் பிறந்த இரண்டாவது பெண் என்கிற பெருமைக்குத் தற்போது அவர் சொந்தக்காரர். ராகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் வரிசையில் விண்வெளிக்குச் சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்காவது நபரும் இவரே.
விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் யூனிட்டி 22 என்கிற விண்கலத்தில் 2021 ஜூலை 11 அன்று அவர் விண்வெளிக்குச் சென்று திரும்பினார். அந்த விண்கலத் தில் அவருடன் ரிச்சர்ட் பிரான்சன் உள்பட 6 பேர் பயணித்தனர். உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ரிச்சர்ட் பிரான்சன் அந்த நிறுவனத்தின் நிறுவனர். 2015ஆம் ஆண்டு விர்ஜின் கேலட்டிக் நிறுவனத்தில் பொது மேலாளராகப் பணியில் சேர்ந்த சிரிஷா, தற்போது அந்த நிறுவனத்தின் துணைத்தலைவராக உயர்ந்திருக்கிறார்.
இந்த வெற்றி அவருக்கு எளிதில் கிடைத்துவிடவில்லை. விண்வெளி வீராங்கனையாக ஆசைப்பட்ட சிரிஷா, நாசாவில் பணியாற்ற விரும்பியிருக்கிறார். ஆனால், சிறு பார்வைக் குறைபாடு காரணமாக அவரால் நாசாவில் விண்கலத்தைச் செலுத்தும் விமானியாகவோ விண்வெளி வீரராகவோ சேர முடியவில்லை. முயற்சியில் தளராத சிரிஷா, நாசாவுக்கு மாற்றாக விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தில் சேர்ந்து வெற்றிகரமாக விண்வெளிக்குச் சென்று சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
அவரது விண்வெளிப் பயண அனுபவம், விண்வெளி சுற்றுலாவின் செலவைக் குறைப்பது எப்படி, ஈர்ப்பு விசையற்ற / எடையற்ற நிலையில் ஆராய்ச்சி நடத்துவது எப்படி, இந்திய விண்வெளித் துறையால் உலகுக்கு என்ன வழங்க முடியும் என்பது உள்ளிட்டவை குறித்து சிரிஷா நிறைய பேசினார். அவர் அளித்த பதில்களின் சுருக்கம்:
“நாங்கள் விண்வெளியில் இருந்த 15 நிமிடங்களே குறைவு என்று நீங்கள் கருதுகிறீர்கள். அப்படியானால், மைக்ரோ கிராவிட்டியில் நாங்கள் மூன்று-நான்கு நிமிடங்கள் மட்டுமே இருந்துள்ளோம். விண்வெளியில் ஆக்கபூர்வமான அறிவியல் பரிசோதனைகளையும் தொழில்நுட்ப முயற்சிகளையும் மேற்கொள்வதற்கு இந்தக் குறுகிய காலம் போதுமானது என்பதே உண்மை. விண்வெளியில் நாங்கள் எவ்வளவு நேரம் செலவழித்தோம் என்பது முக்கியமில்லை. அங்கே எத்தகைய பணிகளை நிறைவேற்றினோம் என்பதே முக்கியம். மேலும், இந்தப் பயணம் இன்னும் பல புதிய பயணங்களுக்கு வழிவகுக்கும்.
என்னைப் பொறுத்தவரை, தனியார் விண்வெளி சுற்றுலாவைப் பொழுதுபோக்கு நிகழ்வாகவோ சாதனை அனுபவமாகவோ சுருக்குவது ஏற்புடையது அல்ல. அத்தகைய சுற்றுலாப் பயணங்கள் விண்வெளி ஆராய்ச்சியில் மட்டுமல்லாமல், மனிதக் குலத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை என்பதே என்னுடைய திடமான நம்பிக்கை.”
‘இந்து தமிழ் திசை’ தீபாவளி மலரில் வெளியான கட்டுரையின் சுருக்கம் இது. இதுபோன்ற மேலும் பல சுவாரசியமான கட்டுரைகளை ‘இந்து தமிழ் திசை’ தீபாவளி மலரில் வாசிக்கலாம்