

இன்றைய காலகட்டத்தில் நாம் பேசியே ஆக வேண்டிய ஒரு விஷயம் விவாகரத்து. நம் நாட்டில் ஆயிரம் திருமணங்கள் நடந்தால் அவற்றில் பதிமூன்று விவாகரத்துகள் நடப்பதாக ‘இன்சைட்ஸ் ஆஃப் இந்தியா’ என்கிற வலைதளம் தெரிவிக்கிறது. இவை சட்டப்படி விவாகரத்து வாங்கியவர்களின் எண்ணிக்கையாக மட்டுமே இருக்கக்கூடும். மற்றபடி நீதிமன்றங்களில் வருடக்கணக்காகப் போராட இயலாதவர்களும் சட்டப்படி விவாகரத்து தேவையில்லை என நினைப்பவர்களும் விவாகரத்து என்கிற ஒன்று இல்லாமலேயே பிரிந்திருக்கக்கூடும். விவாகரத்து செய்துகொண்டோரின் எண்ணிக்கையை விட்டுவிடுவோம். ஏன் விவாகரத்துகள் நடைபெறுகின்றன என்பது ஒரு பக்கம் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம்தான் என்றாலும், விவாகரத்து என்று முடிவானபின் அதை எப்படிக் கையாள்வது என்பதும் விவாதிக்கப்பட வேண்டிய முக்கியமான அம்சம்.
இருவரும் சேர்ந்து பிரிந்துவிடலாம் என மனதொருமித்து முடிவெடுக்கையில் பெரிதாகப் பிரச்சினைகள் வருவதில்லை. குழந்தைகள் விவகாரமோ பொருள் விவகாரமோ அவர்களே பேசி ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால், ஒருவர் மட்டும் விவாகரத்து கோரும் இடங்களில் நிறைய பிரச்சினைகள் முளைக் கின்றன. முதலில் வருவது அகங்காரம் என்கிற ஈகோ பிரச்சினை. இருவர் இணைந்து வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையில் விவாகரத்து செய்துகொண்டுவிடலாம் என்று ஒருவர் மட்டும் எப்படி முடிவெடுக்கலாம்? இருவரின் சம்மதமும் அவசியமில்லையா? இப்படித்தான் அந்த ஈகோ தொடங்கும்.
காயப்படுத்தும் ஈகோ
‘நான் விவாகரத்துக்குத் தயார் இல்லாத நிலையில் நான் அதைப் பற்றிச் சிந்திக்காத நிலையில் என்னை வேண்டாம் என்று முடிவெடுப்பது என் ஈகோவை முதலில் அடிக்கிறது. அதனால், இருவரும் சேர்ந்து கருத்தொருமித்த விவாகரத்து கோரும் நிலையை நான் உடைக்கிறேன். இந்தத் திருமணத்திலிருந்து வெளிவர விரும்பும் இணையரின் வாழ்வை நான் கடினமாக்குவதன் மூலம் எனக்கொரு மனதிருப்தியை நான் கொண்டுவர முயல்கிறேன். இதனால், நானும் கஷ்டப்பட்டாலும் சரி, இருவருக்கு இடையில் பிள்ளைகள் திண்டாட்டத்தில் இருந்தாலும் சரி, எனக்கு வேண்டியது என் ஈகோவின் திருப்தி.’ - ஈகோவால் ஆட்கொள்ளப்படுகிற பலரும் ஆண்/பெண் பாகுபாடின்றி இப்படித்தான் சிந்திக்கிறார்கள்.
எந்த உறவாக இருந்தாலும் மனிதர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான ஒரு விஷயம் உண்டு. ஓர் உறவில் இணையத்தான் இருவரின் சம்மதமும் விருப்பமும் முக்கியம்; அந்த உறவை முறித்துக்கொள்ள ஒருவரின் முடிவே போதும். அதாவது, ஒருவருக்கு ஓர் உறவு இனி தேவையில்லை என்று தோன்றும்போதே, மனதளவில் அந்த உறவு முறிந்துவிடுகிறது. அதற்கு மேல் அவரை வற்புறுத்தியோ, பயமுறுத்தியோ, மன அழுத்தத்தை ஏற்படுத்தியோ உடன் இருத்திவைத்துக்கொள்ள முனைவது, ஏதோவொரு விதத்தில் நம் ஈகோவைத் தணித்துக்கொள்ளவோ இல்லை, வேறு ஏதாவது நம் செளகரியத்துக்காகவோதான் இருக்கும்.
பொருளாதாரத் தற்சார்பு அவசியம்
அடுத்தது பொருளாதாரம். அதுவரை பொருளாதாரச் சுதந்திரம் இல்லாத பெண்கள், திடீரெனத் தனித்துவிடப்படுகையில் எப்படிச் சமாளிக்கப்போகிறோம் என்கிற பயம் ஏற்படுகிறது. சில குடும்பங்களில் வேலைக்குச் செல்லாமல் இணையரின் உழைப்பில் சோம்பித்திரியும் ஆண்களுக்கும் இப்படி ஏற்படுவது உண்டுதான். இதில் பிள்ளைகளும் உடன் இருந்துவிட்டால் இன்னும் பெரிய சுமையாக ஆகிவிடும் என்பதும் உண்மைதானே. நிறைய படித்திருந்தும் விவாகரத்து வரை பொருள் ஈட்டாமல் இணையரின் வருமானத்தில் குடும்பத்தை நடத்திக்கொண்டிருக்கும் பெண்களுக்கும் இந்தப் பயம் வருகிறது. திடீரென இந்த வயதுக்கு மேல் முன் அனுபவம் இல்லாமல் ஒரு வேலை தேடினாலும், கிடைத்தாலும், தன் செலவுகளுக்கு இவ்வளவு நாள் இருந்த, அனுபவித்துவந்த செளகரியங்கள் கிடைக்காது என்பதும் ஒரு காரணம். இங்கும் பிள்ளைகள் இருந்தால் இன்னும் இந்தப் பயம் அதிகமாகிறது.
இந்தக் காலத்தில் பொருளாதார தற்சார்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் அடிப்படைத் தேவை. திருமணம் புரிவதே இணைந்து வாழத்தானே. அப்படியிருக்க எப்படி விவாகரத்து என்கிற ஒன்றை ஒட்டிச் சிந்தித்துத் தற்சார்பு நிலையில் வாழ முயல வேண்டும் என்கிற கேள்வி எழலாம். பொருளாதாரச் சுதந்திரம் என்பது ஒருவர் நம் வாழ்வில் இல்லாமல் போகும்போது மட்டும் நமக்குக் கைகொடுப்பது அல்ல. அது தன்னம்பிக்கை தரும். அவசரத் தேவைகளுக்கு உதவும். நம் கனவுகள், குடும்பத்தாரின் சில கனவுகளை நிறைவேற்ற கைகொடுக்கும். என் இணையர் தேவைக்கு அதிகமாகவே பொருளீட்டுகிறார், அதனால் நான் வீட்டில் இருந்து வீட்டையும் பிள்ளைகளையும் பராமரிக்கவே விரும்புகிறேன் என்று சொன்னால், உங்கள் உழைப்புக்கு ஏற்றவாரோ அல்லது ஏதோ ஒரு சிறு தொகையையோ உங்கள் இணையரின் வருமானத்திலிருந்து பெற்றுக் கொள்ளும் வழக்கத்தைக் கொண்டுவாருங்கள். இன்றைய வாழ்வு நிரந்தரம் அல்ல. நிரந்தரமாக இருந்தால் நல்லதுதான். ஆனால், இல்லாமல் போகும் ஒரு நாளில் அது உங்களுக்கோ இல்லை அவருக்கோகூட உதவலாம்தானே.
பிரிவு என்பதும் இயற்கையே
பிரிவு என்பது விவாகரத்தால் மட்டும்தான் நடக்கும் என்பதல்ல. இயற்கைகூட மனிதர்களைப் பிரிக்க பல வழிகளைக் கொண்டிருக்கிறது. இருவர் இணைந்து வாழ்வது என்கிற முடிவு ஒரு கூட்டுப் பயணத்துக்கான ஆயத்தமே தவிர, பயணம் முழுவதும் இருவரும் சேர்ந்தே பயணிப்போம் என்பதை நாம் மட்டுமே நிர்ணயிப்பது இல்லை. மரணம் என்ற ஒன்று அனைவருக்கும் உண்டுதானே? என்றாவது ஒரு நாள் மரணித்துவிடுவோமே என்று இன்று வாழாமல் போய்விடுகிறாமா அல்லது நாளை குறித்த சிந்தனையே இல்லாமல் வாழ்கிறோமா? அப்படித்தான் எல்லாமே.
செனக்கா என்று ஒரு தத்துவஞானி, பொ.ஆ.பி (கிபி) 300 களில் வாழ்ந்தவர். அவர், ‘ஆயிரம் வருடங்களுக்கு முன் யாரோ ஒருவர் வாழ்வில் ஒருமுறை ஒன்று நடந்திருந்தால்கூட அது மீண்டும் இன்று யாரோ ஒருவர் வாழ்வில் நடப்பதற்கான சாத்தியக்கூறு உண்டு’ எனச் சொல்லியிருக்கிறார். அவரவர் வாழ்வை அவரவரே பார்த்துக்கொள்ள இயலாத இந்தக் காலத்தில், நாம் தனித்துவிடப்படுகையில் அல்லது அப்படி ஒன்று நிகழ்கையில் நாம் சுதாரித்துக்கொள்ள ஆயிரம் வழிகள் இருக்கும்போது ஏன் திண்டாட வேண்டும்?
எதற்கும் பிறரை எதிர்பார்த்தே வாழ்ந்திருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் எது நடந்தாலும் அதை எதிர்கொள்ளும் சக்தியுடன் வாழ்வது நமக்கு விழும் அடியை தாங்கும் சக்தியை அளிக்கும். குறைந்தபட்சம் அந்த அடியின் வலியை மட்டுப்படுத்தவாவது செய்யும்.
(விவாதிப்போம் மாற்றுவோம்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.