என் பாதையில்: மூத்தோரையும் கொஞ்சம் கவனியுங்கள்!

என் பாதையில்: மூத்தோரையும் கொஞ்சம் கவனியுங்கள்!
Updated on
1 min read

வயதானவர்களில் பலரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள தால் நீண்டநேரப் பயணங்களின்போதும் நடக்க முடியாத சூழ்நிலையிலும் பெரியவர்களுக்கான அடல்ட் டயபர்களைப் (Diapers) பயன்படுத்துகிறார்கள். ஆனால், அவை சரியான அளவில் கிடைப்பதில்லை. பலவிதமான பிராண்டுகளில் கிடைத்தாலும்கூட அவை முதியவர்களுக்குப் பொருத்தமானதாக இருப்பதில்லை.

பெரும்பாலான டயபர்கள் இறுக்கமாக இருப்ப தால் அசௌகரியமாக இருக்கின்றன. பத்து மணி நேரம் தாங்கும், 12 மணி நேரம் தாங்கும் என்றெல்லாம் விளம்பரம் செய்கிறார்கள். உண்மை நிலவரம் வேறு. பலருக்கும் நான்கு மணி நேரம்கூடத் தாக்குப் பிடிப்பதில்லை. குளிர் காலத்தில் கேட்கவே வேண்டாம். டயபர் போட்ட உடனே ஈரமாகிவிடுகிறது. அப்போது அவர்கள் அவமானமாக உணர்கிறார்கள். தர்மசங்கடமாகவும் இருக்கிறது. குற்றம் செய்ததைப் போல ஒரு குற்ற உணர்வு. இதனால், சில நேரம் தாழ்வு மனப்பான்மையும் அவர்களுக்கு ஏற்படுகிறது. எந்நேரமும் ஈரத்திலேயே இருப்பது போன்ற உணர்வு. அது மன உளைச்சலில் கொண்டுபோய் விடுகிறது. இதனால் குடும்பத்தில் பல சிக்கல்கள். இவற்றின் விலையும் மலைக்க வைக்கிறது. எல்லாராலும் எளிதில் வாங்க முடியாதபடி இருக்கிறது.

பெரியவர்களுக்கான டயபரில் உள்ள மிகப்பெரிய விசித்திரம் என்னவென்றால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான டயபர்தான். ஆணின் உடலமைப்பு வேறு, பெண்ணின் உடலமைப்பு வேறு. அப்படி இருக்கும்போது எப்படி ஒரே மாதிரியான டயபரை அவர்கள் பயன்படுத்த முடியும்? எந்த அளவுக்கு அது பயனுள்ளதாக இருக்கும்?

சில வகை டயபர்கள் வயதானவர்கள் அவர்கள் உடல்வாகுக்கு ஏற்றவாறு அதிலேயே உள்ள டேப் போட்டு ஒட்டிக்கொள்ளும் வகையில் உள்ளன. ஆனால், இதை அணிய முதியவர்கள் சிரமப்படுகிறார்கள். இன்னொருவரின் உதவி இருந்தால்தான் அவர்களால் இதை எளிதில் அணிய முடிகிறது. மற்றொரு வகை மிகவும் இறுக்கிப் பிடித்துக்கொண்டு இடுப்பில் புண் வந்துவிடுமோ என்று பயப்படும் அளவுக்கு அழுத்துகிறது. அந்தப் புண்ணுக்குத் தனியாக மருந்து போட்டு கவனிக்க வேண்டியிருக்கிறது. வயது முதிர்வால் உடம்பு தளர்ந்துபோய் இருப்பதாலும் பலவீனமாக இருப்பதாலும் டயபர் அணிவதால் ஏற்படும் பக்க விளைவுகள் முதியோருக்குக் கூடுதல் சுமை. டயபர் தயாரிப்பு நிறுவனங்கள் முதுமையின் சுமையை உணர்ந்து எளிதில் அணியும் வகையில் வடிவமைப்பில் மாற்றத்தைக் கொண்டு வருவார்களா?

- ஜே. லூர்து, மதுரை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in