திருநம்பியும் திருநங்கையும் - 07: திருநங்கையை ஆணாக மாற்றும் சிகிச்சை உண்டா?

திருநம்பியும் திருநங்கையும் - 07: திருநங்கையை ஆணாக மாற்றும் சிகிச்சை உண்டா?
Updated on
3 min read

“நெஞ்சு எரிச்சல் தாங்க முடியல. எதைச் சாப்பிட்டாலும் கொமட்டுது குரு” என்று சொன்னதும் நான் கர்ப்பமாக இருப்பதாகச் சொல்லி என் குரு என்னைக் கிண்டல் செய்தாள்.

“குரு.. நீங்க விளையாட்டா நெனைக்கா தீங்க. எனக்கு உண்மையிலேயே நெஞ்சு எரியுது, கொமட்டுது. எதைத் தின்னாலும் வாந்தி வர மாதிரியே இருக்கு புரிஞ்சிக் கோங்க.”

உடனே என் குருபாய் குறுக்கிட்டு என்னைக் கிண்டல் செய்ய, எங்க வீடு முழுக்க சிரிப்புச் சத்தம்.

“ஏய்.. அமைதியா இருங்கடி. நான் கிண்டல் பண்ணா நீங்களும் அவளைச் சத்தாய்ப்பீங்களா? சரிடி மேனகா நீ போய் ஒரு நல்ல டாக்டரைப் பாரு.. ஏய் ரதி நீ அவகூட உதவிக்குப் போ.”

என் குரு எனக்குப் பணமும் கொடுத்து அனுப்பினாள்.

“ரதி எனக்கு என்னமோ பயமா இருக்குடி. ஏதாவது பெரிய பிரச்சினையா இருக்குமோ?”

“பயப்படாதே மேனகா. ஏதாவது ஒத்துக்காததைக் கடையில சாப்டிருப்ப. அதுவாதான் இருக்கும்.”

ரதி எனக்கு ஆறுதல் கூறினாள். அவள் சொல்லும்போது எனக்கு நினைவுக்கு வருது. “ஆமாம் நேத்து நான் பாணி பூரி சாப்டதுல இருந்துதான் இந்த மாதிரி இருக்கு. இருந்தாலும் ஒருமுறை குரு சொன்ன மாதிரி டாக்டர்கிட்ட பார்த்துடுவோம்.”

அந்த கிளினிக் ரொம்பப் பெருசா இருந்தது. ரிசப்ஷன்ல இருந்தவங்க எங்களைப் பார்த்ததும் கொஞ்சம் பரபரப்பானாங்க.

“என்ன வேணும்?”

“இல்ல. நாங்க காசு கேட்டு வரல. எனக்கு உடம்பு சரியில்ல. டாக்டரைப் பாக்கணும்.”

பேரு, அட்ரஸ் எல்லாம் கேட்டு எழுதினாங்க. ஒரு டோக்கனைக் கொடுத்து உட்கார வச்சாங்க.

“எத்தனை நாளா இந்தப் பிரச்சினை இருக்கு?”

“நேத்துல இருந்து டாக்டர்”

“எக்ஸ்ரே, இசிஜி ரெண்டும் எடுங்க. பார்த்துட்டு நான் சிகிச்சை கொடுக்கறேன்”

ஒரு முறை எக்ஸ்ரே எடுத்ததும் மீண்டும் எக்ஸ்ரே எடுக்கக் கூப்பிட்டாங்க. சிஸ்டர் வேகமா வெளில போனாங்க. டாக்டர் கூடவே வந்தாரு. இப்போ டாக்டர் எக்ஸ்ரே எடுத்தார். எல்லாம் கூடி கூடி ஏன் பேசுறாங்க? எனக்குக் கொஞ்சம் பயமா இருந்தது.

கதையல்ல நிஜம்

l மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களில் சிலர் திருநங்கைகளின் உடலமைப்பு குறித்துக் குறைவான புரிதலைக் கொண்டிருப்பதைத்தான் மேனகாவின் கதை விளக்குகிறது. பால் புதுமையர்களின் உடல் பாகங்கள் குறித்த புரிதல் இல்லையென்றால் அவர்களிடமே கேட்கலாம். இதில் கூச்சப்பட ஒன்றுமில்லை. திருநங்கைகள், திருநம்பிகளின் உடலமைப்பை அறிந்து பல மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகிறார்கள். பல தனியார் மருத்துவமனைகளும் திருநங்கைகளின் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இது குறித்த புரிதலைப் பெறுகின்றனர் என்பது வரவேற்கத்தக்கது.

l World Professional Association for Transgender Health (WPATH) நிறுவனம் மாறிய பாலின மக்களுக்கான ஒரு சர்வதேச நிறுவனமாகும். பால் புதுமையினரின் உடல் நலம் சார்ந்த பணிகளை இவர்கள் மேற்கொள்கின்றனர். இதில் உள்ள மருத்துவர்களில் மாறிய பாலினத்தவரும் உண்டு. இவர்கள் மருத்துவர்களுக்கு மாறிய பாலினத்தவர்களுக்கான உடல்ரீதியான சிகிச்சை குறித்த தகவல்களை விளக்கிக் கையேடுகளை வெளியிட்டு உள்ளனர். இதில் இந்தியாவைச் சார்ந்த ஒரு மருத்துவரும் உறுப்பினராக உள்ளார். இது போன்ற வழிகாட்டுதல்கள் இந்தியாவிலும் வந்துவிட்டால் இந்தப் பிரச்சினைகள் விரைவில் தீர்ந்துவிடும்.

l தமிழகத்தில் திருநங்கை, திருநம்பி மக்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்க சென்னை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் செயல்பட்டுவருகின்றன. இவற்றில் ஹார்மோன் சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது இந்தியாவுக்கே முன்மாதிரியான நடைமுறை!

l தேசிய மருத்துவ ஆணையம், இந்தியாவில் மருத்துவர்கள் யாராவது பால் புதுமையர்களிடம், “இதை நான் சரி செய்துவிடுகிறேன். அதற்கான சிகிச்சை எங்களிடம் உண்டு” என்று கூறினால், அது குற்றம் என்று கூறுகிறது. உதாரணத்துக்கு ஒரு திருநங்கை மீது மின்சாரம் பாய்ச்சியோ தொடர் ஆலோசனை அல்லது மருந்து மாத்திரைகள் கொடுத்தோ ஆணாக மாற்றிக் காட்டுகிறேன் என்று ஒரு மருத்துவரோ மருத்துவமனையோ முன்வந்தால் அவர்களின் மருத்துவ உரிமத்தைக்கூட ரத்து செய்ய முடியும் எனத் தேசிய மருத்துவ ஆணையம் கூறியுள்ளது.

l தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பால்வினை நோய் பிரிவில் திருநங்கைகள் சிகிச்சைக்கு வந்தால் அவர்களை எவ்வாறு மனிதாபிமானத்துடன் அணுகவேண்டும் என்கிற பயிற்சியை தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் அளித்துள்ளது.

டாக்டர் என்னை அழைச்சார். “ஏம்மா உங்களுக்கு இதுக்கு முன்னாடி யாராச்சும் எக்ஸ்ரே எடுத்தாங்களா?”

“இல்லை டாக்டர். அதுக்கு அவசியம் வரல”

“சரி உங்ககூட வந்தவங்களைக் கூப்பிடுங்க”

எனக்கு ரொம்ப பயமாயிடுச்சி. எதுக்கு ரதியைக் கூப்பிடுறாங்க? எனக்கு என்னாச்சி? கடவுளே எனக்கு எதுவும் இருக்கக் கூடாது.

“இவங்களுக்கு ரெண்டு மார்புலேயும் கட்டி வந்திருக்கு. மனசைத் தேத்திக்கோங்க. கட்டி ரொம்பப் பெருசா இருக்கு. உடனே இதுக்கான மத்த டெஸ்டுகளை எடுக்க ஆரம்பிக்கணும்.”

டாக்டர் சொன்னதைக் கேட்டு ரதியும் நானும் குலுங்கிக் குலுங்கி சிரிச்சோம்.

“டாக்டர் இதுக்கா இவ்ளோ நேரம் வேஸ்ட் பண்ணீங்க. என்கிட்ட கேட்டிருந்தா நானே சொல்லியிருப்பேனே. அது என்னோட செயற்கை மார்பகம். நான் சிலிக்கான் வச்சிருக்கேன்.”

அடுத்து ஸ்கேன் எடுத்தாங்க.

“வயிறு நெறைய தண்ணி குடிச்சீங்களா?”

“குடிச்சேன் டாக்டர்.”

எண்ணெய் மாதிரி வயிறு முழுக்கத் தடவி ஒரு மெஷினை வச்சி ஆராய்ந்தார்.

“நீங்க அறுவை சிகிச்சை செஞ்சிட்டிங்களா?”

“செஞ்சிட்டேன் சார்.”

“அப்போ நீங்க முழு திருநங்கைதான். பெண்ணுன்னுகூடச் சொல்லலாம். ஓகே நீங்க பெரிய டாக்டர போய்ப் பாருங்க”

எல்லா டெஸ்ட்டும் எடுக்கணும்னு சொன்ன பெரிய டாக்டரிடம் போனேன்.

“மேனகா, உங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லம்மா. உணவு அலர்ஜிதான். ரெண்டு நாள் மெடிசின் கொடுக்குறேன் சரியா போய்டும். உங்க ரிப்போர்ட் எல்லாமே நார்மல். நீங்க போகலாம்.”

அப்பாடா எனக்கு இப்போதான் நிம்மதியா ஆச்சு! இனி அந்த பானிபூரி கடை பக்கம்கூடப் போக மாட்டேன்.

எனது ரிப்போர்ட்டைப் பார்த்தேன். கணையம், குடற்பகுதி, கல்லீரல், கருப்பை எல்லாம் நார்மல் என்று இருந்தது.

கருப்பையா? எனக்கா?

பிறக்கும்போது இல்லாத கர்ப்பப்பை ஸ்கேனில் எப்படித் தெரிந்திருக்கும்? எனக்கு அழுவதா, சிரிப்பதா எனத் தெரியவில்லை.

(தொடரும்)

கட்டுரையாளர், திருநர் செயற்பாட்டாளர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in