

இணையர் தேர்வில் அடிப்படையான மனப் பொருத்தம் தவிர மேலும் சில பொருத்தங்களும் அவசியம். பொழுதுபோக்கு அம்சங்கள் நான்கு இருந்தால் இரண்டாவது ஒத்துப்போவது இருவரும் சேர்ந்து போக்கும் பொழுதைச் சுவாரசியமாக மாற்றும். அது இருவருக்குள்ளும் நட்பை வளர்க்கும் பாலமாகவும் இருக்கும். ரசனைகள் வேறு வேறாக இருந்தால் இணையரில் ஒருவர் தனக்குப் பிடித்ததைச் செய்யாமல் போவதற்கோ தனியாகத்தான் செய்துகொள்ள வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்துக்கோ ஆளாக நேரிடும்.
ஒன்றான ரசனைகள்
இருவருக்கும் படிக்கும் ஆர்வம் இருந்தால் இருவரும் சேர்ந்து படிக்கலாம் அல்லது படித்ததைப் பகிர்ந்துகொள்ளலாம். இணையரில் ஒருவர் நிறைய படித்து, மற்றவர் புத்தகங்களின் பக்கமே போகாமல் இருந்தால், “என்ன எப்போ பார்த்தாலும் புத்தகத்தை வச்சிட்டு உக்காந்திருக்க?” என்றோ, “மருந்துக்குக்கூட வாசிக்க மாட்டியா?” என்றோ கேள்விகள் எழலாம். இரண்டு ரசனைகள் ஒத்துப்போனால், ஒத்துப்போகாத இரண்டு ரசனைகளை ஒருவர் இல்லாதபோது அடுத்தவர் நிறைவேற்றிக் கொள்ளலாம். நான்குமே ஒத்துப்போகவில்லையெனில் என்ன சமைக்கலாம், பிள்ளைகள் எப்படிப் படிக்கிறார்கள் என்று பேசிக்கொண்டே எவ்வளவு காலத்தைத்தான் தள்ள இயலும்?
இப்படி எத்தனையோ இணையர்கள் திருமணத்துக்குப் பிறகு புத்தகம் வாசிப்பதையோ இசைக் கருவிகள் வாசிப்பதையோ ஓவியம் வரைவதையோ கைவினைப் பொருள்கள் செய்வதையோ நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுப் புலம்பித் தவிக்கிறார்கள். ஆதிக்கம் இல்லாத இணையர்களுக்குள் இவற்றை எல்லாம் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. என்றாலும், நம்முடன் சேர்ந்து ரசிக்கும் இணையர் இருந்தால் அந்த ஊக்கத்தில் நம் ரசனையும் கலையும் மெருகேறும்தானே?
வேலைக்குச் செல்வது யார்?
மண வாழ்க்கை குறித்த தங்கள் விருப்பத்தை இருவரும் விவாதித்துப் புரிந்துகொள்வது அவசியம். குழந்தை வளர்ப்பு என்பது எவ்வளவு பெரிய பொறுப்பு என்பதையும் இருவரும் இணைந்து அந்தப் பொறுப்பை எப்படி நிறைவேற்றத் தயாராக இருக்கிறார்கள் என்பதையும் பேசிப் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்தது வேலை. இருவரும் வேலைக்குப் போகப்போகிறோமா இல்லை ஒருவர் வேலைக்குப் போய் ஒருவர் வீட்டிலிருந்து குடும்பத்தின் மற்ற வேலைகளைக் கவனிக்கப்போகிறாரா என்பதையும் முன்கூட்டியே பேசி முடிவெடுக்க வேண்டும். யார் வேலைக்குப் போவது, யார் வீட்டில் இருக்கப்போவது என்கிற தெளிவும் வேண்டும். சமூகம் வகுத்திருக்கும் இலக்கணங்களின் அழுத்தம் இல்லாமல் இருவருக்கும் எது சரியெனத் தோன்றுகிறதோ அப்படி அவரவர் விருப்பத்தின்படி முடிவெடுக்க வேண்டும். எத்தனையோ பெண்கள், “நான் திருமணத்துக்கு முன்னால வேலைக்குப் போயிட்டு இருந்தேன். கல்யாணத்துக்கு அப்புறம் நிக்கச் சொல்லிட்டாங்க. வாழ்க்கையே வீணாப் போச்சு. இன்னைக்கும் வேலையில இருந்திருந்தா நான் இந்தப் பதவியில இருந்திருப்பேன், இவ்ளோ வருமானம் வந்திருக்கும்” என்று புலம்புகிறார்கள். கணவன் - மனைவி இருவரில் எவரின் திறமையும் வீணாகக் கூடாது. அப்படி நம் சுயநலத்துக்காக வீணாக்கினால், நாம் என்ன இணையர்?
இருவரது கனவுகள் என்ன, விருப்பங்கள் என்ன, ஒருவருக்கு இன்னொருவர் அவரவர் கனவுகளை அடைவதற்குத் துணை நிற்போமா, அவர்தம் கனவுகளை நாம் மதிக்கிறோமா என்பதையும் பகிர்ந்துகொள்ள வேண்டும். எவர் கனவையும் உடைத்தெறியும் உரிமை யாருக்கும் இல்லை. முடிந்தால் உடன் நிற்க வேண்டும், இல்லை வழியையாவது அடைக்காமல் இருக்க வேண்டும். ஆண் - பெண் இருவரும் இணைந்து ஒருவரை மற்றவர் மதித்து இருவருக்கும் தேவையான இடமளித்து, எல்லாவற்றிலும் துணை நின்று வாழ்வதே சரியான வாழ்க்கை. மேலே சொன்னவற்றைவிட அதிகமாகவும் சில விஷயங்கள் தேவைப்படலாம். சில விஷயங்கள் அமையாவிட்டாலும் சந்தர்ப்பச் சூழல்களுக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ள நேர்ந்தாலும் பரவாயில்லை. ஆனால், முடிந்தவரை முயன்று வாழ்ந்தாலே இருவரும் அழகாக வாழ்வதுடன் பிள்ளைகளும் நல்லபடியாக வளர்வதற்கான அருமையான சூழலை அமைத்துக் கொடுக்கலாம்.
வாழ்க்கை மிகவும் எளியது. நாம்தான் பல பிரச்சினைகளை உள்ளே கொண்டுவந்து அதைச் சிக்கலாக்கிக்கொள்கிறோம். யாரும் தியாகிகளாக வாழ வேண்டியதில்லை. பிறந்திருக்கும் ஒவ்வோர் உயிருக்கும் மற்றவரைத் துன்புறுத்தாமல், தன் விருப்பத்துக்கு வாழும் உரிமை உள்ளது. அனைவரும் இங்குத் தனி மனிதர்களே. இதைப் புரிந்து கொண்டு வாழ்ந்தாலே போதும். சொர்க்கம் என்று எதுவும் இவ்வுலகுக்கு வெளியே இல்லை. நம் வாழ்வைச் சொர்க்கமாக்கிக்கொள்வதும் நரகமாக்கிக்கொள்வதும் நம்மிடம்தான் உள்ளது.
(விவாதிப்போம் மாற்றுவோம்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.