பெண்ணுக்கு ‘ஆட்டோகிராப்’ இல்லையா?

பெண்ணுக்கு ‘ஆட்டோகிராப்’ இல்லையா?

Published on

சமீபத்தில் திருமணமான பெண் ஒருவரோடு பேசும் சூழல் அமைந்தது. கல்யாணக் களை எதுவுமே அவரிடம் இல்லை. அழுகையும் சோகமுமாக அவர் பகிர்ந்த விஷயம் மிகவும் பழைய விஷயம்தான். ஆனாலும் நவீனம், வளர்ச்சி என்கிற மேம்பாடுகளோடு உலகம் பளபளவென்று தெரியும் இக்காலத்திலும் பெண்ணுக்கென்று எழுதிவைத்திருக்கும் பல விதிகள் மாறவில்லை என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. ஆணின் வாழ்க்கைப் பக்கங்களில் எவ்வளவு காதல் இருந்தாலும் அதை வீரமாகவும் அவன் ஆண்தானே என்கிற சலுகையும் மதிப்பும் கொடுக்கப்படுவதுபோல் பெண்ணுக்கு இல்லை என்பதே இன்றளவும் உண்மை.

திருமணமான புதிதில் மனைவியைப் பாராட்டி கொஞ்சிப் பேசும் அன்பில் உருகிப்போகும் பல பெண்கள் தங்களின் கடந்த கால வாழ்க்கையை பற்றி, அன்பான கணவன்தானே என்று பகிர்ந்துவிடுகிறார்கள். அந்தப் பகிர்தலில் அவளுக்கென ஒரு காதல் இருந்ததையோ பக்கத்து வீட்டு இளைஞன் கொடுத்த காதல் கடிதத்தைப் பற்றியோ ஒரு வார்த்தை சொல்லிவிட்டால், அதன் பின் அப்பெண்ணின் வாழ்க்கை துயரவிதியாகவே முடிந்துபோகிறது. என்னிடம் பேசிய பெண்ணும் தன் பருவ வயதில் அவளுக்கென இருந்த ஒரு காதலைப் பற்றிக் கணவனிடம் சொல்லியிருக்கிறாள். அப்போதிலிருந்தே ஆரம்பித்த வினை விவாகரத்தில் முடிந்துவிடும் போலத் தெரிந்தது.

ஆணின் வாழ்க்கையில் உதிக்கும் காதல்களைப் பற்றித் திரைப்படங்கள் வரும்போதெல்லாம் சக்கை போடு போடுவதுபோல், ஒரு பெண்ணின் காதல் பக்கங்களைச் சொல்ல முடியுமா? பருவம் எய்திய காலத்தில், கல்லூரிக் காலத்தில், தொடர்ந்த பயணங்களில் ஏறி இறங்கும் பேருந்து நிறுத்தத்தில், பால் வாங்கப் போகும் வழியில் எங்கோ ஒருவன் ஒரு சொட்டு காதலை அவளுக்குள்ளும் வீசியிருப்பான். தன் காதலைப் பெற்றோருக்காகவோ மற்றவருக்காகவோ தியாகம் செய்துவிட்டுக் கல்யாணப் பந்தத்தில் போயிருப்பாள். தாலி கட்டியவனை மனதில் ஏற்றும் முன் அவள் மனதில் காதலின் வடுக்கள் இல்லாமல் இருக்காது. ஆனால், அந்தக் காயங்களைச் சொல்லிவிட்டால் அவள் ஒழுக்க வாழ்க்கையை அறுத்துக் கிழித்துக் கூறுபோடுவார்கள் என்று நினைத்துத்தான், “நீதான் எனக்கு முதல்” என்பதுபோல் நடித்துக்கொண்டு வாழ்க்கையை நகர்த்தும் பெண்கள் பலரின் காதலைச் சமூகம் இன்னும் தரிசிக்கவில்லை எனலாம்.

மறைக்கப்படும் காதல்

“நான் ஸ்போர்ட்ஸ்ல கிங்கா இருக்கிறப்ப என்னை விரட்டி விரட்டி காதலிக்க ஒருத்தி இருந்தா…”, “என் டான்ஸைப் பார்த்து காலேஜ்ல தேடி வந்து என்னைக் காதலிக்க ஒருத்தி இருந்தா…”, “என் ஸ்டைலைப் பார்த்து என் மாமி மக விரட்டி விரட்டி லவ் பண்னா…” என்றெல்லாம் தன் காதல் பக்கங்களைத் தாலி கட்டிய மனைவியிடம் பெருமையாக எடுத்து வீசும் கணவனிடம், கல்லூரிக் காலத்தில் தான் பாடுவதைப் பார்த்து “உன்னை விரும்புகிறேன்” என்று சொன்னவனைப் பற்றிச் சொல்ல முடியாது. காதலை ஏற்காகமல் போனதால் விஷம் அருந்திய காதலனைப் பற்றிச் சொல்ல முடியாது. பெற்றோருக்காக விட்டுக்கொடுத்த காதலின் வலியைச் சொல்லி அழ முடியாது.

இன்னும் பலரால் தன் மனைவிக்கோ, காதலிக்கோ இன்னொரு காதல் வாழ்க்கை இருந்ததைக் கேட்கக்கூட முடியவில்லை. அந்தக் காதலின் தழும்புக்கு மருந்து வைக்க மனசில்லை. அந்தக் காதலையும் அவளையும் அசிங்கமாகவே ஒதுக்கி வைக்கும் மனநிலை இன்னும் அழியவில்லை என்பதே துயரம். எப்போதும் எல்லாவிதத்திலும் என் மனைவிக்கு ‘நானே முதல்’ என்கிற மனநிலையிலிருந்து இன்னும் பெரிய மாற்றம் எதுவும் வரவில்லை என்பதை இதைப் போன்ற சம்பவங்கள் வெளிச்சப்படுத்துகின்றன.

எவ்வளவுதான் மறைத்து மூடினாலும் பெண்ணின் மனப்பக்கங்களிலும் அவளுக்கான காதல்கள் இருக்கவே செய்யும். அதற்கான கொண்டாட்டங்களும், அந்த நினைவுகளின் துயரங்களும் இருக்கும். எங்கோ அவள் சிதறும்போதெல்லாம் யாருக்கும் தெரியாமல் அக்காதலின் நினைவில் சாயவும் செய்கிறாள். திருமணத்துக்காகவே வளர்க்கப்பட்டவள்போல் அவளை ஒருங்கிணைத்துவிடுவதால் தன் காதல் பக்கங்களை மறைக்கிறாள். பெண்ணும் மனுஷிதானே. காதல் வாழ்க்கை அவளுக்கும் உரியதுதானே. தன் காதல் பக்கங்களை அன்போடு கேட்கக்கூடிய கணவன் அமைந்தால் அவனைவிட்டு எப்போதுமே அப்பெண் விலகவே மாட்டாள். தான் கடந்து வந்த காதல் பாதைகளின் வலிகளைக் கணவன் புரிந்துகொண்டால், அவளின் உயிரான காதல், கணவனைவிட்டு வேறு எங்கேயும் போகவே போகாது.

- மலர்வதி

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in