டோரதியின் 104 வயது சாதனை!

டோரதியின் 104 வயது சாதனை!
Updated on
1 min read

டோரதி ஹாஃப்னரின் மனம் பரவசத்தில் படபடத்தது. இதற்கு மேல் ஒரு நொடிகூடத் தாமதிக்கக் கூடாது என்று தோன்றியதும், ‘ஜெரினிமோ ஆரம்பிக்கலாம்’ என்று குரல் கொடுத்தார். அடுத்த நொடி ஸ்கை டைவர் ஒருவர் டோரதியை விமானத்திலிருந்து தள்ளிவிட, அந்தரத்தில் ஒரு குட்டிக்கரணம் போட்டு மிதக்க ஆரம்பித்தார். பாராசூட் சட்டென்று விரிய, பதற்றம் தணிந்து மிதக்கும் அனுபவத்தை ரசிக்க ஆரம்பித்தார். சில்லென்ற காற்றைக் கிழித்துக்கொண்டு பூமியை நோக்கி மெதுவாக இறங்கினார் டோரதி.

தன்னை ஒரு பறவையாக நினைத்துக்கொண்டு, பறவைக் கோணத்தில் கீழே இருக்கும் நிலத்தைப் பார்த்தார். கோதுமை வயல்களும் மரங்களும் மனிதர்களும் சாலைகளும் அற்புதமாகத் தெரிந்தன. 13,500 அடிகள் உயரத்திலிருந்து காற்றில் மிதந்துகொண்டே ஏழு நிமிடங்களில் நிலத்தைத் தொட்டு ஓடிவந்து தரையில் விழுந்தார் டோரதி!

பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி வாழ்த்துத் தெரிவித்தனர். பலரும் ஓடிவந்து டோரதியின் கைகளைப் பிடித்துக் குலுக்கினர். காரணம், உலகத்தில் பலரும் செய்யக்கூடிய ஸ்கை டைவ் அல்ல அது. டோரதி 104 வயதில் செய்த ஸ்கை டைவ்!

அமெரிக்காவைச் சேர்ந்த டோரதிக்கு 100 வயதில் ஸ்கை டைவ் செய்வதில் ஆர்வம் வந்தது. அதற்கான பயிற்சிகளை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார். தன்னுடைய சாதனை பத்தோடு பதினொன்றாக இருக்கக் கூடாது என்று நினைத்தார். கடந்த ஆண்டு ஸ்வீடனைச் சேர்ந்த ரட் லியன்னா லிங்கர்ட் என்கிற பெண்மணி 103 வயதில் (103 ஆண்டு 259 நாள்கள்) பாராசூட்டிலிருந்து குதித்து, சாதனை படைத்தார்! இதன் மூலம் உலகின் மிக வயதான பெண்மணி செய்த சாதனை என்று வரலாற்றில் இடம்பிடித்தார்.

டோரதி காத்திருந்து இந்தச் சாதனையைப் புரிந்திருக்கிறார். இன்னும் இரண்டே மாதங்களில் 105ஆவது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறார். அதனால், தற்போது உலகிலேயே வயதான பெண்மணி நிகழ்த்திய ஸ்கை டைவ் சாதனை என்று கின்னஸில் இடம்பிடித்துவிடுவார்!

சாதனைக்கு முன் முதுகில் ஒரு பையுடன், வாக்கரைப் பிடித்துக்கொண்டு தனியாகத்தான் நடந்துவந்தார் டோரதி.

“உடலுக்குத்தான் வயதாகிவிட்டது. உள்ளம் என்றும் இளமையாகத்தான் இருக்கிறது. வயதாகிவிட்டதே என்கிற எண்ணம் எனக்குள் எப்போதும் வந்ததில்லை. அதுதான் என்னை உற்சாகமாக வைத்திருக்கிறது. 105ஆவது பிறந்தநாளுக்கு வெப்பக் காற்று பலூனில் பறந்தால் என்ன என்று யோசிக்கிறேன்” என்கிறார் டோரதி.

வெப்பக் காற்று பலூனில் பறந்த சாதனையும் டோரதியின் வசமாகட்டும்! ஐம்பது வயதிலேயே ‘வயதாகிவிட்டது’ என்று சொல்லிக்கொண்டிருக்கும் பலரை டோரதியும் ரட் லியன்னாவும் என்ன நினைப்பார்கள்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in