

இணையர்களுக்குள் பிரச்சினைகள் வருவதற்கான காரணங்கள் பல உண்டு. இரு வேறு மனிதர்கள் 25-30 வருடங்கள் வேறு வேறு குடும்பங்களில் வெவ்வேறு சூழல்களில் வளர்ந்தவர்கள். இந்த வயதுக்கு மேல் இனி வாழ்நாள் முழுவதும் இணைந்து வாழ்வோம் என்று எடுக்கும் முடிவு, ‘இன்று மாலை சினிமாவுக்குப் போவோமா இல்லை கடற்கரைக்குப் போவோமா?’ என்பதுபோல் எடுக்கும் முடிவல்ல.
தோற்றம், வேலை, வசதி, படிப்பு போன்றவற்றைப் பார்ப்பதும் பார்க்காததும் அவரவர் விருப்பத்தைப் பொருத்தது. ஆனால், காலம் முழுவதும் இணைந்து வாழ இவையெல்லாம் மட்டுமே போதுமா என்றால் கண்டிப்பாக இல்லை என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான். ஆனாலும் நாம் பொதுவாக (அதுவும் முக்கியமாகப் பெரியவர்கள் ஏற்பாடு செய்யும் திருமணங்களில்) இவைதாம் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவற்றை எல்லாம் கடந்து இன்னும் சிலவற்றைப் பார்ப்பார்கள் என்றால் ஆணுக்கு நல்ல வருமானம் இருக்கிறதா, கெட்ட பழக்க வழக்கங்கள் இல்லாமல் இருக்கிறாரா எனவும் பெண் என்றால் அடக்கமான, பெரியவர்களை மதிக்கிற குணம் இருக்கிறவரா என்றும் பார்ப்பார்கள். ஆக, நம் சமூகத்தின் பார்வையில் பணம், குணம், அழகு (இவற்றைவிட சாதியும் மதமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதுதான் உண்மை. எனினும், அதைப் பற்றி விவாதிக்கும் இடம் இது அல்ல என்பதால் அதைத் தவிர்த்துவிடலாம்) இதுவே இணையர் தெரிவுக்கு அடித்தளம்.
‘இதில் என்ன தவறு? அதுதான் குணமும் பார்க்கப்படுகிறதே, அது நல்லதுதானே?’ என்றால், ஒருவரிடம் என்ன குணம் இருந்தால் அது நல்லது, அல்லாதது என்பதை எப்படித் தீர்மானிப்பது? பணத்தைப் பார்த்துப் பார்த்து செலவு செய்பவர் ஒருவருக்குக் கஞ்சனாகவும் இன்னொருவருக்குப் புத்திசாலியாகவும் தெரியலாம். தனக்கு வரும் வருமானத்தில் பெரும்பங்கை மற்றவருக்குச் செலவு செய்பவர்கள் ஒருவருக்கு ஈகை குணம் படைத்தவராகவும் இன்னொருவருக்கு ஏமாளியாகவும் தெரியலாம். ஆக, இது எப்படிச் சரியான அளவுகோலாக இருக்க இயலும்? வேண்டுமென்றால் கொலை, கொள்ளை, போதை, அடிதடி என்று இல்லாதவர்களைப் பொது இலக்கணத்தின்படி நல்லவர் என்று நிர்ணயிக்கலாம். மற்றபடி ஒருவரின் குணம் இன்னொருவருக்குப் பொருந்துமா என்பதைப் பார்க்க வேண்டாமா? இருவருக்கும் ஒன்றுபோல் சில ரசனைகளாவது இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டாமா? ஒருவரின் வாழ்வின் மதிப்பீடுகள் இன்னொருவரின் மதிப்பீடுகளுடன் ஒத்துப்போகுமா என்கிற சிந்தனை வேண்டாமா?
வெற்றியும் தோல்வியும்
இருவர் ஒரு கூரையின் அடியில் சேர்ந்து உண்டு உறங்கி, பிள்ளை பெற்று, பொருள் ஈட்டி, வெள்ளி விழாவும், பொன் விழாவும் கொண்டாடிவிட்டால் அது வெற்றிகரமான வாழ்வாகிவிடுமா? இருவரையும் இருவருமோ இல்லை ஒருவரை இன்னொருவரோ சகித்து வாழ்ந்து இருந்தால் அந்தத் திருமணம் வெற்றி எனவும், சகிக்க இயலாமல் பிரிந்தால் அது தோல்வி எனவும் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், இந்த வெற்றி தோல்வி என்பது இங்கே திருமணத்துக்குப் பொருந்துமேயன்றி அதில் இருக்கும் தனி மனிதர்களின் வெற்றி - தோல்விக்கான அளவுகோலாக இருக்க இயலாது.
வாழ்வு முழுவதும் இருவர் இணைந்து வாழ முடிவு செய்கையில் பல தளங்களில் இருந்து இருவரின் பொருத்தத்தையும் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. அவற்றில் முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கே பார்ப்போம். ஒவ்வொருவருக்கும் அவருக்கே அவருக்கான சில விஷயங்கள் முக்கியம் வாய்ந்தவை. அவருக்கு அவை மதிப்புள்ளவை. உதாரணமாக ஒருவருக்குச் சுயமரியாதை என்பதும் மற்ற மனிதர்கள் அவர்கள் எந்த நிலையில் (பொருளாதாரம், அந்தஸ்து, சாதி, மதம்) இருந்தாலும் அவர்களைத் தனக்கு நிகராக மதிப்பளிக்கும் தன்மையும் முக்கியமாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஆனால், அவருக்கு இணையராக அமைந்தவர் காரியம் பெரிது வீரியம் அல்ல என்று நினைப்பவராக இருந்து, தனக்கு ஒரு வேலை ஆக வேண்டுமென்றால் சுயமரியாதையைக்கூட இழக்கத் தயாராக இருப்பவராகவும், தன்னைவிடச் சிலரைத் தனக்குக் கீழ் நிலையில் வைத்துப் பார்ப் பவராகவும் இருந்துவிட்டால் என்னவாகும்? அவர்களுக்குள்ளேயே ஒருவர் மேல் மற்றொருவருக்கு மதிப்பில்லாமல் போகும். அதற்குப் பிறகு அந்த உறவுக்கு எங்கிருந்து மரியாதை கிடைக்கும்?
இவையும் முக்கியம்
ஓர் உறவுக்குள் நுழைவதற்கு முன் வாழ்வில் நமக்கு எது முக்கியம், எவையெல்லாம் நமக்கு மதிப்புள்ளவை, எவையெல்லாம் இருந்தால் மட்டுமே நாம் நிறைவுடன் வாழ முடியும், எவையெல்லாம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்கிற ஆய்வு மிகவும் அவசியம். பணம் இருக்கிறதா என்று பார்க்கும் அளவுக்கு நாம் மதிக்கும் விஷயங்களை மதிக்கும் தன்மை அவர்களிடம் இருக்கிறதா என்பதைப் பார்க்கத் தவறுகிறோம். சிலருக்கு உலகம் மிகவும் சிறியது. அவர்களுக்கு அவர்கள், அவர்களுடைய நெருங்கிய உறவுகள், இணையர், பிள்ளைகள் ஆகியோர் இருந்தால் போதும். இது தவறில்லை. அது அவரது தேர்வு. ஆனால், வேறு சிலருக்கோ உலகம் பரந்து விரிந்தது. இவர்களுக்கு நிறைய நண்பர்கள், தன் உறவுகள் போதாதென்று நண்பர்களின் குடும்பங்களும் நெருக்கமாக இருப்பார்கள். எப்போதும் மனிதர்கள் கூட்டம் என்பதே மிகவும் பிடித்ததாக இருக்கும். இதுவும் தவறில்லை. ஆனால், இப்படி இருவர் இணைந்து வாழ்வது அவ்வளவு சுலபமில்லை. இவர்களில் யாரிடமும் அவ்வளவாகப் பழகாதவர்கள், நண்பர்கள் கூட்டத்தைக் கண்டு சங்கடத்துக்கு ஆளாகலாம். எல்லாரிடமும் பழகிக்கொண்டிருப்பவர்கள் சிறிது சிறிதாகச் சிறகொடிக்கப்படலாம்.
சிலர் ஆண் - பெண் வித்தியாசமில்லாமல் பழகும் தன்மையுள்ளவர்களாக இருப்பார்கள். சிறுவயதிலிருந்தே அப்படியொரு வித்தியாசம் காட்டப்படாமல் வளர்ந்திருக்கலாம். ஆனால், சிலர் சிறு வயதிலிருந்து எதிர்ப்பாலினத் தவரிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டே வளர்க்கப்பட்டிருக்கலாம். அது தவறு என்கிற எண்ணத்துடன் வாழ்ந்திருக்கலாம். இப்படி வித்தியாசமாக வளர்ந்திருக்கும் இருவர் இணைந்து வாழ்கையில் புரிந்துகொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. அல்லது அந்த இன்னொருவரின் நடத்தையில் எப்போதும் சந்தேகம் கொண்டே பார்க்கும் தன்மையும் ஏற்படலாம்.
உணவு ருசி ஓரளவுக்காவது ஒத்துப்போவது மிகவும் அவசியம். உணவும் நம் உணர்வு சம்பந்தப்பட்டது. அதை அவ்வளவு சுலபமாக ஒதுக்கிவைத்துவிட இயலாது. மனிதரின் சந்தோஷமும் நிம்மதியும் அவர்கள் விரும்பி உண்ணும் உணவிலும் அடங்கியுள்ளது என்பதே உண்மை. இன்னும் நிறைய உண்டு. அடுத்த வாரம் பார்க்கலாம்.
(விவாதிப்போம் மாற்றுவோம்)கட்டுரையாளர், எழுத்தாளர்.