

“நீங்க இந்தப் பையனை வீட்டுல எப்படிக் கூப்புடுவீங்க?”
போலீஸ் எங்க அம்மாவையும் நானியையும் அப்படி ஒரு கத்து கத்துறாரு.
“சார், இதுங்ககிட்ட ஏன் சார் இவ்ளோ பேசுறீங்க? தூக்கி உள்ள போடுங்க சார்.”
எங்க மாமா ஒரு பக்கம் கத்துறாரு.
போலீஸ் எங்க மாமாவைச் சமாதானப் படுத்தினார்.
“விடுங்க சார் தெரியாம செஞ்சிருப் பாங்க. அதான் சொல்றோமில்லே. இனிச் சேர்க்கமாட்டாங்க. இதோ பாருங்க இந்தப் பையன் உங்களை மாதிரி திருநங்கைக இல்லை. ஆம்பளைப் பையன். அவன் தொடர்ந்து உங்க வீட்டுக்கு வந்தா உங்களை மாதிரி ஆகிடுவான். அவனைக் கூப்பிடாதீங்க சரியா?”
“சார் நாங்ககூப்பிடல. அதுதான் வந்துச்சி. அதையே கேளுங்க.”
“ஆமா சார். நான்தான் போனேன். திருநங்கைங்க வீட்டுக்குத் திருநங்கை ஒருத்தி போகக் கூடாதா?”
போலீஸ் ஸ்டேஷன்னு பார்க்காம எங்க மாமா என்னை அடிக்கப் பாய்ந்தார்.
மாமாவைத் தடுத்த போலீஸ், மறுபடியும்எங்கம்மாவையும் நானியையும் திட்டினாரு.
“நீங்க எப்படி மனசை மாத்தியிருக் கீங்கன்னு பார்த்தீங்களா? 19 வயசுப் பையனை உங்களை மாதிரி மாத்துறீங்கன்னு கேஸ் போட்டு உள்ளே தள்ளவா?”
போலீஸ் என் பக்கம் திரும்பி, “நீ இனிமே ஒழுங்கா இரு. போய் உங்க அப்பா அம்மாவோடதான் இருக்கணும் சரியா? அப்படி இவங்களோடதான் இருக்கணும்னா அதுக்கு நான் ஒப்புக்க மாட்டேன். நீ இவங்களோட இருந்தா இவங்களை மாதிரி ஆகிடுவ. அப்புறம் சோத்துக்குப் பிச்சைதான் எடுக்கணும்.”
அந்த ஸ்டேஷன்ல இருந்த இன்னொரு போலீஸ் எங்க மாமாவைக் கூப்பிட்டு, “ஏம்பா எனக்குத் தெரிந்த ஒரு மன நல மருத்துவர் இருக்கார். அவரு இது மாதிரி குழப்பம் உள்ள பசங்கள அழகா சரிபண்ணிடுவார்” என்றார்.
ஒரு ஏட்டு குறுக்கிட்டு, “ஐயா எங்க வீட்டுக்கிட்ட இப்படி ஒரு பையன் இருந்தான். அவனை நான்தான் குடி மறுவாழ்வு மையத்துல சேர்த்தேன். மூணு மாசம் வச்சி அடி வெளுத்துச் சரிபண்ணிட்டாங்க. அங்க போய் விட்டுடுங்க” என்றார்.
இது மன நலம் சம்பந்தமான பிரச்சினை இல்லைன்னு போலீஸ்கிட்ட எங்க நானி எடுத்துச் சொன்னாங்க. ஆனா, அதை அவங்க மதிக்கலை.
“இதோ பாருங்கம்மா, நீங்க மூத்தவங்களா இருக்கீங்க. அரசாங்கமும் உங்களைப் புரிஞ்சிக்கணும்னு எங்களுக்குச் சொல்லி இருக்கு. உங்களைத் திருநங்கைன்னு அழைக்கணும்னு தெரியும். அதனால நான் உங்களைத் தப்பு சொல்லலை. ஆனா, பையனைத் திருநங்கையா மாத்துறதை எப்படி ஏத்துக்க முடியும்?”
| கதையல்ல நிஜம் l ஒருவர் திருநங்கை அல்லது திருநம்பி என வெளியில் இருந்து யாரும் கூற முடியாது. சம்பந்தப்பட்ட மனிதர் தனது 18 வயதில் அதைச் சொல்ல இயலும். இந்தக் கதையில் தன்னைத் திருநங்கை எனக் கூறுபவருக்கு 19 வயது. காவல்துறையும் மற்றவர்களும் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். l திருநங்கைகள் தமது குழுக்களை ‘ஜமாத்’ என அழைக்கின்றனர். இதில் புதிதாக வரும் திருநங்கைகளைத் தத்து எடுத்து அவர்களுக்கு, ‘நான் தாயாக, சகோதரியாக இருக்கிறேன்’ என ஒரு புதிய உறவைக் கொடுக்கின்றனர். இது சட்டப்படியான அமைப்பல்ல; இந்தியா முழுவதும் உள்ள திருநங்கையர் கட்டமைப்பு. l திருநங்கை ஒருவர் 18 வயதுக்கு மேல் அவரின் விருப்பப்படி பெற்றோரிடமோ மற்ற திருநங்கைகளோடோ அல்லது விருப்பப்பட்ட இடத்திலோ இருக்க உரிமையுண்டு. இதை யாரும் தடுக்க இயலாது. l குடி மறுவாழ்வு மையத்தில் அடைப்பது, மனநலமருத்துவம் போன்றவை சட்டப்படி குற்றம். இதை 2020இல் வெளிவந்த திருநர் பாதுகாப்புச் சட்டம் உறுதிப்படுத்துகிறது. உலகச் சுகாதார நிறுவனமும் திருநங்கைகள் மன நோயாளிகள் அல்ல என்று கூறியுள்ளது. l இந்தக் கதையில் வரும் மாமா மூத்த திருநங்கையை அடிப்பேன் என்று மிரட்டுவது குற்றம் எனச் சட்டம் சொல்கிறது. அவர் மீது காவல்துறையில் புகார் கொடுக்கலாம்; சிறைத் தண்டனை உண்டு. l 2021 சுஷ்மா எதிர் சென்னைக் காவல் ஆணையர் வழக்கின் (Sushma vs Chennai Commissioner of Police) தீர்ப்பில், ‘காவல்துறையினர் பால் புதுமையினர் (LGBTIQ) மக்களைப் புரிந்துகொள்ள வேண்டும்; அவர்களின் பிரச்சினைகளைக் காதுகொடுத்து கேட்கவேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. |
“சார் அது திருநங்கைதான். நானும் சின்ன வயசுல அப்படித்தான் இருந்தேன். பையனாதான் நாங்க வெளியில தெரிவோம். மனசுக்குள்ள பொண்ணுன்னு வாழுவோம். நானும் பேன்ட் சட்டையைத்தான் போட்டுட்டு இருந்தேன். பல பிரச்சினைகளைச் சந்தித்து இப்போ என் மனசுல இருக்குற பெண்மையை உடையிலும் உடலிலும் கொண்டு வந்துட்டேன்.”
எங்க மாமா ரொம்பச் சத்தமா கத்த ஆரம்பிச்சார்.
“நீங்க மாறுனா எங்க பையனும் மாறணுமா?”
போலீஸ் குறுக்கிட்டுச் சமாதானப் படுத்தி, “இதோ பாருங்க பெரியம்மா. இது கோர்ட், கேஸுன்னு போனா நீங்கல்லாம் உள்ளே போக வேண்டி வரும். அவங்க பையன் அவங்களோட இருக்கட்டும். அவங்க வேலை வாங்கிக் கொடுத்து ஒரு கல்யாணம் பண்ணிட்டா எல்லாம் சரியாகிடும்” என்றார். என் வாழ்க்கை குறித்து இந்த போலீஸ் ஏன் முடிவு எடுக்கிறார் என எனக்கு அழுகை வந்தது.
“சார், நான் கூட்டிட்டுப் போகணும்னு பேசலை. அந்தக் கொழந்தை அவங்க வீட்டிலேயே இருக்கட்டும். ஆனா, அதைத் திருநங்கைன்னு புரிஞ்சு அவங்க குடும்பம் ஏத்துக்கட்டும். கொடுமை செய்ய வேண்டாம். முக்கியமா, கல்யாணம் பண்ணிட வேண்டாம். ஒரு பெண்ணோட பாவம் எங்களுக்கு வேண்டாம்.”
இதைக் கேட்டதும் எங்க மாமா எங்க நானியைக் கேவலமா திட்டினாரு. என் திருநங்கை அம்மாவும் என் அம்மாவும் சத்தமாப் பேசி சண்டை போட்டாங்க. போலீஸ் இரண்டு தரப்பையும் அமைதிப்படுத்தி கடைசியா என் கருத்தைக் கேட்டாங்க.
“நான் எங்க திருநங்கைங்களோட இருக்கப்போறேன் சார். நான் பெண்ணா மாறணும் அவ்ளோதான். எங்க வீட்ல இதுக்குச் சம்மதிக்க மாட்டாங்க. அதனால நான் எங்க வீட்ல இருக்க மாட்டேன் சார்”
போலீஸ் எங்க மாமாவைப் பார்த்து, “சரி சார். அவன் வழியில கொஞ்ச நாள் விடுங்க. மனசு மாறி வர்றானான்னு பாருங்க. இல்லைன்னா நீங்க இந்த விஷயத்தை கோர்ட்ல பாத்துக்கோங்க” என்றார்.
(தொடரும்)
கட்டுரையாளர், திருநர் செயற்பாட்டாளர்.