

சிறார் மீதான பாலியல் வன்முறை தொடர்பாக இதுவரை வந்துள்ள தமிழ்த் திரைப்படங்களில் முக்கியமான வரவு இயக்குநர் எஸ்.யு.அருண்குமாரின் ‘சித்தா’. இந்தப் பிரச்சினை குறித்துப் பேசிய பல படங்களைப் போல் கண்ணுக்குத் தெரியாத பாலியல் குற்றவாளியைப் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரும் காவல்துறையினரும் தேடி அலையும் திரில்லர் வகையைச் சேர்ந்ததுதான். ஆனால், இந்தப் படம் சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரைத் தேடிக் கண்டுபிடிப்பதையும் தண்டிப்பதையும் மட்டும் பேசவில்லை. தண்டிக்க வேண்டும் என்று சொல்வோரிடம் நிலவும் ஆண்மையச் சிந்தனையையும் கேள்விக்கு உட்படுத்துகிறது.
படத்தின் நாயகனான ஈஸ்வரன் (சித்தார்த்) அண்ணன் இறந்த பிறகு அண்ணியையும் அவர்களுடைய மகளையும் கவனித்துக்கொள்கிறான். இறந்துவிட்ட அண்ணனின் மகளைத் தன் மகளைப் போல் அன்பு செலுத்திப் பாதுகாக்கிறான். காவல்துறையில் பணியாற்றும் அவனுடைய நண்பனின் அக்கா மகளிடம் அன்புடன் பழகுகிறான். தனக்குக் கீழ் பணியாற்றும் தன் பள்ளிப் பருவக் காதலியிடம் கண்ணியத்துடன் நடந்துகொள்கிறான். அண்ணியை அக்காபோல் நடத்துகிறான்.
குற்றச்சாட்டும் எதிர்வினையும்
நண்பன் வீட்டுச் சிறுமி பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகிறாள். இதற்கான பழி ஈஸ்வரன் மீது விழுகிறது. தான் எந்தக் குற்றமும் செய்யாவிட்டாலும் தன் வீட்டுக் குழந்தை, பாலியல் வன்முறைக்குள்ளான அதிர்ச்சியிலும் ஆற்றாமையிலும் இருக்கும் நண்பனின் கோபமான எதிர்வினையைப் புரிந்துகொள்கிறான். அவன் தன்னை அடித்ததையும் பொறுத்துக்கொள்கிறான். அதேநேரம் தன் காதலி தன் மீது சந்தேகப்படுவது போன்ற தொனியில் கேள்வி கேட்கும்போது அவளிடம் கடும் அறச்சீற்றத்தைக் காண்பிக்கிறான். அதாவது நாயகன் தவறான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை, பாதிக்கப்பட்டவர்களின் உணர்வை மதித்து அதைப் பொறுத்துக்கொள்கிறான். இந்த நுட்பமான வேறுபாடு அழகாக உணர்த்தப்பட்டிருக்கிறது.
கதையில் நாயகன் மீது சுமத்தப்படும் இந்தத் தவறான பழி சில காட்சிகளில் விலகிவிடுகிறது. ஆனால், பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான நம் பொதுச் சமூகத்தின் வழக்கமான எதிர்வினையின் பின்னணியில் இது முக்கியமானதாகிறது.
பிரபலங்கள் தொடங்கிச் சாமானியர்கள் வரை ஆண்கள் மீது பெண்கள் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளைப் பொது வெளியில் முன்வைக்கும்போது ‘ஆதாரம் கொடு’ என்று கேட்பதே நம் சமூகத்தில் பெரும்பாலானோரின் எதிர்வினையாக இருக்கிறது. இந்தப் பின்னணியில் தன் மீது தவறான பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்படும்போது பாதிக்கப்பட்ட தரப்பின் உணர்வைப் புரிந்துகொண்டு அந்தப் பழி விலகும்வரை நாயகன் அமைதி காப்பது போன்ற சித்தரிப்பு முக்கியமானது.
கடந்த ஆண்டு வெளியான ‘கார்கி’ திரைப்படம் நம்மைச் சார்ந்தவர், நமது அன்புக்கும் மரியாதைக்கும் உரியவராக இருப்பவர் பாலியல் குற்றம் இழைத்தவர் என்று தெரியவந்தால் அறச் சிந்தனை உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்த்தியது. அதன் நீட்சியாக, தவறாகப் பாலியல் குற்றம்சாட்டப்பட்டவரின் முதிர்ச்சியான எதிர்வினையாக இதைப் பார்க்கலாம்.
தண்டனையும் அதைத் தாண்டியும்
நாயகனின் அண்ணன் மகள் பாலியல் குற்றவாளியால் கடத்திச் செல்லப்படுவதிலிருந்து அவளைக் காவல்துறை, முகம் தெரியாத சாமானிய மக்களின் உதவியுடன் பல போராட்டங்களுக்குப் பின் நாயகன் மீட்கிறான். இந்தப் பகுதி ஒரு திரில்லர் திரைக்கதைக்குரிய பரபரப்புடன் நகர்கிறது. சிறுமி கிடைத்துவிட்ட பிறகு படம் ஒரு மேம்பட்ட தளத்தில் பயணிக்கத் தொடங்குகிறது.
சிறுமிகளைப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கியவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவனைக் கொல்லக் கிளம்புகிறான் நாயகன். அவனுடைய காதலியும் நண்பர்களும் அவனைத் தடுத்தாலும் கொல்வது ஒன்றே தீர்வு என்பதில் தீவிரமாக இருக்கிறான். இந்நிலையில் நாயகனின் காதலி அவனுடைய பழிவாங்கல் உணர்வுக்குப் பின்னால் இருக்கும் ஆண்மையச் சிந்தனையை அவனுக்குப் புரியவைக்கிறாள். குற்றவாளியைச் சட்டத்தை மீறிக் கொல்வதன் மூலம் பாலியல் வன்முறைக்குள்ளானதையே பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளம் ஆக்கிவிடாதே என்று மன்றாடுகிறாள். தனக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறலை விவரிக்கிறாள். அப்போது நாயகன் அவன் எங்கே என்று கேட்க “அவன் இறந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதுகூடக் குற்றம் செய்தவனைப் பற்றிக் கேட்கிறாயே தவிர நான் அதிலிருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பதைப் பற்றிக் கேட்கவில்லையே” என்கிறாள்.
பாலியல் குற்றவாளிகளைத் தண்டிப்பது முக்கியம்தான். ஆனால் அதைவிட முக்கியம் அந்தக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து முற்றிலும் மீண்டு தங்கள் வாழ்க்கையைப் பழையபடி தொடர்வதற்கு உதவுவது. தங்கள் வீட்டுப் பெண்களிடம் அத்துமீறியவர்களைத் தண்டிக்கத் துடிக்கும் ஆண்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகத் துணைநிற்பது குறித்து யோசிப்பதில்லை. அதோடு தானே களமிறங்கி குற்றவாளியைப் பழிவாங்கத் துடிக்கும் உளவியலுக்குப் பின்னால் இயங்கும் ஆண்மையச் சிந்தனையும் நுட்பமாக உணர்த்தப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
சில சிக்கல்கள்
இந்தப் படத்தில் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. சிறார் மீதான பாலியல் குற்றங்கள் பெரும்பாலும் உறவினர்கள், தெரிந்தவர்கள் மூலமாகவே நிகழ்த்தப்படுகின்றன என்று புள்ளிவிவரங்கள் இருக்கின்றன. ஆனால், இந்தப் படத்தில் காவல்துறை அந்தக் கோணத்தில் விசாரணையை நடத்துவதை நாயகன் விமர்சிக்கிறார். கதைக்கு அது பொருத்தமாக இருந்தாலும் சொந்தக்காரர்கள், தெரிந்தவர்கள் மீது சந்தேகப்படுவதே தவறு என்பது போன்ற தொனி வந்துவிடுகிறது. அதேபோல் நாயகன் வேறொரு சிறுமியிடம் பாலியல் குற்றம் புரிந்தவரைக் கத்தியால் குத்தும் காட்சியை நாயகத்தன்மையைப் போற்றும்விதமாக முன்வைத்திருப்பது குற்றங்களுக்கு எதிராகத் தனிநபர்கள் வன்முறையைக் கையிலெடுப்பதற்கு எதிரான படத்தின் செய்தியை வலுவிழக்கச் செய்கிறது. சிறுமியைக் கடத்திய பாலியல் குற்றவாளியின் வழிமுறைகளையும் சிறுமியைக் கொடுமைப்படுத்துவதையும் விரிவாகக் காண்பித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
அதே நேரம், பாலியல் குற்றம், அதற்கான தண்டனை, பாதிக்கப்பட்ட பெண்கள் அதிலிருந்து மீள்வதற்கான ஆதரவு ஆகியவை குறித்த முக்கிய மான உரையாடல்களுக்கும் பரிசீலனை களுக்கும் வழிவகுத்திருக்கிறது ‘சித்தா’ திரைப்படம்.