போர்க்குணம் மிக்க வாச்சாத்திப் பெண்கள்!

போர்க்குணம் மிக்க வாச்சாத்திப் பெண்கள்!
Updated on
3 min read

முப்பது ஆண்டுகளாக நடைபெற்ற வாச்சாத்தி வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைச் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. தாமதம்தான், என்றாலும் இறுதியாக உண்மை வென்றுள்ளது. அதிகார வர்க்கத்தின் கட்டமைக்கப்பட்ட அத்தனை பொய்களும் இந்தத் தீர்ப்பால் உடைந்து நொறுங்கின.

அன்று வாச்சாத்தியில் என்னதான் நடந்தது? தர்மபுரி மாவட்டம் சித்தேரி மலைத் தொடருக்குக் கீழே உள்ளது வாச்சாத்தி கிராமம்.

அங்கே 200 பழங்குடியினக் குடும்பங்கள் வசித்துவந்தன. அவர்கள் சந்தன மரங்களை வெட்டிக் கடத்துகின்றனர் என்கிற சந்தேகத்தின்பேரில் வனத்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையையும் அதன் நீட்சியாக நடந்த கோரத்தாண்டவத்தையும் வார்த்தைகளால் விளக்க முடியாது.

சூறையாடப்பட்ட வாழ்க்கை

கிராமமே யுத்த களம்போல் மாறியது. வீடுகள் குட்டிச்சுவர்களாக இடித்துத் தள்ளப்பட்டன. வீடுகளில் இருந்த தானியங்கள், துணி மணிகள் எல்லாவற்றையும் சிதறடித்திருந்தனர்.

பெட்டிக்கடைகள் நொறுக்கப்பட்டு வனத் துறையால் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. சுமார் 200 மாடுகளும் 600 கோழிகளும் திருடப் பட்டன என்றும் அங்கிருந்த மக்கள் கூறினர். கிணறுகளையும்கூட விட்டுவைக்கவில்லை. ஆடு, கோழிகளை ருசிபார்த்த அதிகாரக் கூட்டம் அவற்றின் தோல்களையும் கழிவுகளையும் கிணற்றில் போட்டனர். மோட்டார் டீசலைக் கிணற்றில் கொட்டிக் குடிநீரைப் பாழ்படுத்தினர்.

1992 ஜூன் 20ஆம் தேதியிலிருந்து மூன்று நாள்கள் வரை வனத் துறையினர் சுமார் 600 பேர் வாச்சாத்தியில் தங்கித் தங்கள் திருவிளையாடல்களைத் தொடர்ந்தார்கள். காட்டில் சந்தனக் கட்டைகள் ஒளித்துவைக்கப்பட்டு இருக்கும் இடத்தைக் காட்ட வேண்டும் என்று சொல்லிப் பெண்களைக் காட்டுக்குள் அழைத்துச் சென்ற காவல்துறையினர் அவர்களின் ஆடைகளைக் களைந்து மரக்கட்டைகளைக் கட்டி தலைமீது சுமையாக வைத்து நடக்கச் சொல்லி அடித்துள்ளனர். ஊருக்குள் ஆடையின்றி எப்படி நடந்து செல்வதென வனத்துறை யினரின் கால்களைப் பிடித்துக் கெஞ்சியபோது பூட்ஸ் கால்களின் உதைதான் கிடைத்தது. இப்படிப் பல மணி நேரம் சித்திரவதைக்குப் பிறகுதான் அவர்களது ஆடைகளை அவர்கள் மீது விட்டெறிந்தார்கள்.

விவரிக்க முடியாத கொடுமை

இந்திராணி என்கிற நிறைமாதக் கர்ப்பிணியைத் துப்பாக்கியின் பின்கட்டையால் நெஞ்சிலே அடித்ததில் மயங்கி வீழ்ந்தார். அந்தப் பெண்ணுக்குச் சிறையில்தான் பிரசவம் ஆனது. முனியம்மா என்கிற பெண் ஒரு கால் ஊனமானவர். அந்தக் காலையும் விட்டுவைக்காமல் ஏறிமிதித்தனர். இவருடைய மருமகள் சித்ரா ஏழு மாதக் கர்ப்பிணி. அவரும் கடுமையாகத் தாக்கப்பட்டார். முத்துவேடி, ஜெயா, பூங்கொடி, காந்தி உள்ளிட்ட 18 வயதுக்கும் குறைவான இளம் பெண்களைக் கூட்டாகப் பலாத்காரம் செய்தனர். இளம்பெண்கள் 18பேர்களும் சிறுமிகளும் பலாத்காரக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். அந்தப் பெண்களின் உடல் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரத்தை விளக்கச் சொற்களே இல்லை.

இந்தக் கொடுமைகளை அப்போதைய தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கொண்டுசென்றது. அவர் மெளனம் சாதித்ததும் அமைச்சர் செங்கோட்டையன் இதுபோன்ற சம்பவம் அங்கு நடக்கவே இல்லை என்று அறிக்கை மேல் அறிக்கைவிட்டார்.

கவனம் ஈர்த்த போராட்டம்

1992 செப்டம்பர் 24 அன்று மாலை வாச்சாத்திப் பெண்கள் 60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட போராட்டம் சென்னைக் குறளகம் முன்பாக நடந்தது. தோழர்கள் பாப்பா உமாநாத், மைதிலி சிவராமன் ஆகியோர் தலைமையில் நடந்த போராட்டத்தில் பெருந்திரளான பெண்கள் பங்குப் பெற்றார்கள். அதுவரை உயரமான கட்டிடங்களையும் நிற்காமல் ஓடுகிற வாகனங்களையும் பார்த்தறியாத அந்த வாச்சாத்திப் பெண்கள் குறளகம் எதிரில் இருந்த சாலையைக் கடக்க முடியாமல் நின்றுகொண்டிருந்தனர். மாதர் சங்க ஊழியர்கள்தாம் அவர்கள் கரம் பற்றிப் போராட்டத்துக்குக் கொண்டுவந்து சேர்த்தனர்.

அரசையும் அதன் நிர்வாகத்தையும் குறிப்பாக வனத்துறை, காவல்துறையைக் கடுமையாகச் சாடிய பெண் தலைவர்களை அங்கே நேரில் பார்த்தபோது என்னைப் போன்ற அப்போதைய புதியவர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சென்னைக் குறளகத்தின் போராட்டத்தைத் தமிழ்நாடு எங்கும் பல்வேறு மாவட்டங்களில் மாதர் சங்கம் விரிவுபடுத்தியது. பொதுமக்கள் மத்தியில் இது பெரும் பரபரப்பை உருவாக்கியது. வாச்சாத்தி கொடுமையைத் துண்டு பிரசுரங்கள் மூலம் வீடு வீடாகக் கொண்டுபோய் சேர்த்தது நினைவில் நிற்கிறது. கடைவீதி களில், அரசு அலுவலகங்களில், உழைக்கும் பெண்களிடத்தில் வழக்குக்கான நிதி சேகரித்துத் தொடர்ந்து இயங்கினோம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய மாநிலங்களவை உறுப்பினர் ஏ.நல்லசிவன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த பிறகே மத்தியப் புலனாய்வு விசாரணைக்கு உத்தரவு கிடைத்தது. அதன் பிறகே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருள்கள், உடைகள், ரேஷன் அட்டை போன்றவற்றை அரசு வழங்க வேண்டிய நிர்ப்பந்தமும் உருவானது.

‘தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்’, ‘மலை வாழ் மக்கள் சங்கம்’ அவற்றின் தலைவர்கள் கே.வரதராஜன், பி.சண்முகம், டெல்லி பாபு உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாவலர்களாக நின்று தொடர்ச்சியாகச் செயல்பட்டனர். பல சவால்கள், மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் தொடர்ந்துவந்தன. அவை யாவும் முறியடிக்கப்பட்டன.

நீதிக்கான காத்திருப்பு

2011இல் தர்மபுரி மாவட்ட நீதிமன்றம், வனத்துறை, காவல் துறை, வருவாய்த் துறையைச் சேர்ந்த 215 பேருக்குத் தண்டனை வழங்கியது. அப்போதே 19 ஆண்டுகள் முடிந்திருந்தன. கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரிதான் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது 30 ஆண்டுகள் முடிந்துவிட்டன.

அப்போது 13 வயது சிறுமியாகப் பாலியல் வன்கொடுமைக்குள்ளான செல்விக்கு இப்போது 42 வயது ஆகிறது. “எட்டாம் வகுப்பு படிக்கிறேனய்யா.. என்னைய விட்றுங்க” எனக் கெஞ்சியும் அவர்களிடமிருந்து அவரால் தப்ப முடியவில்லை. எட்டாம் வகுப்போடு அவரது கல்வி முடிந்தது. “இப்போது வரை நிம்மதியான உறக்கம் இல்லை. ஊரின் மையத்தில் இருக்கும் ஆலமரத்தடியைப் பார்க்கும்போதெல்லாம் அச்சமே சூழ்கிறது” என்கிறார். குழந்தைப் பருவத்தின் கொண்டாட்டங்களைச் செல்வி இழந்திருக்கிறார். அதை யாரால் திருப்பித்தர இயலும்? அப்போது 40 வயதைக் கடந்த பெண்கள், தீர்ப்பு நாளன்று முதுமையைத் தொட்டிருந்தார்கள். இந்தத் தீர்ப்புக்காகவே காத்திருந்த 30 வருடங்களின் உணர்வை எப்படி விளக்குவது?

மீண்டும் அவர்கள் வாழ்க்கையை எங்கே தொடங்குவது? இடிக்கப்பட்ட வீடுகளை மீண்டும் எழுப்பப் போதிய வருமானம் இல்லை. துண்டு நிலம்கூட அவர்களுக்குச் சொந்தமில்லை. கிடைக்கிற குறைந்த கூலியில் வீட்டுக்கும் நீதிமன்றத்துக்குமாக மன உளைச்சலோடும் வலியோடும்தான் நடந்துகொண்டிருந்தார்கள்.

ஊர்ப் பெரியவர்களும் சாட்சிகளாக இருந்து உண்மை பேசிய சிலரும் தற்போது உயிருடன் இல்லை. அப்போதெல்லாம் அவர்களை நினைத்தும் தங்கள் வாழ்க்கையை நினைத்தும் அழுதபடியேதான் வருடங்கள் கடந்து சென்றன என்கிறார்கள் அந்தப் பெண்கள்.

அதிகாரத்தின் பிடறியை உலுக்கிய வாச்சாத்திப் பெண்கள் எளிமையானவர்கள்தாம். ஆனால், போர்க்குணம் மிக்க வலிமையானவர்கள்! முன்னுதாரணம் ஆகி இருக்கிறார்கள்.

- கே.பாலபாரதி

balabharathi.ka@gmail.com

கட்டுரையாளர்,

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in