

“நம்மள மாதிரி இந்த உலகத்துல யாருமே இல்லைன்னு நெனச்சேன்டி உன்னைப் பாக்குற வரை.”
“எனக்கும்தான் அப்படி இருந்தது. ஆனா, இப்போ அப்படித் தோணலைடி.”
எனக்கு மனசில் சந்தோஷம். மணியைப் பார்த்தா கண்ணாடி பார்க்குற மாதிரி இருக்கு. நான் பட்ட கஷ்டமெல்லாம் மணியும் பட்டிருக்குன்னு சொல்லும்போது எனக்கு ஒரு தைரியம் வருது.
“நம்மள மாதிரி யாராவது இந்த ஏரியாவுல இருக்காங்களா?”
மணி கூட்டிட்டுப் போனான். அது ஓடு போட்ட வீடு. உள்ளே ஐந்து திருநங்கைகள் இருந்தாங்க. அதுல ஒரு அம்மா பெரிய பொட்டு வச்சு காட்டன் புடவை கட்டி கயிற்றுக் கட்டில்ல உட்கார்ந்திருந்தாங்க. மத்தவங்க சின்ன வயசா இருந்தாங்க. அதுல ரெண்டு பேரு அசல் பொண்ணு மாதிரியே இருந்தாங்க.
எனக்கும் மணிக்கும் ஆச்சர்யமா இருந்திச்சி. அங்கேயே இருக்கணும்னு தோணுச்சு.
“நீங்க இங்க இருக்கணும்னா இருங்க, ஒன்னும் பிரச்சினை இல்ல.”
அந்தப் பெரியம்மா சொல்லும்போது எனக்குச் சந்தோசமா இருந்தது.
“மணி நீ என்ன சொல்றே? நாம இங்கேயே இருந்துடுவோமா? எனக்கு எங்க வீடு கொஞ்சமும் பிடிக்கலை. அவங்க என்ன புரிஞ்சிக்கலை. அதுவும் எங்க மாமா என்னை ஆம்பளையாதான் நெனைக்குறாரு. எனக்குப் படிக்கவும் பிடிக்கலை. அங்கேயும் நான் பொண்ணு மாதிரி இருக்க முடியல. எனக்கு இங்க இருக்க ரொம்ப பிடிக்குதுடி.”
அந்த மூத்த திருநங்கை குறுக்கிட்டு, “ஏண்டி நீ சொல்ற கதைதான் எங்க எல்லாருக்கும் நடந்தது. அது ஒரு பக்கம் இருக்கட்டும். உங்க ரெண்டு பேரையும் ஜமாத்தில வச்சி எங்க வீட்ல ரீத்து போடுறோம். அங்க வச்சி பொம்பள பேரு வைப்பாங்க சரியா?”
| கதையல்ல நிஜம்
|
அதே பெரியம்மா மணியைப் பார்த்து, “இதோ பாருடி கண்டிப்பா நீ மணி கிடையாது. ஏன்னா என் குருபாய் பேரு மணிமேகலை, சரியா? பெரியவ பேரை உனக்கு வைக்க முடியாது. உன் பேரைத்தான் முதல்ல ஜமாத்தில சொல்லி மாத்துவேன்”ன்னு சொன்னாங்க.
அந்தப் பெரியம்மா சொன்னதைக் கேட்டு சுத்தி இருந்த எல்லாரும் சிரிச்சாங்க. அந்த அழகான ரெண்டு திருநங்கைகளும் சிரிச்சது பொண்ணு மாதிரியே இருந்துச்சி.
“அம்மா நானும் இவங்கள மாதிரி மாறிட முடியுமா?”
பொண்ணு மாதிரி இருந்த திருநங்கைல ஒருத்தி குறுக்கிட்டாள். “அடியே, பைத்தியக்காரி. முதல்ல அவங்கள நீ நானின்னுதான் கூப்பிடணும் புரிஞ்சுதா? அவங்க எனக்கு அம்மா. நான்தான் உங்க ரெண்டு பேருக்கும் அம்மா.”
இந்த சின்ன வயது திருநங்கை எனக்கு அம்மாவா? எனக்கு இந்தக் கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிக்குது.
“சரிங்கம்மா. எப்படியோ நான் உங்கள மாதிரி ஆகணும்.”
“சரி உன் வயசு என்ன?”
“எனக்கு 17 மணிக்கு 19”
“அப்படின்னா முதல்ல மணியை ஜமாத்துக்கு வரச் சொல்லு. உனக்கு இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் சரியா.”
இவங்கதான் நம்மைப் புரிஞ்சவங்கனு எனக்கு முழு நம்பிக்கை வந்துச்சி. சின்ன வயசா இருந்தாலும் இவங்க என் இன்னொரு அம்மாதான். எங்க அம்மா எனக்கு இன்னொரு அறிவுரையும் சொன்னாங்க மணியை நான் குருபாய்னுதான் கூப்பிடணுமாம். இல்லனா அக்கான்னு கூப்பிடணுமாம்.
நானும் எங்க திருநங்கை அம்மா மாதிரி பொண்ணாயிடுவேன்னு நினைக்கும்போது எனக்குப் பட்ட கஷ்டமெல்லாம் மறந்து போகுது. என் குருபாய் மணிக்குதான் நன்றி சொல்லணும். எனக்கு அவங்களை மாதிரி புடவை கட்டணும்னு ஆசையா இருக்கு.
மறுபடி நாளைக்கே அங்க போகணும். எங்க மாமாவோ மத்தவங்களோ என்னை ஏதாவது சொன்னா, நிரந்தரமா திருநங்கை அம்மா வீட்டுக்குப் போயிடணும்னு முடிவு பண்ணிட்டேன்.
(தொடரும்)
கட்டுரையாளர், திருநர் செயற்பாட்டாளர்.