பெண்கள் ஆண்கள் குழந்தைகள் - 18: எல்லா ஈர்ப்பும் காதல் அல்ல

பெண்கள் ஆண்கள் குழந்தைகள் - 18: எல்லா ஈர்ப்பும் காதல் அல்ல

Published on

காதல், எவ்வளவு அழகான உணர்வு! ஆனால், அதை எப்படியெல்லாம் குழப்பி வைத்திருக்கிறோம் நாம்? விடலைப் பருவத்தில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் எதிர்பாலினத்தவர் மீது இயற்கையாக வரும் ஈர்ப்பு காதலெனக் கொள்ளப்படுகிறது.

இந்த ஈர்ப்பு இயற்கைதான், இந்த வயதில் ஈர்ப்பு வருவது சாதாரணம்தான், இது தவறான விஷயமல்ல என்பதையும், நம்மை ஈர்க்கும் அத்தனையையும் நம்வசப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பதையும், இவற்றைவிட இந்த வயதில் கவனம் செலுத்த வேண்டியவை நிறைய இருப்பதையும் அவர்களுக்கு நிதானமாக எடுத்துச் சொல்லிப் புரியவைக்க இங்கு பெரியவர்கள் (முக்கியமாகப் பெற்றோர்கள்/ஆசிரியர்கள்) யாருக்கும் பொதுவாக தோன்றுவதில்லை. ஈர்ப்புக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை என்பதையும், அறிவு வளர்ச்சிக்காகப் படிப்பிலும், உடல் ஆரோக்கியத்திற்காக விளையாட்டுகளிலும் கவனம் செலுத்துவதால் ஏற்படும் பலன்களையும், இந்த ஈர்ப்பில் அதிகக் கவனம் செலுத்துவதால் ஏற்படும் கவனச் சிதறல்களையும் எடுத்துச் சொல்வதில்லை.

யார் மேலாவது அவர்களுக்கு ஈர்ப்பு இருக்கிறதெனத் தெரியவந்தாலே அதைக் கொலைக் குற்றம்போல் கருதி அவர்களைக் கண்டபடி ஏசுவதும், அடிப்பதும், யார் மேல் அவர்களுக்கு அந்த ஈர்ப்பு இருக்கிறதோ அவர்களைப் பார்க்கக் கூடாது, பேசக் கூடாது எனச் சட்டம் போடுவதும், சில நேரம் அவர்களை ஒரு அவமானச் சின்னமாக மற்றவர்முன் அவமானப்படுத்துவதும்தான் இங்கு பெரும்பாலும் நடக்கிறது. சாதாரண விஷயங்களை, இயற்கையான விஷயங்களை அப்படியே கடந்து செல்ல பெரியவர்களுக்கே தெரியாதபோது, நாம் எப்படிப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுப்பது? எது ஒன்றை மறைத்துவைக்க முயல்கிறோமோ, எது ஒன்றை எட்டாக் கனியாக்குகிறோமோ அதன் மேல்தான் அதிகக் கவனமும் சுவாரசியமும் ஏற்படும் என்பதுதானே உண்மை? மனிதப் பிறவிகளின் ஆர்வம்தானே இன்று இவ்வளவு முன்னேற்றங்களுக்கும் அடிகோலியிருக்கிறது? இல்லையெனில் நாமும் இன்றுவரை காடுகளில் மற்ற விலங்குகளைப் போல்தானே உலவிக்கொண்டிருந்திருப்போம். இந்த அடிப்படை உண்மையைக்கூடப் புரிந்துகொண்டு செயல்படும் சிந்தனை இல்லையெனில் யாரைக் குற்றம் சொல்வது?

புரியாத புதிரல்ல

விடலைப் பருவத்தில் ஏற்படும் சாதாரண ஈர்ப்பைப் பிள்ளைகள் காதல் என்று நினைப்பதற்குமுன் நாமே, “இந்த வயதில் உனக்கென்ன காதல் வேண்டியிருக்கிறது?” என்று பேசிப் பேசியே இயல்பான ஈர்ப்பை அவர்களும் நாமும் காதலாக மாற்றிவிடுகிறோம். இது விடலைகளுக்கான பிரச்சினை மட்டுமல்ல எத்தனையோ பெரியவர்களுக்கே காதல் என்பது சரியாகப் புரிந்துகொள்ளப்படாத உணர்வாகவே நின்றுவிடுகிறது. ஒருவர் நம் கண்களுக்கு அழகாகத் தெரிவதாலோ, அவர்களின் ஏதோ ஒரு செயல் பிடித்துப்போவதாலோ, அவர்களின் மனமோ, அறிவோ இப்படி ஏதோ ஒன்று நம்மை அவர்களிடம் ஈர்க்கிறது. இதுவரை அது ஈர்ப்பு மட்டுமே. இதற்குமேல் அவர்களுடன் பழகும் வாய்ப்பு அமையப்பெற்றோ, நம் ஆர்வத்தினால் நாமே அவர்களுடன் பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டோ அவர்களிடம் பழகும்போது அவர்களின் எல்லாப் பக்கங்களும் நமக்குப் பிடித்தமானதாக இருக்கும்பட்சத்தில் ஈர்ப்பு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. அவர்களின் செயல், சொல், எண்ணம் ஆகியவை நம்மிடமிருந்து வித்தியாசப்பட்டாலும், நம்மை முகம் சுளிக்க வைக்காமல் அவர்களை அவர்களாகவே பார்க்க வைக்கும்போது அந்த முழுமைத்தன்மை நம்மை இன்னும் அதிகமாக ஈர்க்கும். நம் மனதில் அவர்கள் மீதான மரியாதையும், அன்பும், அக்கறையும் பெருகும். அவர்களுடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களின் நினைவு நமக்கு நிறைவாகவும், அழகாகவும், மகிழ்வையும் தரும். அவர்கள் நமக்கு மகிழ்வைக் கொடுப்பதால், நாமும் அவர்களுக்கு மகிழ்வைக் கொடுப்பதற்கான செயல்களில் ஈடுபடுவோம். இது நமக்குத் திருப்தியை அளிக்கும்.

முயற்சி முக்கியம்

காதல் என்பது ஓர் உணர்வு என்கிற புரிதலே பலருக்கும் இல்லை. உணர்வுகள் அவ்வப்போது எழுந்து அவ்வப்போது மறையும் தன்மை வாய்ந்தவை. ஒருவர் மேல் வரும் கோபம் என்பது ஓர் உணர்வு. எப்போதும் ஒருவர் மேல் நாம் கோபத்திலேயே இருப்பதில்லை. அதேபோல்தான் காதலும் ஓர் உணர்வு. ஒருவர் மேல் வந்த காதல் சாகாவரம் கொண்டு வருவதில்லை. அதே வேளை கோபம் என்கிற உணர்வு நல்லதல்ல; உடலுக்கும் மனதுக்கும் தீங்கு விளைவிப்பதால் கோபம் கொள்வதைக் குறைத்துக்கொள்ளவோ கட்டுப்படுத்திக்கொள்ளவோ பிறர் அறிவுரை சொல்கிறார்கள் அல்லவா? அதேபோல்தான் காதலும். ஒருவர் மீது ஏற்பட்ட காதல் வாழ்நாள் முழுவதும் தானாகத் தொடராது. ஆனால் நாம் முயன்றால் அதைத் தொடர வைத்துக்கொள்ளலாம்.

காதலித்து மணம் புரிபவர்களின் திருமணங்கள்கூட ஏன் தோல்வியில் முடிகின்றன என்றால், ஒன்று அவர்களுக்குள் ஏற்பட்டிருந்த ஈர்ப்பை காதல் என நினைத்துத் திருமணம் புரிந்திருப்பார்கள். ஈர்ப்பு போனதும் மற்றவரிடம் இருக்கும் குறைகள் ஒவ்வொன்றாக நம்முன் பூதாகாரமாக எழும். காதலே இருந்திருந்தாலும் அதைத் தக்கவைத்துக்கொள்ள போதுமான முயற்சிகளை ஒருவரோ இல்லை இருவருமோ எடுத்திருக்க மாட்டார்கள். இவ்வளவுதான் காதல் என்பது.

காதலைக் கட்டுப்படுத்தலாம்

ஏனோ ஒரு சாதாரண ஈர்ப்பை இங்கே காதலென உருவகப்படுத்துவதும், அப்படிக் காதலாகவே இருந்தாலும் அதுவும் காலப்போக்கில் நம் மனதை விட்டு அகலலாம் என்கிற உண்மையை ஏற்காமலுமே பலர் இருக்கிறார்கள். அதனால்தான் காதல் திருமணத்தில் முடியாவிட்டால், அதைத் தோல்வி என நினைப்பதும், ஒரு காதல் போயின் சாதல் என்று நம்புவதும். இது போன்ற எண்ணங்களுக்கு எழுத்தாளர்கள் பலரும், நம் திரைப்படங்களும் நிறைய தீனி போட்டு வளர்த்திருக்கிறார்கள். பல இளைஞர்கள் காதல் தோல்வியில் தேவதாஸ் போன்று திரிகிறார்கள். சிலர் தங்கள் உயிரையே மாய்த்துக்கொள்ளவும் துணிகிறார்கள்.

இன்னுமொன்று, நமக்கு ஒருவர் மேல் தோன்றும் ஈர்ப்பு மற்றவருக்கும் நம்மேல் தோன்ற வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை என்பதையும் இங்கு பலர் உணர்வதில்லை. ஒருதலை காதலில் ஒரு தவறும் இல்லை. ஒவ்வொருவருக்கும் மற்றவர்பால் ஈர்க்கும் விஷயம் வேறு வேறாக இருக்கலாம். அவர்களுக்கு நம்மேல் ஈர்ப்பு வரவில்லை என்பதோ காதல் ஏற்படவில்லை என்பதோ நம் தவறும் அல்ல, அவர்கள் தவறும் அல்ல. அனைவரும் தனித்தனி மனிதர்கள். ஒரே நேரத்தில் இருவருக்கும் ஈர்ப்போ அதன் பின்னான காதலோ வரலாம். இல்லை ஒருவருக்கு வந்து இன்னொருவருக்கு வராமல் இருக்கலாம். அதேபோல் ஏற்பட்ட ஈர்ப்போ, காதலோ ஒருவருக்கு ஏதோ ஒரு காரணத்தால், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் காணாமலும் போகலாம். அதுவும் யார் குற்றமும் அல்ல.

காதல் ஒருமுறைதான் வரும் என்பதும் உண்மையில்லை. மனதைத் திறந்துவைத்தால் காதல் என்னும் தென்றல் காற்று எப்போது வேண்டுமானாலும் நம்மைத் தீண்டலாம், குளிர்விக்கலாம். சமயத்தில் சூறைக்காற்றாகக்கூட நம்மை அடித்து வீழ்த்தலாம். காதல், மனிதர்களின் வாழ்வைச் சுவாரசியமாக்க வேண்டுமே தவிர, அழித்துவிடக் கூடாது. காதல் என்பது நம்மைப் பலப்படுத்த வேண்டுமேயல்லாது, பலவீனப்படுத்தக் கூடாது. இது புரியாதவர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவதுபோல் காதல் என்கிற உணர்வையும் கட்டுப்படுத்திக்கொண்டு பேசாமல் இருந்துவிட்டுப் போகலாம்.

(விவாதிப்போம் மாற்றுவோம்)

கட்டுரையாளர், எழுத்தாளர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in