

“நீ பைக் ஓட்டும்போது எனக்குப் பெருமையாதானே இருந்துச்சி திவ்யா. அப்போ எனக்குத் தெரியாதே நீ திருநம்பினு”
“அப்பா அதை நீங்க பெருமையாதான் பார்த்தீங்க. ஆனா எனக்குள்ள நான் ஆணுன்னுதான் நெனச்சி வளர்ந்தேன்பா..”
“எப்படிம்மா ஒரு பொண்ணு தன்னை ஆணுன்னு நெனைக்க முடியும்? இதை உலகமும் ஏத்துக்காதேம்மா”
எங்கப்பா இப்படி மனம் வருந்திப் பேசுவது எனக்குக் கவலையாக இருந்தது.
நான் அவருக்குக் கடைசி பொண்ணுன்னு செல்லமா வளர்த்தார். எது கேட்டாலும் வாங்கித் தருவாரு. எனக்கு அப்பான்னா உயிர். அம்மா எப்பவும் சத்தம் போடுவாங்க. எது செஞ்சாலும் கோபப்படுவாங்க.
அது எப்படி நான் பொண்ணுங்களோட விளையாட முடியும்? பார்க்குறவங்க என்ன நினைப்பாங்க? நான் ஒரு பையன்; மத்த பையன்களோட தானே விளையாடணும்? இதை என் அம்மா புரிஞ்சிக்க மாட்டாங்க. நான் என் நண்பனுங்களோட விளையாடினா என்னை அடிச்சி இழுத்துட்டு போயிடுவாங்க.
எனக்கு ஒரு காதுக்கு மட்டும் கம்மல் போதும்னு சொன்னா எங்கம்மா ஒத்துக்க மாட்டாங்க. பெரிய கம்மலா ரெண்டு காதிலும் போட்டு விட்டுடுவாங்க. எனக்குப் பிடிக்கவே பிடிக்காது.
ராஜேஷும் சதீஷும் என் பிறந்த நாளுக்கு ஒரு தொப்பி கொடுத்தாங்க. அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. என் முடிய மடிச்சு தொப்பிக்குள்ள வச்சி மறைக்க நல்லாருக்கும். மூன்று நாள்தான் அதை என் தலைல மாட்டினேன். எங்கம்மா அதைப் போடக் கூடாதுன்னு பிடுங்கி கிழிச்சே போட்டுட்டாங்க.
| கதையல்ல நிஜம் l மூன்றாம் பாலினத்தவர் அல்லது மாற்றுப் பாலினத்தவர் என்றால் அது திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளை உள்ளடக்கியது என்று 2014இல் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழக அரசு, திருநம்பிகளுக்கு அடையாள அட்டை வழங்கியும், திருநங்கைகளின் நல வாரியத்தில் திருநம்பிகளையும் உறுப்பினர்களாக வைத்துள்ளது. l ஓர் ஆண் சிறுவனாக இருக்கும்போது ஆணுடையில் பெண் போன்று நடந்தாலோ பேசினாலோ சுற்றி இருப்பவர்கள் எளிதில் திருநங்கை எனக் கூறிவிடுவர். ஒரு பெண் சிறுவயதில் ஆண் போன்று நடந்துகொண்டால் அது சமூகத்தில் பெருமையாகக் கருதப்படுகிறது. அந்தப் பெண் திருநம்பியாக இருக்கக்கூடும் என நினைப்பதில்லை. திருநம்பிகள் சிறுவயதில் ஆண்களைப் போன்ற நடை உடைகளை கொண்டவர்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்காக அப்படி நடந்துகொள்ளும் அனைத்துப் பெண்களும் திருநம்பிகள் அல்லர். l திருநம்பியர் ஆண்களின் அணிகலன்கள், உடைகளை விரும்புவர். இதுவும் இயற்கையே. ஏதோ பழக்கவழக்கம் என்று நாம் கருதலாகாது. அவர்கள் ஆணைப் போன்று இருக்கிறார்கள் என்றவுடன் அவர்களை நாம் திருநம்பி என்று கூறக் கூடாது. அவர்கள் ‘தான் ஒரு திருநம்பி’ என்றால் மட்டுமே, நாம் அவர்களைத் திருநம்பியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். திருமணம் செய்தால் காலப்போக்கில் சரியாகிவிடும் என்கிற எண்ணம் இதற்குத் தீர்வல்ல. l திவ்யா என்கிற திவாகரின் வாழ்க்கையில் பெரிய அடியே அவளுடைய தந்தை அவளைக் கைவிட்டதுதான். இனி திவாகர் அன்பும் ஆதரவும் தேடி போகவேண்டிவரும். தன் மகளுக்குப் பிடித்த படிப்பை, விரும்பிய கணவனை ஏற்றுக்கொள்ளும் பெற்றோர் அவர்கள் விரும்பிய இனத்தையும் ஏற்றுக்கொண்டால் அவர்கள் வீதியில் அலைய வேண்டியதில்லை. l திருநம்பி அல்லது திருநங்கை தங்களை எவ்வாறு அழைக்க வேண்டும் எனக் கூறுகிறார்களோ அவ்வாறு நாம் அவர்களை அழைக்க வேண்டும். தோற்றத்தின் அடிப்படையிலோ அறுவைசிகிச்சை செய்து விட்டார்களா என்றோ நாம் அவர்களை ஆராய வேண்டியதில்லை. |
இதை எல்லாம் எங்கப்பாகிட்ட சொல்லி அழுவேன். அவரு எங்கம்மாவை நல்லா திட்டுவாரு. “என் பொண்ணு பொம்பளைக்கு பொம்பள; ஆம்பளைக்கு ஆம்பள. எப்படி தைரியமா வளர்த்து இருக்கேன் பாரு”ன்னு மார்தட்டிச் சொல்லுவாரு.
நான் முதன் முதலா பைக் ஓட்டும்போது தெருவே சந்தோஷப்பட்டுச்சி. கந்தசாமி பொண்ணு புல்லட் ஓட்டுறா, தைரியமானவன்னு சொல்லி பெருமைப்பட்டாங்க. ஆண் என்கிற பெருமை எனக்கு எப்பவுமே இருக்கும். ஆனா எங்கம்மா, “நீ வயசுப் பொண்ணு. புடவை கட்டு”ன்னு சொல்லுவாங்க.
இப்படி என்னை நல்லா புரிஞ்சுகிட்ட அப்பா திடீர்னு புரியாத மாதிரி நடக்கறது எனக்குக் கஷ்டமா இருக்கு.
“அப்பா நான் பையன். என்னைப் புரிஞ்சிக்கோங்க”
“திவ்யா நீ ஆணுன்னு நெனைக்கறத விட்டுடு. எல்லாம் சரியாயிடும். முடி வளர்க்க மாட்டேன், கம்மல் போட மாட்டேன்னு சொல்லாதேம்மா. நம்ம சொந்தக்காரங்க தப்பா பேசுவாங்க. உனக்கு 16 வயசும்மா, இன்னும் நீ புடவை கட்டாம பேன்ட்ஸ் - ஷர்ட் போட்டுட்டு ஊரைச் சுத்துறது தப்பும்மா” - அப்பா என் கையப் புடிச்சி கெஞ்சுறார்.
“நீ பையன் மாதிரி சேட்டை செய்யும்போது எனக்குப் புரியல. உன்னை விஜயசாந்தி மாதிரி தைரியமானவன்னு நெனச்சேன். அதே மாதிரி உன்னைத் தனியா அனுப்பினாலும் எந்த ஆணும் உன்கிட்ட வாலாட்ட முடியாதுன்னும் நெனச்சேன். இப்போ என்னடான்னா நீ உன்னையே ஆம்பளைன்னு சொல்றியேமா”
“அப்பா நான் மூன்றாம் பாலினம். அதைப் புரிஞ்சிக்கோங்க. நான் பேர்கூட வச்சுக்கிட்டேன். நான் திவ்யா இல்லப்பா, திவாகர். என்ன மாதிரி நெறய பேரு இருக்காங்க, நிறைய சாதிக்கிறாங்க. என்னையும் விடுங்கப்பா நானும் திருநம்பியா வாழுறேன். நீங்க மட்டும் என்கூட இருந்தா போதும்பா”
“இல்ல திவ்யா. நீ மூன்றாம் பாலினம் இல்ல. அது திருநங்கைகளுக்கு கலைஞர் வச்ச பேரு. அவங்கதான் மூன்றாம் பாலினம். திருச்செங்கோடு பக்கத்துல அர்த்தநாரீஸ்வரர்னு ஆணும் பெண்ணும் கலந்த சிலையே இருக்கு. அதனாலதான் சொல்றேன். நீ ஆம்பளப் பசங்களோட விளையாடி உன்னை ஆம்பளைன்னு நெனைக்குறே திவ்யா”
“அப்பா நான் கடைசியா சொல்றேன். நான் ஆண்தான். எனக்கு நெறைய திருநம்பி நண்பர்கள் இருக்காங்க. அவங்களுக்குப் பக்கத்துல ஒரு வீடு எடுத்து இருக்கலாம், வந்துடுங்கப்பா. நான் வேலை பார்த்து உங்களையும் நம்ம குடும்பத்தையும் பார்த்துக்கறேன்”
“திவ்யா நானும் கடைசியா சொல்றேன். நீ இந்த முடிவு எடுத்தா எனக்கு நான் பெத்த மத்த பொண்ணுங்கதான் முக்கியம். உன் விளையாட்டு வாழ்க்கை எனக்கு அவசியம் இல்லை. நீ இந்த ஊரு திருநம்பிங்ககிட்ட இருக்காத. அது எங்களுக்கு அசிங்கம். வேற ஏதாவது ஊருக்குப் போய் எப்படியோ வாழு. என் மூணு மகள்களில் ஒன்னு செத்துடுச்சுனு நான் நெனச்சிக்கிறேன்”
அப்பா என்னைத் திரும்பிப் பார்க்காமல் போய்விட்டார்.
(தொடரும்)
கட்டுரையாளர், திருநர் செயற்பாட்டாளர்.