

ஆண்கள் பலர் என்னதான் படித்தாலும் தங்களை முற்போக்காகக் காட்டிக்கொண்டு மேடைகளில் பெண்ணுரிமை குறித்துப் பேசினாலும் அடிப்படையில் மோசமான ஆணாதிக்கச் சிந்தனையோடுதான் இருக்கிறார்கள் என்பதற்குச் சமீபத்திய உதாரணம் சீமான்.
நாம் தமிழர் கட்சியின் நிறுவனரும் தலைமை ஒருங்கிணைப்பாளருமான இவர் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் தெரிவித்திருந்தார். தன்னை மணந்துகொள்வதாகக் கூறித் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் அவர் தொடர்ந்து பொதுவெளியில் பேசிவந்தார்.
அண்மையில் அந்தப் புகார் குறித்த விசாரணைக்காக வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு சீமான் சென்றார். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய சீமான், விஜயலட்சுமி குறித்து மிக மோசமாகப் பேசினார். ‘இவ்வளவு பெண்கள் இருக்க கொள்ளயில உனக்குப் பழகுவதற்கு ஒரு பொம்பளை பிடிச்சிருக்க பாரு’ என்று தன் மனைவி கயல்விழி தன்னைக் கடிந்துகொண்டதாகச் சிரித்தபடியே ஊடகத்தினர் மத்தியில் சீமான் பேசினார். இதைப் பேசுகிறபோது அவரது உடல்மொழியில் அவ்வளவு அலட்சியமும் திமிரும் வெளிப்பட்டன.
பெண் ஒருவரைப் பொதுவெளியில் கீழ்த்தரமாகப் பேசுகிறோம் என்கிற உணர்வு சிறிதுமின்றி நாட்டுக்காகப் போராடி சிறை சென்று திரும்பிய தியாகி போன்ற தொனியில் அவர் பேசினார். வெடித்துச் சிரித்தபடி சீமான் இதைச் சொன்னபோது சுற்றியிருந்த அனைவரும் சிரித்தனர். சீமானின் இந்த இழிசெயலைக் கேட்டுச் சிரிக்க ஆட்டு மந்தைகள்கூடக் கொஞ்சம் யோசித்திருக்கும்.
ஆனால், சீமானைச் சுற்றியிருந்தவர்களில் ஒருவர்கூட முகம் சுளிக்கவோ சீமானின் பேச்சைக் கண்டிக்கவோ குறைந்தபட்சம் அதிருப்தியை வெளிப்படுத்தவோகூட இல்லை. பக்கத்தில் நின்றுகொண்டிருந்த சீமானின் மனைவி கயல்விழியும் தன் கணவனின் பேச்சை சிரித்தபடியே ரசித்தார். ஒரு பெண்ணைப் பற்றித் தன் கணவர் இழிவாகப் பேசுகிறாரே என்கிற வருத்தமும் அவர் முகத்தில் துளிகூட இல்லை.
“இதுல எனக்கு எந்த மன உளைச்சலும் இல்லை. மலைபோல் அவர் நிற்கிறபோது எங்களுக்கு என்ன மன உளைச்சல்” என்று பெருமிதமாகப் பேட்டி தந்தார் கயல்விழி.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு உரிமை தருவோம் என்று பீற்றிக்கொள்கிற கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்துகொண்டு ஊடகங்கள் முன்னிலையில் ஒரு பெண்ணைப் பற்றித் தரக்குறைவாகப் பேசுவதுதான் சீமான் பேசுகிற தமிழர் பண்பாடுபோல.
‘இந்த நிலம் மட்டும் என் கைக்கு வரட்டும்...’ என்று மேடைதோறும் முழங்குகிற சீமானின் கைகளுக்கு நிலம் வந்துவிட்டால் பெண்களின் நிலையை யோசித்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. ஒருவர் என்ன கதையை அளந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு கைதட்டி ரசிக்கிற கூட்டம் இருக்கிறபோது பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்பதற்கு சீமானும் அவரைச் சுற்றியிருக்கும் கூட்டமுமே சாட்சி.