பெண்கள் ஆண்கள் குழந்தைகள் - 17: பெற்றோர் தியாகிகள் அல்ல

பெண்கள் ஆண்கள் குழந்தைகள் - 17: பெற்றோர் தியாகிகள் அல்ல
Updated on
3 min read

பெற்றோர் என்றாலே தியாகிகளாக இருக்க வேண்டும் என்கிற ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். இந்தப் பிம்பத்தை நிலைநாட்டுவதற்காகவோ, பல்லாண்டுக் காலமாக உள்ளே ஏற்றிவைத்துவிட்ட தன்மையாலோ உண்மையிலேயே பெற்றோர்கள் பலர் தியாகிகளாகத்தான் வாழ யத்தனிக்கிறார்கள். ஆனால், இவர்கள் செய்வது தியாகம் என்றால், பிள்ளைகள் வளர்ந்த பிறகு ஒருவேளை அந்தப் பிள்ளைகள் பெற்றோரைச் சரிவரக் கவனிக்கவில்லை என்றால், “என் வாழ்க்கை முழுவதும் உனக்காகத்தான் வாழ்ந்தேன். இன்னைக்கு உன்னால என்னைக் கவனிக்கக்கூட முடியல” என்கிற பேச்சு எங்கிருந்து வருகிறது? அதே தியாகத்திலிருந்துதான்.

தியாகம் மேன்மைக் குணமாக இங்கே சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அது உண்மையல்ல. தனக்கெனச் சிறிதுகூட வாழ இயலாத தனிமனிதரை அந்தக் குறை வாட்டிக்கொண்டேதான் இருக்கும். நாம் இன்று செய்யும் தியாகத்துக்கு எல்லாம் பிரதிபலனை நாமே உணராமல் நம் மனம் எதிர்பார்த்துக்கொண்டேதான் இருக்கும். அந்த உண்மை நம் பிள்ளைகள் வளர்ந்து நம்மைக் கவனிக்காமல் போகும்போது பூதாகரமாக வெடிக்கும்.

இப்படி ஒவ்வொரு பெற்றோரும் தனக்காக வாழாமல், தன் சிறுசிறு ஆசைகளைக்கூட நிறைவேற்றிக்கொள்ளாமல் வாழ வேண்டும் என்றால், இங்கு யார்தான் வாழ இயலும்? இன்றைய பிள்ளைகள் நாளைய பெற்றோர்கள். ஆக, அவர்களும் வாழ இயலாது. இந்தச் சுழற்சியால்தான் இங்கே குடும்பங்களுக்குள்ளேயே இவ்வளவு வன்மங்களும் காழ்ப்புணர்வுகளும் மண்டிக் கிடக்கின்றன.

நாம் கற்றவற்றையெல்லாம் துறந்து, புதிதாகக் கற்கத் தொடங்க வேண்டும். தாய், தந்தை, மகள், மகன் என்கிற உறவு முறைகள் எல்லாமே நம் பயணத்தில் நாம் ஏற்கும் கதாபாத்திரங்கள் மட்டுமே என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். அந்தக் கதாபாத்திரத்துக்குத் தகுந்தாற்போல் வேலைசெய்தால் போதும். அதிகப்படியாக நாமே அந்தக் கதாபாத்திரம்தான் என்று நினைத்துச் செயல்படும்போதுதான் பிரச்சினைகள் உருவாகின்றன. எப்படி அந்தக் கதாபாத்திரங்களுக்கான வேலைகளையும் பார்த்து, நம் தேவையையும் பார்ப்பது என்பதற்குச் சில உதாரணங்களைப் பார்ப்போம்.

நம்மை நாம் மதிப்போம்

அம்மா என்பவரும் ஒரு மனுஷிதான். அவருக்கெனச் சில ஆசைகள் இருக்கும் இல்லையா? ஆனால், பெரும்பாலான அம்மாக்கள் தன் நேரம், சக்தி, உழைப்பு எல்லாவற்றையும் தன் குடும்பத்திற்காக மட்டுமே செலவழிக்கிறார்கள். இது பல குடும்பங்களில் நடப்பதுதான். ஆனால், இதே அம்மாக்கள்தாம், “இவங்களுக்காக ஓடா உழைச்சேன். பார்த்துப் பார்த்து வளர்த்தேன். இன்னைக்கு என்னை எதுக்கும் மதிக்கிறதில்லை” என்று புலம்புவார்கள். நாமே நம்மை மதிக்காமல் மற்றவர்களையே முன்வைத்துத்தானே வாழ்ந்திருக்கிறோம்? பிறகு பிள்ளைகள் எப்படி நம்மை மதிப்பார்கள்? ஆக நாம் முக்கியமல்ல என்பதைத்தானே அவர்களிடம் கடத்தியிருக்கிறோம்? அப்படியிருக்க இன்று அவர்களைக் குறைகூறி என்ன பயன்?

ஒரு நாளில் 24 மணிநேரம் இருக்கிறதல்லவா? அதில் ஏன் ஒரு மணிநேரத்தை நமக்கென நம்மால் ஒதுக்க இயலாது? அந்த நேரத்தில் நமக்குப் பிடித்த ஏதோ ஒன்றைச் செய்யக் கூடாது? “இது எனக்கான நேரம். என்னை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது” என்று சொல்லவோ, அதைச் செயல்படுத்தவோ நமக்கென்ன தயக்கம்? நமக்கெல்லாம் நம்மை நாமே தியாகியாக உருவகப்படுத்திகொள்வதில் ஒரு போதை. அந்தப் போதை தெளியும்போது மற்றவர்களைக் குறை கூறி அவர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவைக்கிறோம்.

பெரும்பாலான பெற்றோர்கள் (நம் சமூகத்தில் பெருவாரியான அப்பாக்கள்) தாங்கள் ஆசைப்பட்ட எதையுமே தமக்கென வாங்கிக்கொள்ள மாட்டார்கள். ஆனால், பிள்ளைகள் என்ன கேட்டாலும் தன் சக்திக்கு மீறியாவது அதை வாங்கிக் கொடுப்பார்கள். இது ஒரு தியாகம் என்கிற நினைப்பு. பத்து ரூபாய் வருமானம் ஈட்டினால் அதில் ஒரு ரூபாயைத் தனக்கென எடுத்துவைத்துத் தனக்கு மகிழ்வு தரும், தான் ஆசைப்படும் ஒன்றை ஏன் செய்துகொள்ளக் கூடாது? ஐயோ மகன் அதை கேட்டானே, மகள் அதை கேட்டாளே, இந்தப் பணம் இருந்தால் அவர்கள் கேட்டதை வாங்கிக் கொடுக்கலாமே என்கிற எண்ணம் அதைத் தடுத்துவிடுகிறது.

பெற்றோரும் மனிதர்களே

உண்மைதான். நம் பிள்ளைகளுக்கு நாம்தான் செய்ய வேண்டும். ஆனால் நமக்கு மட்டும் யார் செய்வார்கள்? நாம்தானே செய்துகொள்ள வேண்டும்? இதற்குப் பிள்ளைகளைக் கவனிக்காமல், நம்மை மட்டுமே கவனித்துக்கொள்ள வேண்டும் என்று பொருளல்ல. அவர்களைக் கவனிக்கும் அதே நேரத்தில், நம்மையும் சிறிதாவாது கவனித்துக்கொள்ள வேண்டும். நம் வாழ்வின் பயணம் எப்போது முடியும் என்று யாருக்கும் தெரியாது. வாழும்போதே எழும் சிறு சிறு ஆசைகளையாவது வாழ்ந்து பார்த்துவிட்டால் நாமும் வாழ்ந்தோம் என்கிற திருப்தி நமக்கும் இருக்கும். நாளை பிள்ளைகள் வளர்ந்து அந்த ஆசைகளை நிறைவேற்றுவார்கள் என்று காத்திருந்தால், ஒருவேளை நாம் இல்லாமலும் போகலாம்; இருந்தாலும் உடலோ மனமோ ஈடுகொடுக்காத நிலையில் இருக்கலாம், இல்லை பிள்ளைகளால் முடியாமல் போகலாம், அவர்களுக்கு மனமில்லாமலும் போகலாம். இன்று தியாகியாக இருந்துவிட்டு நாளை நம் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறாதபோது, பிள்ளைகள் மீது நாம் குற்றம் சுமத்தலாம். ஆனால், அதில் யாருக்கு என்ன பயன்? நாமும் நிம்மதியிழந்து, யாருக்காக நாம் வாழ்ந்ததாகக் கூறிக்கொள்கிறோமோ அவர்களது நிம்மதியையும் கெடுத்து, வாழும் வாழ்வையே பொய்யாக்கிக்கொள்கிறோம்.

பிள்ளைகள் வளரும்போதே, நாமும் அவர்களைப் போலவே எல்லா ஆசைகளும் கொண்ட சாதாரண தனி மனிதர்கள்தான் என்பதை அவர்களுக்குப் புரியவைப்பது நல்லது. பெற்றோர்களுக்கெனச் சிறிது நேரம், அவர்களுக்கெனச் சில நண்பர்கள், அவர்களுக்கெனச் சில செலவுகள், அவர்களுக்கெனச் சில பிடித்தங்கள், ருசிகள், ஓய்வு எல்லாம் தேவை என்பது பிள்ளைகளுக்குப் புரியவேண்டும். அம்மாவுக்கும் அப்பாவுக்குமான சில தனிமைகளும் தேவைப்படும் என்பதும் அவர்களுக்குப் புரியவேண்டும்.

நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளாத முக்கியத்துவத்தை இங்கு யாரும் நமக்குத் தானாக முன்வந்து கொடுக்க மாட்டார்கள். நாம் வாழ்ந்து காட்டும் முறையில்தான் அவர்கள் நம்மைப் புரிந்துகொள்வார்களே அன்றி, நம் மனதிற்குள் புகுந்து பார்த்தெல்லாம் அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. முக்கியமாக நமக்கான சேமிப்பும், நம் உடல்நலம் பேணுவதும், நாளை பிள்ளைகள் நம்மைக் கவனிக்கவில்லையெனினும் தேவையற்ற பிரச்சினைகளை முன்வைக்காமல் வாழ நமக்கு உதவும்.

(விவாதிப்போம் மாற்றுவோம்)

கட்டுரையாளர், எழுத்தாளர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in