

எங்க ஸ்கூல்ல நான்தான் நல்லாப் படிப்பேன்னு மார்தட்டிச் சொல்லுவேன். சொன்னா நம்ப மாட்டீங்க ஒவ்வொரு வருசமும் ரெண்டாவது அல்லது மூணாவது ரேங்குதான் எடுப்பேன்.
ஒரு நாளும் வீட்டுப் பாடத்தை முடிக்காம வரவே மாட்டேன். எனக்கு ஒரே பிரெண்ட் ராணி டீச்சர் மட்டும்தான். அவங்க என்னை ரொம்ப அன்பா நடத்துவாங்க.
“ஏய் இது ராணி டீச்சர் ஆளு”ன்னு பசங்க பேரே வச்சிட்டாங்கன்னா பாருங்களேன். எங்க ஸ்கூல்ல எல்லாமே பசங்கதான்; பொண்ணுங்க இல்ல. இந்த ஸ்கூல்ல நான்தான் பொம்பளைன்னு மணி அடிக்கடிச் சொல்லுவான். அதனால எனக்கு அவனை ரொம்பப் புடிக்கும். ஷாஜஹான்னு ஒருத்தன் என்கூடப் படிச்சான். அவன் என்னை அடிக்கடி அலின்னு கூப்பிடுவான். எனக்கு அர்த்தம் புரியல. ஒரு தடவை போடா எட்டு ஒண்ணுன்னு என்னைய அவன் சொல்லிச் சிரிச்சான். நான் கூட்டிப் பார்த்தேன். அது தப்புனு தோணுச்சு.
நான் எட்டு ஒன்னுனா, நீ மட்டன் பாய் போடான்னு சொல்லிட்டேன். அதுக்கு என்னைய அடிக்க வந்தான். ராணி டீச்சர் எனக்குக் கொடுக்குற இடம் இவனுங்களுக்கு எவ்ளோ பயத்தை உண்டாக்குதுன்னு எனக்கு ஒரு இறுமாப்பே இருந்தது.
இன்டெர்வெல் விட்டதும் நான் லேட்டாதான் பாத்ரூம் போயிட்டு வருவேன். அப்போதானே எல்லாப் பசங்களும் பாத்ரூம்ல இருந்து வெளில வருவாங்க. யாரும் இல்லைனாலும் நான் கதவைச் சாத்திட்டுதான் யூரின் போவேன். அன்னிக்கு நான் எப்போவும் போல ஸ்கூல் போனதும் இப்படி நடக்கும்னு எனக்குக் கொஞ்சமும் தெரியாது. அதிர்ச்சியா இருந்தது.
யார் செய்த வேலை இது. எனக்குப் பார்க்கப் பார்க்க அசிங்கமா இருந்தது. இருங்கடா உங்களை வச்சிக்குறேன், ராணி டீச்சர் வரட்டும்னு காத்திருந்தேன். எனக்கு அழுகையோ கவலையோ கொஞ்சமும் இல்ல. இன்னும் கொஞ்ச நேரத்துல யார் அழப் போறாங்கன்னு பாருங்கடான்னு மனசுல பொருமிட்டு வாசலைப் பார்த்துட்டே இருந்தேன். டீச்சர் வந்துட்டாங்க.
| கதையல்ல நிஜம் கல்வி நிலையங்களில் அனைவரும் சமம் என்பதை நிரூபிக்கவே பள்ளிச் சீருடைகள். அனைவரும் என்பதில் சாதி, மதம், ஏழை, பணக்காரன் மட்டுமல்ல பாலினமும்தான். 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய ‘மூன்றாம் பாலினத்தவர்’ என்கிற தீர்ப்பின் வரிகளிலும், 2020இல் கொண்டு வரப்பட்ட ‘திருநர் பாதுகாப்புச் சட்ட’த்திலும் திருநர் கல்வியைப் பாதுகாக்கக் கல்வி நிறுவனங்கள் முன்வர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆசிரியர் ஒருவர், திருநங்கை உணர்வு கொண்ட அந்த மாணவனைத் தனது தேவைக்குப் பெண்ணாகப் பாவித்துத் தலைவாரச் சொல்வதும் மற்ற சிறார் அக்குழந்தையைப் புறந்தள்ளியபோது அவரும் பொதுப் புத்தியோடு அக்குழந்தையை ஒதுக்குவதும் பெரும் கொடுமை. அந்தக் கணம் அந்தக் குழந்தை மனம் படிப்பைத் தொடர முடியா நிலைக்குச் செல்லும். இனம் கண்டு பாலியல் துன்புறுத்துதல் செய்வது பெண் குழந்தையை மட்டுமல்ல, மாற்றுப்பாலினருக்கும் நடக்கிறது என்பதைத்தான் மேற்கூறிய கதையில் இருந்து அறிய வேண்டும். சக மாணவர்களும் சிறார். எனவே, அவர்கள் கண்ணால் காண்பதைத் திறந்த மனத்தோடு விமர்சிப்பார்கள். அதனால், அக்குழந்தையின் நடை, பேச்சு போன்றவற்றைக் கேலி செய்கிறார்கள். ஆனால், பள்ளி நிர்வாகம் மூன்றாம் பாலினத்தவர் குறித்து அவ்வப்போது மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பள்ளிக் கல்வியில் திருநர் இடைநிற்றலைத் தடுக்க தமிழக அரசு சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாகத் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் முதல் கட்டமாக ஒரு லட்சம் ஆசிரியர்களுக்குப் பாலியல் சிறுபான்மையினரான திருநர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளது. இது வரவேற்கத்தக்கது. இதுபோன்ற மாற்றங்களும் முன்னெடுப்புகளும் அதிகரிக்க வேண்டும். |
“பாருங்க டீச்சர்”னு போர்டைக் காண்பிச்சேன். “இது என்ன? 9 ன்னு எழுதி அதுக்குள்ள உன் பேரு எழுதி இருக்கு. இது யார் வேலை?”ன்னு என்னைக் கேட்டாங்க. “அதான் டீச்சர் நீங்க கண்டுபிடிங்க. எனக்கு யாருன்னு தெரியல. உங்களுக்காகத்தான் நான் காத்திருந்தேன்”.
எல்லோரையும் முறைத்துப் பார்த்த டீச்சர் என்னைப் பார்த்து, “என்ன கண்டுபிடிக்கச் சொல்றே? இல்லாததையா பசங்க எழுதிட்டாங்க. போடா போ, போய் வேலையப் பாரு”ன்னு சொன்னாங்க.
“நான் டீச்சரு. அதனால உன்னைய எப்போவோ கண்டுபிடிச்சிட்டேன். பிள்ளைங்க இப்போ கண்டுபிடிச்சாங்க. இனிமேலாவது ஆம்பள புள்ள மாதிரி நடடா அறிவு கெட்டவனே. பொம்பள செய்ற வேலையெல்லாம் செய்யாதே புரியுதா?”
இன்டெர்வெல் பெல் அடித்தது.
(தொடரும்)
கட்டுரையாளர், திருநர் செயற்பாட்டாளர்.