

பால் புதுமையர் எனப்படும் திருநர் சமூகத்தைப் பற்றிய உண்மைகளை விடக் கட்டுக்கதைகளே ஏராளம். அதனால்தான் கதைகள் மூலமாகவே அவற்றைக் களைய முயன்றிருக்கிறேன். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு பாடத்தைச் சொல்லும், புதிய பாதையைக் காட்டும். வாருங்கள், பயணிக்கலாம். இந்த வாரம் ஒரு கதை
எங்கக்கா பெரியவளா ஆயிட்டா. அவளைப் பார்க்க தெனம் ஆளுங்க வர்றாங்க. வர்றவங்க சும்மாவா வர்றாங்க? நாட்டுக் கோழி முட்டை, கேழ்வரகுப் புட்டு, மசால் தோசைன்னு கையில ஏதேனும் தின்பண்டம் எடுத்துட்டு வராங்க.
நீயும் வாடா சாப்பிடுனு எங்கக்கா கூப்பிடும். அப்போ நான் ஓலைக்கு வெளில உக்காந்து கைய உள்ள விட்டுக் கேப்பேன். எங்கக்கா கொடுக்கும். பல்லாங்குழி விளையாட நான் ஓலைக்கு வெளில இருந்து சோழி போடுவேன். அக்கா உள்ளாரா இருந்து விளையாடும்.
“டேய் நீயும் போய் உள்ளே உக்காறது தானே” - இது ஓலை கட்டின எங்க மாமா.
உடனே எல்லாரும் சிரிப்பாங்க எங்க அம்மா உள்பட. எனக்கும் சிரிப்பு வரும். பின்னே வராதா. எனக்கு எட்டு வயசுதானே ஆவுது. இந்த ஓலைக்குள்ள உட்கார இன்னும் நாலு வருஷம் இருக்கே. இதைப் புரிஞ்சிக்காம என் மாமா இப்படி உளறுறாரே.
பக்கத்துக்கு வீட்டு விஜயாக்கா, பானுக்காவ எனக்கு ரொம்பப் பிடிக்கும். என்கிட்டே அவங்க ரெண்டு பேரும் ரொம்ப அன்பா இருப் பாங்க. நாங்க மூணு பேரும் தெருவுல ஒன்னாவே இருப்போம். இந்த ரெண்டு அக்காவோட ஜாக்கெட் துணியும் அளவு ஜாக்கெட்டும் நான்தான் எடுத்துட்டுப் போய் டெய்லர்கிட்ட கொடுப்பேன்.
டெய்லர் நல்லா இருப்பாரு. எனக்கும் பேசப் பிடிக்கும். இருந்தாலும் இவரு சும்மா என்னைப் பார்க்குறது எனக்குச் கூச்சமா இருக்கும். ‘இதோ பாருங்க நான் அப்படி இல்ல, இப்படிச் சும்மா பார்க்கறது, சிரிக்கிறது எல்லாம் வேற யார்கிட்டயாவது வச்சுக்கோங்க. இப்படியே தொடர்ந்தா நான் எங்க அக்காங்ககிட்ட சொல்லிடுவேன்’னு சொல்லத் தோணும். ஆனா சொல்லலை.
இப்போல்லாம் நெறய நேரம் எனக்கு அவர் முகம் நினைவுக்கு வந்துட்டே இருக்கு. ரேவதிக்கா புதுத் துணி எடுக்க மாட்டாளான்னு எனக்குத் தோணிட்டே இருக்கு. இது மாதிரி எல்லாம் தோணு துன்னு ரேவதி அக்காகிட்ட சொல்லலாம்னு பாத்தா 15 வயசுல இப்படியெல்லாம் நெனக்கிறியான்னு திட்டிட்டா. அய்யய்யோ வேணாம்டி அம்மா. ஆனா ஒண்ணுங்க. என் டிரௌசரை நான் அந்த டெய்லர்கிட்ட தைக்கக் கொடுத்ததே இல்ல. ஏனோ எனக்கு அது பிடிக்கல. வேற டெய்லர்கிட்டயும் ஏற்கெனவே தச்சதைத்தான் அடையாளத் துணியா கொடுப்பேன்.
ஒரு நாள், “உன்கிட்ட தனியா பேசணும். முடியுமா?”ன்னு டெய்லர் கேட்டார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டுடுச்சு. “எதுக்கு என்கிட்டே தனியா பேசணும்? என்ன பேசணும்?”னு நானும் பதிலுக்குக் கேட்டேன். “ஏன் பேசக் கூடாதா?”
பேசக் கூடாதுன்னு சொல்ல எனக்கு வாய் வரலை. ஒரு ராத்திரி முழுக்கத் தூங்காம அன்னைக்குத்தான் நான் இருந்தேன். ராத்திரி எல்லாம் எனக்கு ஒரே கேள்வி மனசுல ஓடுச்சு. என்ன பேசப்போறார், என்ன பேசப்போறார். இதேதான். விடியிற வரைக்கும் தோணுச்சு.
எங்க மாமாவுக்குத் தெரிஞ்சா இதை ஒப்புக்க மாட்டார். அவர் சாதி எல்லாம் பார்ப்பார். அம்மாகிட்ட சொல்லவும் முடியாது. அம்மாவுக்குத் தெரிஞ்சா எனக்கு மேல அக்காவும் கல்யாணம் ஆகாம இருக் குன்னு வேதனைப்படும். நான் அவசரப் படறேன்னு அட்வைஸ் பண்ணும். எனக்கு வேற 15 வயசுதான் ஆகுது. குழப்பத்தோடு பொழுது விடிந்தது.
இன்னைக்கு நல்லா ரெண்டு தடவ சோப்புப் போட்டு குளிச்சேன். இருக்கறதுலே நல்ல சட்டை - டிரவுசரைப் போட்டுட்டேன். நெத்தியில சந்தனம் வச்சி அழகா வெளில வந்தேன். டெய்லர் கடைக்குப் போனேன். “வா வா”ன்னு வேகமா என்னை உள்ள கூப்பிட்டார். “உட்காரு”ன்னு சேர் போட்டாரு. கடையில யாருமே இல்லை. மனுஷன் ஏதோ முடிவோட இருக்காருன்னு மட்டும் எனக்குத் தோணுச்சு.
“இதோ பாரு, நான் உன்கிட்ட என் வாழ்க்கையைப் பத்திப் பேசப் போறேன்”னு ஆரம்பிச்சார். நான் அமைதியா இருந்தேன். அவரு சொல்றதுல என் வாழ்க்கையும் அடங்கி இருக்கே.
“சொல்லுங்க”
“நானு பானுவை லவ் பண்றேன். நீதான் அவளோட ரொம்ப குளோஸ் ஆச்சே. எங்களைச் சேர்த்து வக்கறியா?”
நான் உட்கார்ந்து இருந்த இடம் எனக்குச் சுத்துச்சி. என்னைச் சுத்தி என்ன நடக்கு துன்னே தெரியலை. “நீ ஒவ்வொரு முறை கடைக்கு வரும்போதும் எனக்குச் சொல்லணும்னு தோணும். எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியாம உன்னையே பார்ப்பேன். நீயும் ஓடிடுவே. நீ சின்ன பையன். உன்கிட்ட என் காதலுக்கு உதவி கேட்குறேன்னு நினைக்காத”
“என்னது பையனா?”
“உன்னை மாதிரி இருக்குற பசங்க பொண்ணுங்ககிட்ட நெருக்கமா பேசுவீங்க. அதான் உன்கிட்ட உதவி கேக்குறேன் தம்பி”
- சுதா
iticulturals@gmail.com
கட்டுரையாளர், திருநங்கை செயற்பாட்டாளர்
(தொடரும்)