

மகளிர் உலகக் கோப்பைக் கால்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று ஸ்பெயின் மகளிர் அணி கோப்பையை வென்றது.
வெற்றிக் கொண்டாட்டத்தில் சிட்னியில் உள்ள அக்கார் மைதானமே அதிர்ந்தது. ஸ்பெயின் வீராங்கனைகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தனர். வாண வேடிக்கைகள் ஒருபக்கம் மிளிர்ந்துகொண்டிருக்க, உலகக் கோப்பை வழங்கும் தருணமும் வந்தது. ஸ்பெயின் மகளிர் அணி உலக சாம்பியனாக அறிவிக்கப்பட்டது. பதக்கங்களைப் பெற்றுக்கொண்ட ஸ்பெயின் மகளிர் அணியினர், ஸ்பெயின் கால்பந்துக் கூட்டமைப்பின் தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸிடம் வாழ்த்து பெறச் சென்றனர். அப்போதுதான் முகம் சுளிக்கவைக்கும் அந்த நிகழ்வு நடந்தது.
அத்துமீறல்
ஸ்பெயின் கால்பந்துக் கூட்டணியின் தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ், நட்சத்திர வீராங்கனை ஜென்னி ஹெர்மோசோவை அவரது அனுமதியின்றி முத்தமிட்டார். இதைச் சற்றும் எதிர்பாராத ஜென்னி அதிர்ச்சியுடனும் குழப்பத்துடனும் மேடையிலிருந்து வெளியேறினார். ஜென்னி மட்டுமல்லாமல் இன்னும் சில வீராங்கனைகளையும் லூயிஸ் முத்தமிடும் காட்சிகள் வெளியாகிக் கால்பந்து உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தின. ஸ்பெயின் நாட்டுப் பெண்கள் பலர் ரூபியேல்ஸின் செயலைக் கடுமையாகக் கண்டித்தனர்.
இந்த விவகாரம் ஸ்பெயினில் பூதாகரமாகக் கிளம்ப, அத்துமீறி நடந்துகொண்ட ரூபியேல்ஸ் பதவி விலக வேண்டும் என்று ஸ்பெயின் மகளிர் அணியினர் ஒன்றாகக் குரல் எழுப்பினர். ஆனால், மகளிர் அணியின் குற்றச்சாட்டுக்கு ஸ்பெயின் கால்பந்து நிர்வாகம் செவிசாய்க்கவில்லை. மாறாக, கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராகப் பொய்ச் செய்தி பரப்பப்படுவதாகவும், அந்த முத்தம் ஒருமித்த மனநிலையில்தான் வழங்கப்பட்டது எனவும் வாதாடியது.
சர்ச்சை குறித்து ரூபியேல்ஸ், “என்னால் ராஜினாமா செய்ய முடியாது. முத்தம் கொடுப்பதற்கு முன் ஜென்னியிடம் அனுமதி கேட்டேன். அவர் எனக்கு ஒப்புதல் அளித்தார். அது என் மகளுக்குத் தரும் முத்தத்தைப் போன்றது. போலிப் பெண்ணியவாதிகளால் நான் வேட்டையாடப்படுகிறேன். இதில் உண்மை இல்லை” என்று விளக்கம் அளித்தார்.
பதவி நீக்கம்
ரூபியேல்ஸ் விளக்கத்துக்குப் பின்னரும் ஸ்பெயின் மகளிர் அணி தங்களது முடிவில் உறுதியாக இருந்தது. உலகக் கோப்பையில் இடம்பெற்றிருந்த ஜென்னி உள்ளிட்ட 23 வீராங்கனைகள், ‘ரூபியேல்ஸ் கால்பந்துக் கூட்டமைப்பின் தலைவராகத் தொடர்ந்தால் தேசிய அணிக்காக இனி விளையாட மாட்டோம்’ எனக் கூட்டாக அறிவித்தனர்.
இந்த நிலையில், ரூபியேல்ஸ்க்கு ஆதரவாகப் பேசுமாறு ஸ்பெயின் கால்பந்து நிர்வாகம் தன்னையும் தனது குடும்பத்தாரையும் வற்புறுத்துவதாக ஜென்னி வெளிப்படையாக அறிவித்தார். பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் ஜென்னிக்கு இவ்விவகாரத்தில் ஆதரவளிக்க ஸ்பெயின் கால்பந்து நிர்வாகத்துக்கு நெருக்கடி முற்றியது. இதைத் தொடர்ந்து ரூபியேல்ஸ் ஸ்பெயின் கால்பந்துக் கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாகச் செயல்பட்ட ஸ்பெயின் மகளிர் அணிப் பயிற்சியாளர் ஜார்ஜ் வில்டாவும் நீக்கப்பட்டிருக்கிறார். இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக ரூபியேல்ஸ் மீது சட்டரீதியாகப் புகார் ஒன்றையும் ஜென்னி கொடுத்திருக்கிறார்.
பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக ஸ்பெயின் மகளிர் அணியுடன் ஜென்னி நடத்திய முன்னகர்வு அந்நாட்டுக் கால்பந்து அணியின் நிர்வாகத்தில் பெரிய மாற்றம் ஏற்படக் காரணமாகியிருக்கிறது. உலகக் கோப்பை வெற்றியை பார்சிலோனோ வீதிகளில் ரசிகர்கள் சூழப் பேருந்தில் ஊர்வலமாகச் சென்று கொண்டாட வேண்டியதற்குப் பதிலாக, ஸ்பெயின் மகளிர் அணியினர் பாலியல் துன்புறுத்தலை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், ஸ்பெயின் மகளிர் அணி நடத்தும் இப்போராட்டம் அவர்களது உலகக் கோப்பை வெற்றியைவிட முக்கியத்துவம் வாய்ந்தது.