

கேரள சாகித்திய அகாடமி விருது பெற்ற ‘ஆடு ஜீவிதம்’ (ஆசிரியர் பென்யாமின், தமிழில்: விலாசினி, எதிர் வெளியீடு) நாவல் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பை, மழையில் நனையும் மரங்களையும் குளிர்ச்சியான காற்றையும் ரசித்தபடியே எழுதுவது முரணாகத்தான் இருக்கிறது. குற்ற உணர்வு என்றுகூடச் சொல்லாம். சமீபத்தில் என்னைப் பாதித்த இந்த நாவலைப் பற்றி எழுதாமல் என் மன உணர்வு தீராது.
சவுதி பாலைவனத்தின் நடுவில் ஆடுகளை மேய்க்கும் நஜீப் மொஹம்மத், தன் சொந்த கிராமத்துக்குச் செல்ல நினைப்பதுதான் நாவலின் மையம். ‘யாருடைய விதியை என்னை அனுபவிக்க வைத்தாயோ அல்லாவே’ எனும்போதும் கொதிக்கும் பாலைவனத்தில் குடிக்கத் தண்ணீரோ நிழலோ இன்றி உயிரை மட்டும் வைத்துக்கொண்டு உயிர் தப்பித்தலே ஒரே நோக்கமாக இருக்கும்போதும் யாரையும் குறைசொல்லாத நபராக நஜீப் இருக்கிறார். அரேபியரை காரில் அனுப்பி நஜீப்பைக் காப் பாற்றியது அல்லாவே தான் என்று நஜீப் நம்புகிறார்.
மூன்று வருடங் களுக்கு மேலான தாகத்தை, வெக்கையை, பாலைவன வெயிலை இரண்டு பாட்டில் தண்ணீரால் குளிர வைக்க முடியுமா? ஹக்கீமை இழந்த நஜீப்பின் மனநிலையை, துயரத்தை விவரிக்க வார்த்தைகள் வலுவற்றுப் போகின்றன. உடன் இருந்தவனைக் கண் முன் இழப்பது எவ்வளவு துயரமானது. ஆனால், அதை எல்லாம் கடந்து செல்ல நஜீப்புக்குக் காரணம் இருக்கிறது. தன் மண்ணை மிதிக்க வேண்டும்; தன் மனைவியைப் பார்க்க வேண்டும்; குழந்தையைக் கொஞ்ச வேண்டும்.
இப்ராஹீமால் ஹக்கீமைக் காப்பாற்ற முடியவில்லை. அந்த மன வேதனையை வெளிப்படுத்தாமல் நஜீபையாவது காப்பாற்ற அவன் எவ்வளவு பாடுபட்டிருக்க வேண்டும். ஆடுகளுடன் அந்தக் கொடும் பாலைவனத்தில்தான் தன் வாழ்க்கை என்றானபோதும் எதிர்மறை எண்ணங்களுடனோ பிறரைக் குறைசொல்லியோ சலித்துக்கொண்டோ வாழவில்லை நஜீப். அவ்வளவு கொடுமையான வாழ்க்கையும் அல்லா கொடுத்தது என்றே ஏற்றுக்கொள்கிறது நஜீப்பின் எளிய மனது.
ஏன் ஆடுகளுக்கு மனிதர்களின் பெயர்களை, தனக்குத் தெரிந்தவர்களின் பெயர்களை வைக்க வேண்டும்? ஒன்றை இழந்து நிற்கும்போதுதானே அதன் அருமை தெரிகிறது. மனிதர்களே இல்லாத பாலைவனத்தில் ஆடுகள்தானே மனிதர்களாக உருமாறி அன்பை வெளிப்படுத்தவும் பெறவும் கிடைத்திருக்கிறார்கள். சலிப்பான சமயங்களில் மனிதர்களே இல்லாத இடத்துக்குப் போய்விடவேண்டும் என்று நமக்குத் தோன்றும்தான். ஆனால், சக மனிதர்கள் இல்லாமல் வாழ்வது சாத்தியமற்றது.
நெஞ்சை உருக்கும் நஜீப்பின் துயரம் மட்டுமே நிறைந்த பாலைவன வாழ்க்கையைப் புரிந்துகொள்வது சாத்தியமா என்று தெரியவில்லை. நம் உறவுகளோடு நம் மண்ணில் சுதந்திரமாக நினைத்தபடி வாழக் கிடைத்திருக்கும் வாழ்வு வரம் என்றே நஜீப்பின் 3 வருட 4 மாத 9 நாட்கள் உணர்த்துகின்றன.
- ஜெயந்தி ஜெயராமன், சேலம்.