

தமிழ் பேசும் சீனர்களில் இலக்கியாவும் ஒருவர். ‘தமிழை நேசிக்கிற சீனப் பெண்’ எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் இவர், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதைத் தன் இந்தியப் பயணங்களின்வழி உணர்த்துகிறார். ஐந்து நாள் பயணமாக சென்னை வந்தவர், தமிழ் நண்பர்களைச் சந்தித்துத் திரும்பியிருக்கிறார்.
சீனாவின் பெய்ஜிங் நகரைச் சேர்ந்த இவரது சீனப் பெயர் சுன் ட்ச்சிங். பெய்ஜிங்கில் உள்ள சீனப் பல்கலைக்கழகத்தில் 2007இல் இளநிலைப் படிப்பில் சேர்ந்தார். அப்போது தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படித்தார். “இந்தியக் கலாச்சாரத்தின் மீது எப்போதும் எனக்கு ஆர்வம் இருந்தது. குறிப்பாகத் தமிழையும் தமிழர்களைப் பற்றியும் அறிந்து கொள்ள ஆவல். அதனால், தமிழைத் தேர்ந்தெடுத்துப் படித்தேன்” என்கிறார் இலக்கியா. பல்கலைக்கழகத்தில் தமிழர்களும் தமிழ் பேசும் சீனர்களும் பேராசிரியராக வழிநடத்த, படிப்புக்கான நான்கு ஆண்டு காலத்தில் தமிழைப் பேசவும் எழுதவும் கற்றுக்கொண்டார் இலக்கியா.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஒன்பது மாதத் தமிழ் மொழிப் படிப்பில் 2013இல் சேர்ந்தார். “சீனாவில் படிக்கும்போதே தமிழில் பேசவும் எழுதவும் வேண்டும். அதனால், அப்போதே பேசத் தொடங்கிவிட்டேன்” என்று சொல்லும் இலக்கியா, பிறமொழிக் கலப்பின்றித் தமிழ் பேசுகிறார். “ஆமாங்க.. ஆமாங்க..” என்று தமிழைப் பிசிறின்றி அவர் உச்சரிப்பதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
சீனாவில் இருக்கிறவர், ஃபேஸ்புக் மூலம் தமிழர்களுடன் உரையாடுகிறார். அதற்காக 2020இல் ‘நமது வாழ்க்கை’ என்கிற பெயரில் ஃபேஸ்புக் கணக்கைத் தொடங்கினார். 10 லட்சம் பேர் இலக்கியாவை ஃபேஸ்புக்கில் பின்தொடர்கிறார்கள். சீனாவின் முக்கியமான இடங்கள், சந்தை, உணவு, பொருள்கள் எனப் பலவற்றையும் காணொளிகள் மூலம் அறிமுகப்படுத்துகிறார். சமீபத்திய சென்னைப் பயணத்தில் மெரினா கடற்கரை, வடபழனி, தி.நகர், சென்னைப் பல்கலைக்கழகம் எனச் சுற்றியவர், இந்தப் பயணத்தை உணவுச் சுற்றுலாவாகவும் கழித்ததாகக் குறிப்பிடுகிறார். வடபழனி முருகன் கோயிலில் நடைபெற்ற திருமணத்தைப் பார்த்தது அலாதியான அனுபவமாக இருந்தது எனச் சொல்லும் இலக்கியா, சென்னைத் தோசை தன் மனதை வென்றுவிட்டதாகச் சொல்கிறார். “எல்லாவற்றையும்விடத் தமிழர்களின் விருந்தோம்பலும் அன்புணர்வும் எனக்கு மிகவும் பிடித்தவை” எனச் சிரிக்கிறார்.
இலக்கியா தமிழ் இலக்கியங்களைப் படித்ததில்லை. தனக்குப் பரிசாகக் கிடைத்த திருக்குறள் புத்தகத்தைப் படித்தபோது அது தன்னை மிகவும் கவர்ந்துவிட்டதாகச் சொல்கிறார். “எல்லாரும் என்கிட்ட கேட்கும் கேள்வி, எப்படித் தமிழைத் தவறில்லாமல் பேசறீங்க என்பதுதான். தொடர் பயிற்சி இருந்தால் எதுவும் சாத்தியமே” எனப் புன்னகைக்கும் இலக்கியா, தன் தமிழ்ப் பேச்சால் அதை நிரூபிக்கிறார்.